FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நடுப்பக்கக் கட்டுரைகள்

எல் நினோ: மீள்வது எப்படி?

எல் நினோ நிகழ்வு எவ்வளவு தீவிரமாக மாறும் என்பதைப் பற்றி...

Updated On : 14 ஜூலை 2026, 3:30 am IST
பகிர்:

பசிபிக் பெருங்கடல் உலகின் மிகப் பெரிய காலநிலை இயக்க மையமாக விளங்குகிறது. இப்போது, அந்தப் பெருங்கடலின் இதயத்தில் ஒரு சக்திவாய்ந்த மாற்றம் வேகமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. எல் நினோ எனப்படும் இந்த நிகழ்வு, வழக்கமான கடல் மற்றும் வளிமண்டலச் சமநிலையைக் குலைத்து, உலகளாவிய வானிலை முறைகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் திறன் கொண்டது.

சமீபத்திய கணக்குகள் மற்றும் செயற்கைக்கோள் தரவுகள், இந்நிகழ்வு அபூர்வமான வேகத்தில் தீவிரமடைந்து வருவதாகக் காட்டுகின்றன. சில விஞ்ஞானிகள் இதை வரலாற்றிலேயே மிக வலுவான சூப்பர் எல் நினோ-ஆக மாறக்கூடிய ஒரு நிலையாகக் கருதுகின்றனர். எல் நினோ என்பது, பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் கடல் மேற்பரப்பு நீரின் வெப்பநிலை இயல்பைவிட அதிகரிக்கும் ஓர் இயற்கை காலநிலை நிகழ்வு.

பொதுவாக, பசிபிக் பெருங்கடலில் கிழக்கிலிருந்து மேற்காக வீசும் வர்த்தகக் காற்றுகள் வெப்பமான நீரை ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவை நோக்கித் தள்ளுகின்றன. ஆனால், எல் நினோ காலங்களில், இந்தக் காற்றுகள் பலவீனமடைகின்றன அல்லது திசைமாறுகின்றன. இதன் விளைவாக வெப்பமான நீர் கிழக்குப் பகுதிகளுக்கு நகர்ந்து கடல் மேற்பரப்பில் வெப்பநிலை உயர்கிறது. இது சாதாரணமாக 0.5 டிகிரி செல்சியஸ் முதல் 2.5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்.

Advertisement

Advertisement

இந்த உயர்வு தொடர்ந்து ஐந்து மாதங்கள் நீடித்தால், அதிகாரபூர்வமாக எல் நினோ நிகழ்வு ஏற்பட்டதாக அறிவிக்கப்படுகிறது. அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகமும், உலக வானிலை அமைப்பும் இந்த நிகழ்வு ஏற்கெனவே தொடங்கியுள்ளதாக எச்சரித்துள்ளன. மேலும், பசிபிக் கடலின் ஆழப்பகுதியில் நீரின் வெப்பநிலை சராசரியை விட 6 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்துள்ளது என்பதும் கவலைக்குரியது. இந்த வெப்பச் சேர்க்கை வளிமண்டலத்துடன் தொடர்பு கொண்டு, உலகளாவிய வானிலை முறைகளை மாற்றும் ஆற்றல் கொண்டது.

வலுவான எல் நினோ ஆண்டுகள் பொதுவாக உலகின் மிக அதிக வெப்பநிலையைக் கொண்ட ஆண்டுகளாகப் பதிவு செய்யப்படுகின்றன. 1997-1998 மற்றும் 2015-2016 போன்ற ஆண்டுகளில் இது தெளிவாகக் காணப்பட்டது. சமீபத்திய 2023-2024 காலகட்டமும் புவி வெப்பமயமாதலுடன் சேர்ந்து உலக வெப்பநிலையை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றது. தற்போது உருவாகும் நிகழ்வு இதைவிட தீவிரமாக இருக்கலாம் என்ற அச்சம் விஞ்ஞானிகளிடையே நிலவுகிறது.

எல் நினோ நிகழ்வின் தாக்கங்கள் பலதரப்பட்டவை. முதன்மையாக மழைப்பொழிவில் பெரிய மாற்றங்கள் ஏற்படுகின்றன. சில பகுதிகளில் அதிக மழையும் வெள்ளப்பெருக்குகளும் ஏற்படும்; மற்ற பகுதிகளில் கடுமையான வறட்சி நிலவும். வேளாண்மைத் துறையில் இதன் தாக்கம் மிகவும் தீவிரமானதாக இருக்கும். மழை குறைபாடு காரணமாக அரிசி, கோதுமை, மக்காச்சோளம் போன்ற பயிர்களின் விளைச்சல் குறையும்.

