முகப்பு
நடுப்பக்கக் கட்டுரைகள்

கல்வி உதவித்தொகைகள் அறிவோம்!

உதவித்தொகைகள் இருக்கின்றன; ஆனால் விழிப்புணர்வு எங்கே?' என்ற கேள்விக்கான பதிலைத் தேட வேண்டிய நேரம் இது.

Updated On : 6 ஜூன் 2026, 6:02 am IST
கோப்புப் படம்
பகிர்:

-முனைவர் ராம் ராம்.ஜி

"சார், நான் மேல்படிப்பு படிக்க விரும்புகிறேன். ஆனால், வீட்டின் பொருளாதார நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. எனக்கு ஏதேனும் உதவித்தொகை கிடைக்குமா?' சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மாணவி என்னிடம் கேட்ட இந்தக் கேள்வி இன்னும் என் நினைவில் இருக்கிறது.

தென்னிந்தியாவின் ஒரு சிறிய நகரத்தைச் சேர்ந்த அவர், பள்ளி மற்றும் கல்லூரிக் கல்வியில் தொடர்ந்து சிறந்த மதிப்பெண்கள் பெற்றிருந்தார். குடும்பத்தின் நிதிநிலை அவரது கல்விப் பயணத்துக்குத் தடையாக இருந்தது. அந்த நேரத்தில், அவருக்காக உதவித்தொகை வாய்ப்புகளைத் தேட ஆரம்பித்தேன்.

Advertisement

Advertisement

அப்போதுதான் தேசிய உதவித்தொகை இணையதளம் (என்எஸ்பி) குறித்து விரிவாக அறிந்தேன். தேவையான ஆவணங்களைத் தயாரித்து, விண்ணப்பிக்க வழிகாட்டினேன். சில மாதங்களுக்குப் பிறகு அவர் உதவித்தொகை பெற்றதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இந்தியாவில் மாணவர்களுக்காக ஏராளமான உதவித்தொகைகள் உள்ளன. இந்திரா காந்தி ஒற்றைப் பெண் குழந்தை உதவித்தொகை, சென்ட்ரல் செக்டார் ஸ்காலர்ஷிப் ஸ்கீம் (சிஎஸ்எஸ்எஸ்), யூஜிசி உதவித் திட்டங்கள், ஏஐடிஇ கல்வி உதவித்தொகைகள், மாநில அரசுகளின் கல்வி நிதி உதவிகள், தனியார் அறக்கட்டளைகளின் உதவித்தொகைகள் என நூற்றுக்கணக்கான திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் சில திட்டங்கள் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 20,000 முதல் ரூ. 80,000 வரை அல்லது அதற்கும் அதிகமாக நிதியுதவி வழங்குகின்றன.

குறிப்பாக, ஏஐசிடிஇ அங்கீகரிக்கப்பட்ட தொழில்முறை படிப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கணிசமான உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன.

அகில இந்திய உயர் கல்வி ஆய்வு (ஏஐஎஸ்ஹெச்இ) அறிக்கையின்படி, இந்தியாவில் உயர் கல்வியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த பத்து ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. 2014-15-ஆம் ஆண்டில் 3.42 கோடியாக இருந்த மாணவர் சேர்க்கை, 2021-22-ஆம் ஆண்டில் 4.33 கோடியாக உயர்ந்துள்ளது. இது சுமார் 27% வளர்ச்சியாகும். பெண்களின் கல்வி பங்கேற்பும் கணிசமாக உயர்ந்துள்ளது. 2021-22-ஆம் ஆண்டில் மட்டும் 2 கோடிக்கும் அதிகமான பெண்கள் உயர் கல்வி பயின்றுள்ளனர்.

உயர் கல்வியில் பெண்களின் பங்கேற்பு விகிதம் 1.01}ஆக உள்ளது. இது ஆண்களை விட சற்றே அதிகம். அதேநேரத்தில், இந்தியாவின் உயர் கல்வி மொத்த சேர்க்கை விகிதம் (ஜிஇஆர்) 28.4% மட்டுமே உள்ளது.

அதாவது, உயர் கல்வி பெறத் தகுதியான 18 முதல் 23 வயதுக்குட்பட்ட இளைஞர்களில் 70%}க்கும் அதிகமானோர் இன்னும் உயர் கல்வி அமைப்புக்கு வெளியே உள்ளனர். பட்டியலினத்தவர்களின் ஜிஇஆர் 25.9%, பழங்குடியின மாணவர்களின் ஜிஇஆர் வெறும் 21.2%-ஆக

உள்ளது. பொருளாதார மற்றும் சமூக பின்தங்கிய நிலை இன்னும் கல்விக்கான முக்கியத் தடையாகவே உள்ளது என்பதை இந்த எண்ணிக்கைகள் வெளிப்படுத்துகின்றன.

தேசிய உதவித்தொகை தளம் (என்எஸ்பி) வழியாக ஆண்டுதோறும் பல லட்சம் மாணவர்கள் விண்ணப்பிக்கின்றனர். ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. இருப்பினும், கல்லூரிகளில் மாணவர்களுடன் நடத்தப்படும் கலந்துரையாடல்களில், இந்த உதவித்தொகை இருப்பதே பலருக்கும் தெரியவில்லை எனத் தெரிய வந்தது. இது வெறும் தகவல் பற்றாக்குறை அல்ல; இது ஒரு சமூக இழப்பு. ஒரு திறமையான மாணவர் உதவித்தொகை குறித்து தெரியாமல் கல்வியைக் கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டால், அது அந்த மாணவரின் இழப்பு மட்டுமல்ல; நாட்டின் மனிதவள இழப்பும் ஆகும்.

இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் சமூக வலைதளங்கள், இணையம், செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகின்றனர். இருப்பினும், கல்வி உதவித்தொகை குறித்த தகவல்கள் அவர்களை முழுமையாகச் சென்றடைவதில்லை. காரணம், அந்தத் தகவல்கள் பல்வேறு இணையதளங்களில் சிதறிக் கிடக்கின்றன. பல மாணவர்களுக்கு விண்ணப்ப நடைமுறைகளே சிக்கலாகத் தோன்றுகின்றன. இதற்குத் தீர்வாக ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் உதவித்தொகை ஆலோசனை மற்றும் வழிகாட்டல் மையங்கள் உருவாக்கப்பட வேண்டும். மாணவர்கள் கல்லூரியில் சேரும் முதல் நாளிலிருந்தே உதவித்தொகை குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு பருவத் தொடக்கத்திலும் உதவித்தொகை முகாம்கள் நடத்தப்பட வேண்டும். பள்ளி நிலை முதலே மாணவர்களுக்கு இந்தத் தகவல்கள் கொண்டு செல்லப்பட வேண்டும். குறிப்பாக, கிராமப்புற மற்றும் முதல் தலைமுறை கல்லூரி மாணவர்களுக்கு தனிப்பட்ட வழிகாட்டல் அவசியமாகும். ஏனெனில், அவர்களிடம் திறமை குறைவாக இல்லை; தகவல் குறைவாக உள்ளது. உதவித்தொகை என்பது வெறும் பண உதவி அல்ல; அது ஒரு மாணவரின் தன்னம்பிக்கை. ஒரு குடும்பத்தின் நம்பிக்கை; ஒரு தலைமுறையின் முன்னேற்ற வாய்ப்பு. பொருளாதார பின்னடைவு காரணமாக கல்விக் கனவுகள் சிதறாமல் காப்பாற்றும் பாதுகாப்பு வலையமைப்பு.

இந்தியா 2035-ஆம் ஆண்டுக்குள் உயர் கல்வி சேர்க்கை விகிதத்தை 50%-ஆக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கை அடைய புதிய கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மட்டுமல்ல, கல்வி உதவித்தொகைகள் குறித்த விழிப்புணர்வும் அவசியம். உதவித்தொகைகள் ஏற்கெனவே உள்ளன. நிதியும் ஒதுக்கப்படுகிறது. ஆனால், அந்தத் தகவல்கள் தேவைப்படும் மாணவர்களைச் சென்றடைய வேண்டும்.

ஒரு மாணவரின் வாழ்க்கையை மாற்றக்கூடிய உதவித்தொகை, தகவல் இல்லாத காரணத்தால் பயன்படுத்தப்படாமல் போகக் கூடாது. ஒரு நாட்டின் எதிர்காலம் அதன் இளைஞர்களின் கல்வியில் உள்ளது. அந்த கல்வியை அனைவருக்கும் அணுகக்கூடியதாக மாற்ற உதவித்தொகைகள் முக்கியக் கருவியாக இருக்கின்றன. எனவே, "உதவித்தொகைகள் இருக்கின்றன; ஆனால் விழிப்புணர்வு எங்கே?' என்ற கேள்விக்கான பதிலைத் தேட வேண்டிய நேரம் இது. அந்த இடைவெளியை நிரப்ப முடிந்தால், ஆயிரக்கணக்கான மாணவர்களின் கனவுகளுக்கு நாம் சிறகுகள் கொடுத்ததாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.