FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

நேர்மறை சூழலின் அவசியம்!

மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு பாதுகாப்பான மற்றும் மகிழ்ச்சியான பள்ளிச் சூழல் அவசியம் என்பதைப் பற்றி...

பகிர்:

பள்ளி என்பது மாணவர்களுக்கு பாட அறிவை மட்டும் வழங்கும் இடமல்ல; அவர்களின் பொது அறிவு, உணர்வு மேம்பாடு, உடல் ஆரோக்கியம், சமூகத் திறன் மற்றும் ஒழுக்கத்தை சிறப்பாக்கும் வாழ்க்கைப் பயிற்சிக் களமாகும். மாணவர்கள் பள்ளியில் பாதுகாப்பாகவும், மதிப்பாகவும், மகிழ்ச்சியாகவும் உணரும்போது மட்டுமே அவர்களால் கற்றலில் முழுமையாக ஈடுபட முடியும்.

அதற்கு நேர்மறைப் பள்ளிச் சூழல் அமைவது அவசியம். மாணவர்கள், ஆசிரியர்கள், குடும்பங்கள், நிர்வாகத்தினர் மற்றும் பணியாளர்கள் ஆகிய அனைவருக்கும் சமூகம், உணர்வு மற்றும் உடல் ரீதியிலான பாதுகாப்பான உணர்வை அளிக்கும் சூழலே நேர்மறைப் பள்ளிச் சூழலாகும்.

அந்தப் பாதுகாப்பான சூழலே அவர்களை நேர்மறையாகச் செயல்படத் தடுக்கும் கட்டுகளை அவிழ்த்து பள்ளிச் சூழலை படைப்புத்திறன் மிக்கவையாக மாற்றும். மாணவர்கள் உடல் ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் பாதுகாப்பாக உணரும் சூழல்தான் முதன்மையானது. அதனுடன் தரமான கற்பித்தல் மற்றும் சிறந்த கற்றல் அனுபவங்கள் இணைந்தால், மாணவர்களின் அறிவும் திறன்களும் முழுமையான வளர்ச்சியைப் பெறும்.

Advertisement

Advertisement

நேர்மறைப் பள்ளிச் சூழலால் மாணவர்களுக்கு கற்றலின் மீது ஆர்வம் அதிகரித்து, பள்ளிச் செயல்பாடுகளில் அவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்க முடிகிறது. மன அழுத்தம் குறைந்து, மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் செயல்பட முடிகிறது. பள்ளிக்கு வருவதில் ஆர்வம் அதிகரிப்பதால் வருகை சதவீதமும் உயர்ந்து சிறந்த கல்வி; சிறந்த எதிர்காலம் என்ற இலக்கை நோக்கி மாணவர்களால் முன்னேற முடிகிறது.

கலை, இசை, நாடகம், அறிவியல் கழகம், தமிழ் மன்றம், சுற்றுச்சூழல் நடவடிக்கைகள், நூலகப் பயன்பாடு போன்ற இணைச் செயல்பாடுகளிலும் மாணவர்கள் ஈடுபட ஊக்குவிக்கப்பட வேண்டும். இத்தகைய செயல்பாடுகள் மாணவர்களிடம் மறைந்துள்ள திறமைகளை வெளிக்கொண்டு வந்து அவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கும்.

தரமான கற்பித்தலுடன் புதுமையான கற்றல் முறைகள் மற்றும் கல்வித் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும். உடல் நலன், ஒழுக்கம் மற்றும் குழு உணர்வை வளர்க்க உடற்கல்வி, யோகா மற்றும் விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஆசிரியர்களின் பணித்திறன் மேம்பாடும் நேர்மறைப் பள்ளிச் சூழலின் முக்கியப் பகுதியாகும். ஆசிரியர்கள் தொடர்ந்து பயிற்சி பெற்று, புதிய கற்பித்தல் நுட்பங்களைக் கற்று, தங்களது திறன்களை மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

தமது கற்பித்தலைத் தாமே ஆய்வு செய்து, மாணவர்களின் தேவைக்கேற்ப கற்பித்தல் முறைகளை மாற்றியமைக்கும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஆசிரியர் தொடர்ந்து கற்றுக் கொள்ளும்போது மாணவர்களின் கற்றலும் தொடர்ந்து மேம்படும். மேலும், மாணவர்கள்-ஆசிரியர்கள்-பணியாளர்கள்-குடும்பங்களுக்கிடையே நேர்மறையானதும் மரியாதைமிக்கதுமான உறவுகள் உருவாக வேண்டும்.

திட்டமிட்ட ஒழுங்குமுறை, ஆதரவு மற்றும் சமத்துவம் நிறைந்த நிர்வாகச் சூழலும், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களிடையே ஒத்துழைப்பு, நம்பிக்கை, குழு உணர்வு ஆகியவற்றைக் கொண்ட பணிப் பண்பாடும் பள்ளியின் வெற்றிக்கு அடிப்படையாக அமைகின்றன. மாணவர்களின் வாழ்க்கை வெற்றிக்கு பாட அறிவுடன் சமூக–உணர்ச்சிக் கற்றலும் மிகவும் அவசியமானது. தமது உணர்ச்சிகள், பலங்கள், வரம்புகள் மற்றும் மதிப்புகளை அறிந்து கொள்வது சுய விழிப்புணர்வை வளர்க்கிறது. உணர்ச்சிகளையும் செயல்களையும் கட்டுப்படுத்தி, சுய ஒழுக்கத்துடன் தனிப்பட்ட இலக்குகளை நோக்கிச் செயல்படுவது சுய மேலாண்மையாகும்.

பிறர் கருத்தைக் கேட்பது, நல்ல தொடர்பைப் பேணுவது, ஒருமித்த கருத்தை உருவாக்குவது மற்றும் தேவையானபோது உதவி கோருவது ஆகியவை உறவுத் திறன்களை வளர்க்கிறது. சமூக–உணர்ச்சிக் கற்றல் என்பது கல்வியைத் தாண்டிய வாழ்க்கைத் திறன்களை வளர்க்கும் கருவியாகும். மேலும், பள்ளித் தலைமையானது கட்டுப்படுத்துபவர்களாக மட்டுமல்லாமல், வழிகாட்டுபவர்களாகவும், ஊக்குவிப்பவர்களாகவும் செயல்பட வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் பணியை அங்கீகரித்து, அவர்களுக்குத் தெளிவான கருத்துகளை வழங்கி, அவர்களின் முயற்சிகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

மேலும் ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்களது கருத்துகளை வெளிப்படுத்தவும், பள்ளிச் செயல்பாடுகள் மற்றும் முடிவெடுத்தலில் பங்களிக்கவும் வாய்ப்பளிக்கப்பட வேண்டும். தங்களுடைய குரல் முக்கியம் என்ற உணர்வு பள்ளிக்குத் தொடர்புடைய எல்லோருக்கும் ஏற்பட வேண்டும். நியாயம், சமத்துவம், மரியாதை ஆகியவை நிலவும் இடத்தில் நம்பிக்கையும் ஒத்துழைப்பும் இயல்பாகவே வளர்கின்றன.

ஒரு சிறந்த ஆசிரியரிடம் பாடப் புரிதல் மட்டுமே போதாது, அந்தப் புரிதலை உணர்வுடன் இணைத்து, செயல்பாட்டில் வெளிப்படுத்தும் ஆசிரியரே மாணவர்களின் வாழ்க்கையில் நிலையான மாற்றத்தை உருவாக்க முடியும். எனவே, நேர்மறைப் பள்ளிச் சூழல் என்பது ஒரு திட்டமோ அல்லது ஒரு நாளில் உருவாக்கக்கூடிய அமைப்போ அல்ல.

அது பாதுகாப்பு, மரியாதை, நம்பிக்கை, அன்பு, ஒத்துழைப்பு, சமத்துவம், பொறுப்புணர்வு மற்றும் தொடர்ச்சியான வளர்ச்சி ஆகியவற்றின் மூலம் நாள்தோறும் கட்டமைக்கப்படும் பண்பாடாகும். ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பணியாளர்கள் மற்றும் நிர்வாகத்தினர் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால், ஒரு சிறந்த கற்றல் சமூகமாக பள்ளிகள் முழுப் பலனை அளிக்கும்.

இன்று சர்வதேச ஆசிரியர் தினம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments