FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நடுப்பக்கக் கட்டுரைகள்

புனிதம் காக்க வேண்டும் புதிய அரசு !

பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பில் ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலங்களை மீட்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Updated On : 18 மே 2026, 6:39 am IST
முதல்வர் விஜய் - IANS
பகிர்:

ஒட்டுமொத்த இந்தியாவைப்போன்றே தமிழகத்திலும் தமிழர்களின் வாழ்வியலில் கோயில்கள் பின்னிப் பிணைந்தவையாகும். தமிழக அரசின் இலச்சினையில் கோயில் ராஜகோபுரம் இடம்பெற்றுள்ளதே இதற்கு சான்றாகும். தமிழ்நாட்டின் எல்லா குக்கிராமங்களிலும் கோயில்கள் உள்ளன.

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில், சிதம்பரம் நடராஜர் கோயில், தஞ்சை பெரிய கோயில், கங்கை கொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோயில், சென்னை காளிகாம்பாள் கோயில், கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில், வைத்தீஸ்வரன் கோயில் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கோயில்கள் பலப்பல நூற்றாண்டுகளாக நமது பாரம்பரியத்தைப் பறைசாற்றி கம்பீரமாக உயர்ந்து நிற்கின்றன. அந்தக் காலத்தில் கோயில்களைக் கட்டிய மன்னர்கள் அந்தக் கோயில்களில் பூஜைகள் நடைபெறுவதற்கும், பராமரிப்புக்காகவும் நூற்றுக்கணக்கான கிராமங்களை எழுதிவைத்தனர்.

இன்றும்கூட தமிழகத்தில் பொதுமக்களின் பக்தி அதிகரித்து வருவதற்கு பல கோயில்களில் கூடும் கூட்டமே சாட்சி. திருவண்ணாமலை பெüர்ணமி கிரிவலத்தில் ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கானோர் நடந்து செல்கின்றனர். இதில் பங்கேற்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. திருச்செந்தூர் சூரசம்ஹாரத்தின்போதும் மற்ற திருவிழா காலங்களிலும் கூடும் கூட்டம் பிரமிக்க வைப்பதாக உள்ளது.

Advertisement

Advertisement

வெயில் கடுமையாக சுட்டெரிக்கும் போது மதுரையில் நடைபெறும் சித்திரைத் திருவிழாவில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம், தேரோட்டம், கள்ளழகர் திருவிழா போன்றவற்றில் பல லட்சம் பேர் கலந்து கொள்கின்றனர்.

ஸ்ரீரங்கம் தொடங்கி கிட்டத்தட்ட எல்லா ஊர்களிலும் தேரோட்டம் நடைபெறுகிறது. இவையெல்லாவற்றுக்கும் சிகரம் வைப்பதுபோன்று, விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் மாதாமாதம் அமாவாசை தினத்தில் நள்ளிரவு 12 மணிக்கு மேல் நடைபெறும் ஊஞ்சல் உற்சவத்தில் லட்சக்கணக்கானோர் பங்கேற்று அம்மனை பக்தி பரவசத்துடன் வழிபடுகின்றனர்.

இது ஒருபக்கம் இருந்தாலும் கோயில்களில் நடைபெறும் முறைகேடுகள் குறித்த செய்திகள் ஆன்மிக அன்பர்களை வருத்தத்தில் ஆழ்த்துகின்றன. மிகவும் பிரசித்தி பெற்ற ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் இலவச லட்டு பிரசாதத்தை விற்றதிலும், லட்டு தயாரிக்க மூலப்பொருள்கள் வாங்கியதிலும் ரூ.3.40 கோடி முறைகேடு செய்ததாக 6 ஊழியர்கள் சில நாள்களுக்கு முன்னர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த ஒருக்காமலை வரதராஜ பெருமாள் கோயில் உண்டியல் பணத்தை திருடியதாக சேலம் சுகவனேஸ்வரர் கோயில் உதவி ஆணையர் அம்சா மீது கடந்த ஏப். 1-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கையை எண்ணும்போது, ரூ.35 ஆயிரம் மதிப்பிலான வெளிநாட்டுப் பணத்தாள்களை திருடிய ஊழியர் கடந்த பிப். 26}ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் கோயிலில் உண்டியல் காணிக்கையை எண்ணியபோது, பணம், தங்கக் காசுகளை கோயில் செயல் அலுவலரே திருடி உள்ளார். திருத்தணி முருகன் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணியபோதும் இதுபோன்ற திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

இதைத் தவிர, கோயிலுக்கு என்று மன்னர்களும், நல் உள்ளம் கொண்டவர்களும் எழுதிவைத்த பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பொது மக்களாலேயே ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. ஸ்ரீரங்கம் கோயில் நிலத்தில் ஆயிரக்கணக்கானோர் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.

இந்தப் பிரச்னை பல பத்தாண்டுகளாக நீடித்து வருகிறது. இதில் அங்கு வசிப்போர் 29 பேர் தொடர்ந்த வழக்கில், "ஸ்ரீரங்கம் கோயில் நிலத்தில் குடியிருப்போரின் அடிமனைகள் அரங்கனுக்கே சொந்தமானவை. அதில் வசிப்போர் அடிமனைக்கு சொந்தம் கொண்டாட முடியாது. இதில் வீடு கட்டியோர் மூன்று மாதங்களில் காலி செய்து, காலி மனையாக கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும். இந்த இடங்களுக்கு கடந்த காலத்தில் வழங்கிய பட்டாக்களையும் ரத்து செய்ய வேண்டும்' என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கடந்த பிப். 20}ஆம் தேதி தீர்ப்பு வழங்கினார்.

புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் விஜய், எதிர்மறை விமர்சனங்கள் வரும் என்று தெரிந்திருந்தும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த ஏப். 28}ஆம் தேதி அதிகாலையில் விஸ்வரூப தரிசனத்தில் முருகனை வேலுடன் சென்று வழிபட்டார். இது ஆன்மிக அன்பர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

முதலில், இந்து சமய அறநிலையத் துறையில் உள்ள கருப்பு ஆடுகள் களையெடுக்கப்பட வேண்டும். கோயில்களில் கடந்த பல பத்தாண்டுகளாக அறங்காவலர் குழுவில் உள்ளூரில் செல்வாக்குள்ள அரசியல்வாதிகளே இடம்பெற்று வந்துள்ளனர். கோயில்கள் "அரசியல் கொள்ளையரின் கூடாரங்களாக' மாறுவது தடுக்கப்பட வேண்டும்.

பதவியேற்பு நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் விஜய் "மக்கள் பணத்தில் கைவைக்க மாட்டேன்' என்று உறுதி கூறினார். அதேபோன்று, பக்தி உள்ளவர்களும் இறைவனுக்கு மக்கள் அளிக்கும் காணிக்கையில் கை வைக்காத நேர்மையாளர்களும் அறங்காவலர் குழுக்களில் இடம்பெறுவதை முதல்வர் உறுதி செய்ய வேண்டும்.

பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பில் ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலங்களை மீட்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்னும் இந்து சமய அறநிலையத் துறைக்கு அமைச்சர் நியமிக்கப்படவில்லை; இறை நம்பிக்கை உள்ள, கோயில்களின் புனிதத்தையும் அதன் ஆகம விதிப்படியான சம்பிரதாயங்களையும், மனிதர்களின் நலன்களையும் பேணும் ஒருவர் புதிய அரசால் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்ப்போம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments