குறையும் காசநோய் பாதிப்பு
மார்ச் 24-ஆம் தேதி அறிவித்ததையடுத்து, அன்றைய தினமே (மார்ச் 24) உலக காசநோய் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருவதைப் பற்றி...
காசநோய் 19-ஆம் நூற்றாண்டில் கொடிய நோய்களில் ஒன்றாக இருந்தது. காசநோய்க்கு மருந்து கண்டறிப்படாத காலங்களில், அந்த நோயால் பாதிக்கப்பட்ட ஏராளமானோர் உயிரிழந்தனர். ஜெர்மனியைச் சேர்ந்த ராபர்ட் காஹ் என்பவர் காசநோயை ஏற்படுத்தும் மைக்கோ பாக்டீரியா எனும் கிருமியைக் கண்டறிந்து அறிவித்தார். காசநோய் என்பது காற்றின் மூலம் பரவக் கூடிய நோயாகும். இதை அவர் மார்ச் 24-ஆம் தேதி அறிவித்ததையடுத்து, அன்றைய தினமே (மார்ச் 24) உலக காசநோய் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இருமல், காய்ச்சல், உடல் எடைக் குறைவு போன்றவை காசநோயின் முக்கிய அறிகுறிகளாக உள்ளன. மேலும், இன்னொரு வியப்பான செய்தி என்னவென்றால், மனித உடலில் நகம், முடி இரண்டைத் தவிர மற்ற இடங்களில் காசநோயானது பாதிப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. அன்றைய காலகட்டத்தில் காசநோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சி.முத்து பிரிட்டனில் மருத்துவம் பயின்றவர். காசநோயில் நிபுணத்துவம் பெற்றவர்.
மகாத்மா காந்தியின் நெருங்கிய நண்பர் ஆவார். கணித மேதை ராமானுஜன் காசநோயால் பாதிக்கப்பட்டபோது அவருக்கு சிகிச்சை அளித்தவர் மருத்துவர் சி.முத்து. சென்னை தாம்பரத்தில் 1928-ஆம் ஆண்டு 12 பேர் சிகிச்சை பெறக்கூடிய மருத்துவமனையை மருத்துவர் சி.முத்து ஏற்படுத்தினார்.
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, பல்வேறு கட்டமைப்புக்குப் பின்னர் இன்று 750 படுக்கை வசதியுடன் மருத்துவமனை இயங்கி வருகிறது. அந்த மருத்துவமனையே தற்போது 'தாம்பரம் சானடோரியம் நெஞ்சக நோய் மருத்துவமனை' என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. மேலும், ஆசியாவில் காசநோய்க்கு சிகிச்சையளிக்கும் மிகப் பெரிய அரசு மருத்துவமனையாகத் திகழ்கிறது.
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, சென்னை தாம்பரம் சானடோரியம், மதுரை தோப்பூர் மருத்துவமனை, நாகர்கோவில் அருகே உள்ள ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை போன்ற மருத்துவமனைகளில் காச நோயாளிகள் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்தனர். பின்னர், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் போன்றவற்றின் மூலமாக தற்போது நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் 1962-ஆம் ஆண்டு தேசிய காசநோய் திட்டம் ஏற்படுத்தப்பட்டதன் நோக்கமே, காச நோயாளிகளை ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சையளிப்பதாகும். இதில் சில குறைபாடுகள் காணப்பட்டன. எனவே, 1997-ஆம் ஆண்டு திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டம் என்ற பெயரில் சீரமைக்கப்பட்டது.
இதன் முக்கிய நோக்கம் காச நோயாளிகளை காசநோய் பணியாளர்களின் நேரடிப் பார்வையில் மாத்திரை உட்கொள்ளச் செய்வது ஆகும். இந்ததத் திட்டம் பெருமளவில் வெற்றி பெற்றது. பின்னர், மீண்டும் 2020-ஆம் ஆண்டு 'தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம்' என்று பெயர் மாற்றப்பட்டது.
1950-ஆம் ஆண்டுகளில் காசநோய்க்கு இரண்டாண்டுகள் வரை சிகிச்சை தேவைப்பட்டது. ஆனால், தற்போது நவீன அறிவியல் கண்டுபிடிப்பின் காரணமாக காச நோய்க்கான சிகிச்சை 168 நாள்களாக குறைந்துள்ளது. காசநோய் காற்றின் மூலமாக பரவுகின்றன என்ற காரணத்தால், காசநோய் பாதித்த நபரின் வீட்டில் உள்ள நபர்களுக்கும் காசநோய் பரிசோதனை செய்யப்படுகிறது. நோயாளி குணமான பின்னரும் கூட இரண்டாண்டுகள் காசநோய் பணியாளர்களின் நேரடிக் கண்காணிப்பில் காசநோயாளிகள் இருப்பார்கள். இவற்றின் நீட்சியாக தற்போது காசநோய் படிப்படியாகக் குறைந்து வருகிறது.
பொதுவாக, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் எய்ட்ஸ் நோயாளிகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், புகைபிடித்தல், மதுப் பழக்கம் உள்ளவர்கள் போன்றோருக்கு காசநோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது. காசநோயால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் இருமும் போது, காசநோயை ஏற்படுத்த கூடிய 3,000 நீர்த் திவலைகள் வெளிப்படுகின்றன. மேலும், தும்மல் ஏற்படும் போது 4,000 நீர்த் திவலைகள் வெளிப்படுகின்றன.
இதன் மூலம் அருகில் உள்ள நபர்களுக்கு ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதாக காசநோய் பரவுகிறது. ஆகவே, காசநோய் பாதிக்கப்பட்ட நபர்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிவது மிகவும் அவசியம். 2015-ஆம் ஆண்டு இந்தியாவில் காசநோய் இறப்பு விகிதம் ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு 28-ஆக இருந்தது. இது 2024 -ஆம் ஆண்டு ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு 21 என்ற அளவில் குறைந்துள்ளது. இதுவே 2015-ஆம் ஆண்டில் ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு 237-ஆக இருந்தது. 2024-ஆம் ஆண்டு ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 187 நபர்கள் மட்டுமே கண்டறியப்பட்டனர்.
காசநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு பல நல்ல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது, நிக்சய் மித்ரா எனும் பெயரில் பொருளாதாரத்தில் பின் தங்கிய நோயாளிகளைத் தத்தெடுத்து காசநோய் சிகிச்சை காலம் முழுவதும் அக் குடும்பத்துக்குத் தேவையான மளிகைப் பொருள்கள், ஊட்டச்சத்து பொருள்களை இலவசமாக வழங்கி வருகிறார்கள்.
காசநோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் புரதச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வதற்காக, சிகிச்சையில் உள்ள நபர்கள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.1,000 அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. 2025-ஆம் ஆண்டு இந்தியாவில் மொத்தம் 26,34,185 நபர்கள் காசநோயால் பாதிக்கப்பட்டனர். போலியோவை ஒழித்ததைப் போல காசநோயையும் ஒழிப்போம்; காசநோயில்லாத இந்தியாவை உருவாக்குவோம்.
நாளை உலக காசநோய் விழிப்புணர்வு தினம்!