FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

'சமுத்ர மந்தன்' திட்டம்-காத்திருக்கும் சவால்கள்!

ஆழ்கடல் வளங்களை முழுமையாக பயன்படுத்தி இந்தியாவின் எரிசக்தி தற்சார்பை உறுதி செய்யும் 'சமுத்ர மந்தன்' திட்டத்தைப் பற்றி...

2 நவம்பர் 2026, 4:05 am
சமுத்ர மந்தன்.
பகிர்:

- பெ.நா.மாறன்

இந்தியா ஆண்டொன்றுக்கு சுமார் ரூ. 14 லட்சம் கோடி அந்நியச் செலாவணியாக நீரகக் கரிம (ஹைட்ரோ கார்பன்) இறக்குமதிக்காக மட்டும் செலவழிக்கிறது. இது நாட்டின் மொத்த வருவாய் மதிப்பில் மூன்றில் ஒரு பகுதியாகும்.

வளைகுடாப் போர் ஆரம்பமானபோது, உலகச் சந்தையில் பீப்பாய் ஒன்றுக்கு 70 டாலரை ஒட்டி இருந்த கச்சா எண்ணெய்யின் விலை 115 டாலர் என்ற அளவில் உச்சத்தைத் தொட்டிருக்கிறது; இதன் தாக்கம் அடுத்த பட்ஜெட்டில் உணரப்படும். இந்தியாவின் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியில், கடல் சார்ந்த வயல்களின் பங்களிப்பு முறையே 53 சதவீதமாகவும், 72 சதவீதமாகவும் உள்ளது. நீரகக் கரிமம் கிடைக்கும் கடல் பகுதிகளில் நீரின் ஆழம் 400 மீட்டருக்கும் குறைவாக இருந்தால், அது ஆழமற்ற கடல் பகுதியாகவும், 400 மீட்டருக்கு அதிகமாக இருந்தால், அது ஆழ்கடல் பகுதியாகவும், 1,500 மீட்டருக்கும் அதிகமாக இருந்தால் அதிஆழ்கடல் பகுதியாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

இந்தியாவின் கடல் பகுதிகளில் நீரகக் கரிமம் எடுக்கும் பணிகளில் ஓஎன்ஜிசி, வேதாந்தா, ரிலையன்ஸ் மற்றும் பிரிட்டிஷ் பெட்ரோலியம் (பி.பி.) ஆகியவை தனித்தனியாகவோ, கூட்டாகவோ செயல்பட்டு வருகின்றன. தற்போதைய கடல் பகுதி உற்பத்தியில் பெரும்பகுதி ஆழமற்ற பகுதிகளிலேயே நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவின் மிகப் பெரிய கடல்சார் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வுத் திட்டம் (சமுத்ர மந்தன்) ஒன்றின் 148 பக்க வழிகாட்டுதல்களை 22.10.2026-இல் மத்திய பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ஆழ்கடல் நீரகக் கரிம வளங்களை (ஹைட்ரோ கார்பன்) முழுமையாகப் பயன்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யவும் மேற்கொள்ளப்பட்டுள்ள மிகப் பெரிய வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கைகளில் ஒன்று இந்தத் திட்டம்.

இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் பெரும்பகுதியை இறக்குமதி செய்வதைச் சார்ந்துள்ளதால் (உலகில் 3-ஆவது பெரிய கச்சா எண்ணெய் நுகர்வோர் நாடு), நாட்டின் ஆழ்கடல் பகுதிகளில் உள்ள எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளங்களைக் கண்டறிந்து தற்சார்பை அடையச் செய்வது இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இந்தத் திட்டத்தின் முதற்கட்ட செயலாக்கத்துக்கு ரூ. 84,084 கோடி ஒதுக்கீட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இது 2030-2031-ஆம் நிதியாண்டுவரை நடைமுறையில் இருக்கும். கிருஷ்ணா - கோதாவரி, காவிரி, மகா நதி மற்றும் அந்தமான் பகுதிகளில் ஆழ்கடலிலும், அதிஆழ்கடலிலும் நீரகக் கரிம வளங்களைக் கண்டறிதல் அதன் முக்கிய நோக்கம். ஒட்டுமொத்த உற்பத்தியிலும் வளம் கையிருப்பு நிலையிலும் 30 முதல் 40 சதவீதம்வரை அதிகரிப்பதற்கான முன்னெடுப்பு இது. இதுவரை ஆராயப்படாத கடல் பகுதிகளில் அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி 2 டி மற்றும் 3 டி நில அதிர்வு ஆய்வுகளை மேற்கொண்டு தரவுகள் சேகரிக்க, ஆழ்கடல் மற்றும் அதிஆழ்கடல் பகுதிகளில் புவியியல் ஆய்வுக்காக 4 கிணறுகளையும், எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களைக் கண்டறிவதற்காக 56 கிணறுகளையும் தோண்டுவதற்காக, கடலுக்கு அடியில் கண்டறியப்படும் எரிசக்தி வளங்களை வெளியே கொண்டுவந்து, வணிக ரீதியில் பயன்படுத்த குழாய் இணைப்புகள், செயலாக்க மையங்கள் போன்ற உள்கட்டமைப்புகளை உருவாக்க, உற்பத்தி மற்றும் சேவை மண்டலங்களை உருவாக்கி 'இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தின்கீழ், ஆழ்கடல் ஆராய்ச்சிக்கான உபகரணங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க என்று பல்வேறு அலகுகளுக்கு அந்த நிதி பகிர்ந்தளிக்கப்பட உள்ளது.

இந்த முயற்சிகளின்மூலம் நாட்டின் உள்நாட்டு எரிவாயு உற்பத்தியை உயர்த்தி ஆண்டுதோறும் சுமார் ரூ. ஒரு லட்சம் கோடி வரை இறக்குமதிச் செலவைக் குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்தியத் தரப்பின் முதல் முயற்சி என்பதால் இதே வகை உற்பத்தியில் மத்திய கிழக்கு நாடுகளைத் தவிர்த்து உச்சத்தில் இருக்கும் பிரேஸில் மற்றும் நார்வே நாடுகளின் நிலையை ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

பிரேஸில் மற்றும் நார்வே நாடுகளின் கச்சா எண்ணெய் உற்பத்தி இந்திய உற்பத்தியைப்போல் முறையே 8 மடங்கும், 3 மடங்கும் அதிகம். அவற்றின் இயற்கை எரிவாயு உற்பத்தி இந்திய உற்பத்தியைப்போல் முறையே 4 மடங்கும் 3.5 மடங்கும் அதிகம். அந்த நாடுகள் நம்மைப் போலன்றி தங்கள் உள்நாட்டுத் தேவையைவிட பல மடங்கு அதிகமாக உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்கின்றன. பிரேஸிலின் உற்பத்தியில் பெரும்பகுதி ஆழ்கடல் மூலமே கிடைக்கிறது; நார்வேயும் கடல்சார் உற்பத்தியில் முன்னோடி.

பிரேஸில் மற்றும் நார்வே போன்ற நாடுகளில் ஆழ்கடல் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியால் மீன்வளம் மற்றும் கடல் சூழலியல் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் இல்லாமல் இல்லை. பிரேஸிலின் ஆழ்கடல் படுகைகளில் (குறிப்பாக ஃப்ரீ-சால்ட் பகுதிகளில்) நடைபெறும் உற்பத்தி நடவடிக்கைகளால் கடந்த காலங்களில் ஏற்பட்ட மிகப் பெரிய கசிவுகளால் பிரேஸிலின் கடற்கரைகள், சதுப்பு நிலங்கள் மற்றும் பவளப்பாறைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டதாகவும், கடல் நீரில் நீரகக் கரிமம் கலப்பதால் மீன்கள், இறால்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் பெருமளவில் பாதிக்கப்படுவதாகவும், இதனால் அந்தப் பகுதியில் மீன்பிடித்து வாழும் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதுடன், சுற்றுலாத் துறையும் பாதிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் உண்டு.

நார்வேயின் வட கடல் பகுதியில் நடைபெறும் எண்ணெய் உற்பத்தியில், கச்சா எண்ணெய்யுடன் வெளியேறும் உப்புநீர் மீண்டும் கடலில் விடப்படுகிறது என்பதால், அது அந்தப் பகுதியிலுள்ள மீன்கள் மற்றும் மட்டி வகைகளின் இனப் பெருக்கத்தைப் பாதிக்கிறது என்பது அங்குள்ள பார்வை. நார்வே சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மிகவும் கண்டிப்பான நாடாக இருந்தும், அங்கு நிறுவனங்கள் கடுமையான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டி இருந்தும், தொடர்ச்சியான ஆராய்ச்சியால் ஏற்படும் நீண்டகாலச் சூழலியல் தாக்கங்கள் முழுமையாகத் தவிர்க்கப்படுவதில்லை என்கிறார்கள்.

ஆழ்கடல் நீரகக் கரிம உற்பத்தி என்பது நாடுகளுக்குப் பொருளாதார லாபத்தைத் தந்தாலும், அது கடல் பல்லுயிர்ப் பெருக்கத்துக்கு ஈடுகட்ட முடியாத சுற்றுச்சூழல் அச்சுறுத்தல்களையும், மீன்வளத்துக்குக் கடுமையான பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது என்பது சூழலியலாளர்களின் அச்சம். பிரேஸில் அரசுக்குச் சொந்தமான பெட்ரோபிராஸ் நிறுவனம், அமேசான் நதி முகத்துவாரம் மற்றும் உலகப் புகழ்பெற்ற அமேசான் பவளப்பாறை பகுதிகளுக்கு அருகில் ஆழ்கடல் எண்ணெய் கிணறுகளைத் தோண்ட முயன்றபோது, கிரீன்பீஸ் போன்ற பன்னாட்டு சுற்றுச்சூழல் அமைப்புகளும் உள்ளூர் மக்களும் மாபெரும் போராட்டங்களை முன்னெடுத்தனர்.

நார்வேயில் புதிய ஆழ்கடல் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வுத் திட்டங்களுக்கு எதிராக 'கிரீன்பீஸ் நோர்டிக்' மற்றும் 'நேச்சர் அண்ட் யூத்' போன்ற இளையோர் அமைப்புகள் நீதிமன்றங்களில் தொடர் வழக்குகளைத் தொடுத்துள்ளன. எண்ணெய் நிறுவனங்களின் அனுமதியை எதிர்த்து அங்கும் தீவிரமாகக் குரல் கொடுத்து வருகின்றனர்.

நம் நாட்டின் தென்பகுதியில் குறிப்பாக தமிழ்நாட்டில் நீரகக் கரிமப் பொருள்களின் உற்பத்தி என்றாலே ஒருவித ஒவ்வாமை பொதுமக்களின் உணர்வுகளில் ஏற்றப்பட்டு விட்டது. அவற்றின் உற்பத்தி சார்ந்த சுற்றுச் சூழல் பாதிப்பு கடுகளவு என்றால், ஏற்படுத்தப்பட்டிருக்கும் பீதி மலையளவாக இருக்கிறது. அறிவிக்கப்பட்டிருக்கும் தேசிய கடல்சார் ஆய்வுத் திட்டம் தென்னிந்திய கடற்பகுதியை மையம் கொண்டே இருப்பதால் தவறான புரிதல்களால் இதற்கு எதிராகப் பொதுமக்கள் போராடும் வாய்ப்புகள் அதிகம்.

பல்லாயிரம் கோடி ரூபாயை இது தொடர்பான ஆய்வுகளிலும், தொடர்ந்த கட்டமைப்பு வசதி ஏற்பாடுகளிலும் செலவு செய்யத் தயாராக இருக்கும் அரசு, இது குறித்த விழிப்புணர்வைச் சம்பந்தப்பட்ட மக்களுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் ஏற்படுத்துவதற்காக சில நூறு கோடிகளையாவது செலவழித்து, முழு அளவில் விஞ்ஞானபூர்வமான விளக்கங்களை அளித்து அவர்களைத் தெளிவுபடுத்த வேண்டிய கடமையை உணர வேண்டும். மக்கள் நலத் திட்டங்களில் விலையின்றித் தரப்படுகிற அரிசி தவிர்த்த அனைத்துமே (பேருந்துப் பயண டீசல், சமையல் எரிவாயு, உரம், தங்கம், மின்னணு சாதனங்கள், பாமாயில்) அந்நியச் செலாவணி மூலம் இறக்குமதி செய்யப்படுபவை என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும்.

மக்களுக்கு ஏற்படவிருக்கும் நன்மை குறித்து விளக்கி, அதற்காக எந்த சமரசமும் செய்யப் போவதில்லை என்ற நம்பிக்கையை ஏற்படுத்தாமல் செய்யப்படும் எந்தச் செயலும் வெற்றி இலக்கை எட்டுவது எளிதாக இருக்காது. நீரகக் கரிம நிறுவனங்களை வழிநடத்தவும் கண்காணிக்கவும் மத்திய-மாநில அரசுகளின் மாசு கட்டுப்பாட்டு வாரியங்களில் தனிப் பிரிவு ஏற்படுத்தப்பட்டு அது பிரதமர் மற்றும் முதல்வரின் நேரடிக் கண்காணிப்பில் இருக்க வகை செய்ய வேண்டும்.

நீண்டகால நோக்கில் இப்போதைய விலையில்லாத் திட்டங்களுக்கு மாற்றாக உணவுப் பொருள்கள், ஜவுளிப் பொருள்கள், பால், காய்கறிகள், முட்டை, பழங்கள், மின்சாரம், கல்விச் சேவை, சுகாதார சேவை போன்ற உள்நாட்டு உற்பத்தியை மட்டுமே சார்ந்திருப்பவற்றை விலையில்லாமல் தரும் சாத்தியக்கூறுகளை ஆராய முற்படுவது எதிர்கால சமூகத்தின் கடன் சுமையைக் குறைக்க முயலும் நேர்மறை நடவடிக்கையாக இருக்கும்.

கட்டுரையாளர்: எழுத்தாளர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments