மாற்றமே வெற்றிக்கான பயணம்!
நிச்சயம் நடக்கும் என்று எதிர்பார்த்து நாம் காத்திருந்த மாற்றங்களை விட, நாம் நினைத்தே பார்க்காத மாற்றங்களும், கற்பனையிலும் காண விரும்பாத மாற்றங்களும் நடைபெறுவதைப் பற்றி...
நம்மைச் சுற்றி கணந்தோறும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. நிச்சயம் நடக்கும் என்று எதிர்பார்த்து நாம் காத்திருந்த மாற்றங்களை விட, நாம் நினைத்தே பார்க்காத மாற்றங்களும், கற்பனையிலும் காண விரும்பாத மாற்றங்களும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இப்படிப்பட்ட மாற்றங்களை எதிர்கொள்ளும் பக்குவத்தை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். காரணம், மாற்றம் ஒன்றே மாறாதது!
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. யாருமே நினைத்துப் பார்க்க முடியாத வெற்றியைப் பெற்று, புதிய ஆட்சி அமைந்திருக்கிறது. மக்கள் தேர்ந்தெடுத்த மாற்றம் இது. ஜனநாயகத்தில் இதுபோன்ற மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. இந்த மாற்றங்களை முழு மனதுடன் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை எல்லோருக்கும் வேண்டும். நான் மாறவே மாட்டேன் என்று பழைமைவாதம் பேசிக் கொண்டிருப்பவர்கள், நடைமுறை வாழ்க்கையுடன் ஒத்துப்போக விரும்பாதவர்கள்.
தொலைபேசிகள் இருந்த இடத்தை இப்போது கைப்பேசிகள் ஆக்கிரமித்திருக்கின்றன. தகவல் தொழில்நுட்ப உலகில் ஏற்பட்ட மிகப் புரட்சிகரமான மாற்றம் இது. நாம் செல்லுமிடமெல்லாம் நம்முடனே எடுத்துச்சென்று, உலகத்தின் எந்த மூலையில் இருப்பவருடனும் பேச முடிகிற கைப்பேசி நிகழ்த்தியிருப்பது மாபெரும் மாற்றமல்லாமல் வேறு என்ன?
Advertisement
Advertisement
துவைக்கிற கல்லில் மாங்குமாங்கென்று துவைத்த காலம் போய், சலவை இயந்திரத்தின் உதவியுடன் விரைந்து துணிகளை வெளுக்க முடிகிறது. விறகைப் பயன்படுத்தி அடுப்பு மூட்டி சமைத்து, புகையால் கண்கள் புண்ணாகிப் போன காலம் ஒன்றிருந்தது; இன்று சாமானியர்களின் சமையலறையிலும் எரிவாயு சிலிண்டர்கள் கோலோச்சுகின்றன.
மின்சார அடுப்பின் உதவியால் மிக விரைவில் சமைத்துவிட முடிகிறது. சிந்தனையில், செயலில், பழக்கவழக்கங்களில் விநாடிகள்தோறும் மனிதர்கள் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். வேட்டி- சட்டைதான் தமிழக அரசியல்வாதிகளின் அடையாளம் என்று அறியப்பட்ட காலம் இப்போது மலையேறிவிட்டது.
பேண்ட்-சட்டை, கோட் சூட் என்று நம் மதிப்பை உயர்த்திக் காட்டும் உடைகளை நம்மை ஆட்சி செய்வோர் அணியத் தொடங்கிவிட்டனர். ஒருகாலத்தில் பாவாடை தாவணி, சேலை மட்டுமே அணிந்துவந்த பெண்கள், இப்போது சுடிதார், ஜீன்ஸ், ஸ்கர்ட், பேன்ட், சட்டை என்று நவநாகரிக மங்கையராக வலம் வருகிறார்கள்.
தனி நபர்களின் தோற்றத்தில் ஏற்பட்ட வரவேற்கத்தக்க மகத்தான மாற்றம் இது. முன்பெல்லாம் தேர்தல் என்றால், சுவரொட்டிகள், துண்டுச் சீட்டுகள் விநியோகம், செய்தித்தாள் விளம்பரங்கள் என்று அரசியல் கட்சிகளின் வாக்குறுதிகள் அனல் பறக்கும். இப்போது, 'ரீல்ஸ்' மூலம் தங்கள் கருத்துகளை கூறுகின்றனர். இதற்கான செலவு மிகவும் குறைவு. பலரையும் விரைவில் சென்று சேர்ந்துவிடுகிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை.