நீர்வளங்களும் பாதிக்கப்படும்; அணைகள், ஏரிகள் மற்றும் நிலத்தடி நீர் அளவு குறைந்து குடிநீர் நெருக்கடி ஏற்படும். கடல் சூழலியல் அமைப்புகளும் இதனால் பாதிக்கப்படுகின்றன. மனிதர்களின் உடல்நலத்திலும் தாக்கம் காணப்படும்; வெப்ப அலைகள், சுவாச நோய்கள் மற்றும் தொற்று நோய்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

வரலாற்றில், 1997-1998 எல் நினோ தென் அமெரிக்காவில் பெரும் வெள்ளங்களையும், இந்தோனேசியாவில் காட்டுத் தீயையும் ஏற்படுத்தியது. 2015-2016 நிகழ்வும் உலகளாவிய வெப்பநிலையை அதிகரித்து பல சுற்றுச்சூழல் சிக்கல்களை உருவாக்கியது. இத்தகைய அனுபவங்கள், தற்போதைய நிகழ்வின் ஆபத்தைக் காட்டுகின்றன.

பசிபிக் கடல் பகுதியைச் சுற்றியுள்ள நாடுகள், குறிப்பாக அதிக பாதிப்புகளைச் சந்திக்கக்கூடும். அமெரிக்காவில் சில பகுதிகளில் கடுமையான மழை மற்றும் வெள்ளம் ஏற்படலாம்; ஆஸ்திரேலியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் வறட்சி மற்றும் காட்டுத்தீ அபாயம் அதிகரிக்கலாம்.

இதனால், பொருளாதார மற்றும் சமூக அமைப்புகள் பெரும் அழுத்தத்துக்கு உள்ளாகும். இதற்கு மாறான கட்டமாக 'லா நினா' நிகழ்வு உள்ளது. இதில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை குறைந்து, வர்த்தகக் காற்றுகள் வலுப்பெறுகின்றன. இந்தியாவில் இது பொதுவாக நல்ல மழைப்பொழிவை ஏற்படுத்தும். தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை அதிகரித்து பலத்த மழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.

பருவமழை பொய்த்துப் போவதற்கு எல் நினோவும் ஒரு முக்கியக் காரணம். இதன் விளைவுகள் சங்கிலித் தொடர் போன்றவை. மழை குறையும்போது பயிர்கள் கருகுகின்றன. உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டு, நாட்டின் பொருளாதாரமே ஆட்டம் காணும். ஏரிகளும் அணைகளும் வறண்டு, நிலத்தடி நீர் மட்டம் அதலபாதாளத்துக்குச் சென்று குடிநீருக்கே திண்டாடும் நிலை ஏற்படும்.

செயற்கைக்கோள் படங்கள், கடல் வெப்பநிலை, காற்றழுத்தம் எனப் பல ஆண்டுகால வரலாற்றை விரைந்து ஆய்வு செய்து, எல் நினோ வரப்போவதை மாதங்களுக்கு முன்பே செயற்கை நுண்ணறிவு துல்லியமாகக் கணித்து விடுகிறது. இவை உருவாக்கும் வானிலை மாதிரிகள் மிக வேகமாகவும் துல்லியமாகவும் வேலை செய்கின்றன.

எங்கு வெள்ளம் வரும், எங்கு வறட்சி ஏற்படும், எங்கு காட்டுத்தீ பரவும் என்பதை முன்கூட்டியே அரசுக்கு எச்சரித்து, மக்களைக் காப்பாற்ற செயற்கை நுண்ணறிவு வழிவகை செய்கிறது. விவசாயத்தில் எல் நினோவின் பாதிப்பைக் குறைக்க அது பல வழிகளில் உதவுகிறது. தற்போதைய எல் நினோ நிகழ்வு எவ்வளவு தீவிரமாக மாறும் என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. இதை எதிர்கொள்ள முன்கூட்டிய தயாரிப்பும், அறிவியல் அடிப்படையிலான திட்டமிடலும் காலத்தின் கட்டாயம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments