உலகில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக சீனா விளங்கி வருகிறது. சீனாவின் பரப்பளவு தோராயமாக 96 லட்சம் சதுர கிலோமீட்டர்கள். ரஷியா மற்றும் கனடாவுக்கு அடுத்தபடியாக உலகின் மூன்றாவது பெரிய நாடு சீனாவாகும். இயற்கை வளங்களை அதிகமாகக் கொண்ட உலகிலேயே ஐந்தாவது மிகப்பெரிய நாடு சீனா. அரிய வகை கனிமங்கள் 60% முதல் 90% வரை சீனாவில் கிடைக்கின்றன.
மக்கள்தொகை நெருக்கடி, பொருளாதார மந்தநிலை, சுற்றுச்சூழல் பிரச்னைகள், வேலைவாய்ப்பு மற்றும் சமூக சமத்துவமின்மை, அமெரிக்காவால் ஏற்பட்டுள்ள சர்வதேச வர்த்தகப் பதற்றங்கள், அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியால் நாடுகளுக்கிடையே ஏற்பட்டுள்ள போட்டி மனப்பான்மை ஆகியவை சீனா எதிர்கொள்ளும் சவால்களாகும்.
உலகில் வல்லரசு நாடுகளில் ஒன்றாக உள்ள சீனா, அதிக மக்கள்தொகை கொண்ட நாடு என்ற பெருமையை நீண்ட காலமாக தக்க வைத்திருந்தது. தன்னிடமுள்ள மக்கள் செல்வத்தை கூரிய வாளாகவும், பாதுகாப்புக் கேடயமாகவும் சீனா கைக்கொண்டது. மனித வளத்தை, தேசிய சக்தியாக மாற்றி நாட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை மேற்கொண்டது.
சீனாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க சீன பெருஞ்சுவர் வடக்கு எல்லையில், கிழக்கில் ஷான்ஹைகுவான் முதல் மேற்கில் ஜியாயுகுவான் வரை 21,196 கி.மீ. நீளம் கொண்டது. சராசரி உயரம் 7.88 மீட்டர். இந்தப் பெருஞ்சுவரை சீனா, தன்னிடமுள்ள மனித வளத்தை மட்டுமே கொண்டு கட்டி எழுப்பி உலகை வியப்பில் ஆழ்த்தியது.
ஒருகாலத்தில் மஞ்சள் நதி சீனாவின் துயரம் என்று அழைக்கப்பட்டு வந்தது. காரணம், அந்த நதியில் பெருவெள்ளம் ஏற்படும் போதெல்லாம் பலலட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். தன்னிடமுள்ள மனித சக்தியை மூலதனமாகக் கொண்டு, மஞ்சள்நதியில் மாபெரும் பாசனத்திட்டங்களை சீனா உருவாக்கியுள்ளது. இப்போது, சீனாவின் துயரம் மஞ்சள் நதி அல்ல; இப்போது சீனாவின் பெருந்துயரம் சரிந்து வரும் அதன் மக்கள்தொகைதான்.
சீனா பல்லாண்டுகளாக ஒரே குழந்தை கொள்கையைக் கடைப்பிடித்து வந்தது. அதனால் ஏற்பட்ட விளைவுகள், திருமணம் மற்றும் குழந்தை பிறப்பு குறித்த அணுகுமுறையில் மாற்றம், பிறந்த குழந்தைகளை வளர்ப்பது தொடர்பான செலவுகள், குழந்தை பெறுதலில் மக்கள் ஆர்வம் காட்டாதது, பொருளாதார நெருக்கடி வேலைப் பளு, விலைவாசி உயர்வு ஆகியவையும் சேர்ந்து கொண்டன.
சீனாவில் 1949-ஆம் ஆண்டு மாவோ சே துங் தலைமையில் கம்யூனிஸ புரட்சிக்குப்பிறகு, மிகக்குறைந்த 5.63 சதவீத பிறப்பு விகிதம் கடந்த 2025-ஆம் பதிவாகியுள்ளது.
இதுசீன அரசுக்கு மிகப்பெரிய கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 1957-ஆம் ஆண்டு சீன நாட்டின் மக்கள்தொகை 60 கோடியாக இருந்தபோது, இது நாட்டின் மிகப்பெரிய பலம், அதே சமயத்தில் இவர்களுக்கு எவ்வாறு உணவு அளிக்கப் போகிறோம் என்பது தான் நமது கவலை என்றார் மாவோ சே துங். ஆனால், 1970-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சீனாவில் பஞ்சங்கள் மற்றும் பொருளாதார வீழ்ச்சிக்குப் பிறகு, சீனத் தலைவர்கள் மக்கள்தொகை வளர்ச்சி, நாட்டின் பொருளாதார, அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கு தடைக்கல்லாக விளங்குமோ என அஞ்சினர்.
கடந்த 2025-ஆம் ஆண்டில் சீனாவில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 79.2 லட்சம்; இது முந்தைய 2024-ஆம் ஆண்டைவிட 16.2 லட்சம், அதாவது 17% குறைவாகும். கடந்த 2024-இல் பிறப்பு விகிதம் சற்றே அதிகரித்தது. முன்னதாக, 2023 வரை தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக பிறப்பு விகிதம் சரிந்துகொண்டே வந்தது.
கடந்த 2023-இல் உலக மக்கள்தொகையில் இந்தியாவிடம் பின்தங்கிய சீனா, தற்போது தொடர்ச்சியாக, நான்காவது ஆண்டாக மக்கள்தொகை சரிவைச் சந்தித்து வருகிறது. 2025-ஆம் ஆண்டைய புள்ளிவிவரப்படி, அந்த நாட்டின் மக்கள்தொகை 140.4 கோடியாகக் குறைந்துள்ளது.
இந்த வீழ்ச்சி 2024-ஆம் ஆண்டைவிட வேகமானது என்று, சீனாவின் தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. கடந்த 2025-ஆம் ஆண்டில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக இருந்தது. வரும் ஆண்டுகளில் இது குறையும். காரணம், நாட்டில் தொழிலாளர்கள் எண்ணிக்கை இறுகி, பொருள்கள் உற்பத் திச் சங்கிலி பாதிப்படையும். குறைந்து வரும் மக்கள்தொகையுடன், சீனாவில் அதிகரிக்கும் முதியோர்களின் எண்ணிக்கையும் இணைந்து சீனாவுக்கு பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி வருகின்றன. தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைந்து, அதே நேரத்தில் சார்ந்து இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது ஆபத்து என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.
சீனாவில் தற்போது அறுபது வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை 32.3 கோடியாக உள்ளது. இது மொத்த மக்கள்தொகையில் 23 சதவீதத்தை எட்டியுள்ளது. அங்கு 2035-ஆம் ஆண்டுக்குள் அறுபது வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை 40 கோடியை எட்டும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அப்போது, மொத்த மக்கள்தொகையில் சுமார் மூன்றில் ஒரு பங்கு முதியவர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவில் வேலை செய்யும் வயதுடைய மக்கள்தொகை குறைந்து வருவது, அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேலும் சிக்கலாக்கும். அதாவது, நாட்டின் மக்கள்தொகையில் ஒரு சிறிய பகுதியினருக்கு ஓய்வூதியம், சுகாதாரத்துக்கு செலவழித்தால் சீனாவின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் பெரும் நெருக்கடியைச் சந்தித்து, பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் என உலகப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இதனால், எதிர்காலத்தில் பணியாளர்கள் குறைவு, உற்பத்தி குறைவு, ஓய்வூதியச் செலவு அதிகரிப்பு ஆகியவை நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும்.
குழந்தை பிறப்பை ஊக்குவிக்கும் வகையில், குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு நேரடி ஊக்கத்தொகை வழங்குதல், வரிச் சலுகைகள், திருமண சேவைகள் மற்றும் ஆரம்பப் பள்ளிகளுக்கு வரிவிலக்கு அளித்து ஆதரவு தருதல் போன்ற நடவடிக்கைகளை சீன அரசு எடுத்து வருகிறது.
சீனாவின் ஸ்டெம் கல்வி (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஒரு தேசிய முன்னுரிமையாகும். கடந்த பல ஆண்டுகளாக உழைப்பையே மூலதனமாகக் கொண்டு வளர்ந்த சீனா, இப்போது உயர் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஆதரவு அளித்து வருகிறது. அதனால், நுகர்வோர் சார்ந்த பொருளாதாரத்தில் உயர் தொழில்நுட்ப தானியங்கி கருவிகள், குறுகிய காலத்தில் உபரியாக உள்ள மனிதத் தொழிலாளர்களை ஏற்க மறுக்கிறது. எனவே சீனா, வளம் பெறுவதற்கு முன்பே வயதாகி வருகிறது' என்று நகைக்கின்றனர் உலகப் பொருளாதார நிபுணர்கள்.
சீனாவின் அதிபரும், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளருமான ஷி ஜின்பிங், மக்கள்தொகை மேம்பாட்டு உத்தியை மேம்படுத்துதல் மற்றும் குடும்பங்கள் மீதான பொருளாதார அழுத்தத்தைத் தணித்தல்' ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார்.
கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூலையில் ஐ.நா. வெளியிட்ட 'உலக மக்கள்தொகை கணிப்புகள் அறிக்கையின்படி, உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக 2023-ஆம் ஆண்டு இந்தியா முன்னேறியது. இந்தியாவில், 2023-ஆம் ஆண்டில் 143 கோடியாக இருந்த மக்கள்தொகை, 2054-இல் 169 கோடி என்ற உச்சத்தை அடையும். அதற்கு பிறகு இந்தியாவின் மக்கள்தொகை குறையத் தொடங்கி, நூற்றாண்டின் இறுதியான 2100-இல் 150 கோடியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 141 கோடியாக உள்ள சீனாவின் மக்கள்தொகை, 2054-இல் 121 கோடியாகக் குறையும்; நூற்றாண்டின் இறுதியில் மேலும் குறைந்து 63.3 கோடியாக அது இருக்கும் என்ற ஐ.நா. வின் அறிக்கை சீனாவை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஒரு நாடு எவ்வளவு செழிப்பாகவும் வளமாகவும் அறிவியல் தொழில்நுட்ப அறிவுத் திறனின் வானத்தை எட்டினாலும், மக்கள்தொகை குறைந்து கொண்டே போனால், வயதானவர்கள் அதிகமாகவும், இளைஞர்கள் வெகுசிலராகவும்தான் இருப்பார்கள். குழந்தைகள் குறைந்து விட்டால், பள்ளிகள், கல்லூரிகளின் தேவை குறைந்து விடும். எல்லா உற்பத்தியும் தானியங்கி கருவிகளையே நம்பியிருக்கும். நாட்டின் வரி வருவாய் குறைந்து விடும். இளைஞர்கள் வேறு நாடுகளுக்குச் சென்று குடியேறிவிட்டால் நிலைமை இன்னும் மோசமாகி விடும். இதனால், பல வேலைகளுக்கு ஆட்கள் பற்றாகுறை ஏற்படும்.
நாளை இளைஞர்கள் இல்லையென்றால் புதிய சிந்தனை, கடின உழைப்பு இருக்காது வயதானவர்கள் உதவிக்கு இளைஞர்களையே நம்பியிருப்பார்கள். ஆனால், போதுமான இளைஞர்கள் இருக்க மாட்டார்கள். இளம் தலைமுறையினரின் எண்ணிக்கை குறைந்தால், அது அந்நாட்டின் வருங்காலப் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும் சவாலாக இருக்கும்.
சீனாவைப் போன்றே, ஐரோப்பிய நாடுகளும் மக்கள்தொகை சரிவு பிரச்னையைச் சந்தித்து வருகின்றன. மருத்துவக் காரணங்களைக் தாண்டி, சுதந்திர மனப்பான்மை, பொருளாதார சுமை போன்ற பல பிரச்னைகள் எதிர்காலத்தில் இந்தியா உள்பட உலக நாடுகளில் ஏற்படலாம். எனவே, சீனாவின் பெருந்துயரம் மற்ற நாடுகளுக்கு ஒரு பாடத்தை அளித்திருக்கிறது. சீனா சந்தித்து வரும் பல்வேறு பிரச்னைகளில், மக்கள்தொகை வீழ்ச்சியையும் பெய்ஜிங் எவ்வாறு சமாளிக்கப் போகிறது என்பதை உலக நாடுகள் உற்று நோக்கி வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.