மனிதர்களின் அகக் கண்களைத் திறக்கும் கல்வித் துறையிலும் ஓசையின்றி பல்வேறு மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன. ஆரம்பப் பள்ளிப் பாடங்களை ஆசிரியர்கள் கரும்பலகையில் எழுதிப் போட்டு கற்பித்த காலம் போய், ஒளியும்-ஒலியுமாக விரியும் ஸ்மார்ட் (திறன்மிகு) வகுப்பறைகளில் மாணவர்கள் ஆர்வத்துடன் கல்வி கற்கின்றனர். பதின்பருவப் பிள்ளைகளின் கண்களில் அறிதிறன்பேசிகளைக் காட்டாமல் மறைத்துவைத்த காலம் மலையேறிப் போய்விட்டது.
இத்தகைய மாற்றங்கள் சரியா- தவறா? என்பது அவரவர் பார்வையைப் பொருத்தது; அவரவர் அணுகுமுறையைப் பொருத்தது. நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இத்தகைய மாற்றங்கள் நம்மைச்சுற்றி நிகழ்ந்துகொண்டேதான் இருக்கின்றன. ஒரு காலத்தில் தீவிர நாத்திகராக இருந்த கவிஞர் கண்ணதாசன், காலப்போக்கில் ஆத்திகராக மாறினார். 'அர்த்தமுள்ள இந்து மதம்' படைத்தார். கண்ணன் மேல் காதலாகி உருகினார்.
அவரது மாற்றம் குறித்து பத்திரிகை நிருபர் ஒருவர் கேட்டபோது, 'இந்த மாற்றமும் அந்த இறைவனின் சித்தமல்லவா?' என்று குறிப்பிட்டாராம். தீய செயல்களைச் செய்து பழிச்சொல்லுக்கு உள்ளான அருணகிரியார் மீது பெருங்கருணை கொண்டு முருகப்பெருமான் அவரைஆட்கொண்டதும், அவரது உள்ளத்தின் அழுக்குகள் மறைந்தன. அருணகிரிநாதருக்குள் நிகழ்ந்த மாற்றமே, இந்தச் சமுதாயத்தில் ஆன்மிக ஒளி பரவக் காரணமாக இருந்தது. வால்மீகி என்ற கள்வனின் உள்ளத்தைப் புரட்டிப் போட்ட ராம நாமம், அவரை மகத்தான முனிவராக்கியது. உலகம் புகழும் ராமாயணம் என்னும் இதிகாசம் உருவாகக் காரணமாக அமைந்தது. உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த தேசிய வாலிபால் விளையாட்டு வீராங்கனையான அருணிமா சின்ஹா ரயில் கொள்ளையர்களால் ஓடும் ரயிலிலிருந்து தூக்கி வீசப்பட்டார்.
அந்த விபத்தில் அவரது ஒரு கால் துண்டிக்கப்பட்டது. வலிகள் நிறைந்த மருத்துவமனை வாசம், துயரம் மிகுந்த நாள்கள் என்று மாதங்கள் பல கடந்துபோயின. வாழ்க்கையே முடிந்துபோனதாக நினைத்திருந்த நேரத்தில், உள்ளத்தின் உறுதியால் 'பீனிக்ஸ்' பறவை போல மீண்டெழுந்தார் அருணிமா. வாலிபால் விளையாட்டைத் துறந்து மலையேற்றப் பயிற்சியில் சாதிக்க முடிவு செய்தார்.
இயற்கையான ஒற்றைக் காலுடன் செயற்கைக் காலையும் பொருத்திக் கொண்டு கடுமையான மலையேற்ற பயிற்சிகளில் ஈடுபட்டார். இரண்டே ஆண்டுகளில் எவரெஸ்ட் சிகரத்தை எட்டினார். எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் பெண் மாற்றுத் திறனாளி என்ற பெருமையைப் பெற்றார். தனி மனிதர்களின் மனங்களில் ஏற்படும் மாற்றங்களே சமூக வளர்ச்சிக்கு வித்திடுகின்றன. மாற்றம் என்பது மாறாதது மட்டுமல்ல, அதுவே நிலையானது; நிரந்தரமானது. மாற்றங்களை ஏற்காதவர்கள், இந்த சமூகத்திலிருந்து வெகு தொலைவு விலகிப் போகிறார்கள். மாற்றங்களை இருகரம் நீட்டி வரவேற்போம்; அதுதான் வளர்ச்சிக்கான பாதை; அதுதான் வெற்றிக்கான பயணம்.