கர்நாடகத்தில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 4 சட்ட மேலவை உறுப்பினர்கள் பதவியேற்பு!
சட்ட மேலவை உறுப்பினர்கள் பதவியேற்றது பற்றி..
கர்நாடக சட்ட மேலவைக்குப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு உறுப்பினர்கள் திங்கள்கிழமை பதவியேற்றுக்கொண்டனர்.
சட்ட மேலவைத் தலைவர் சலீம் அகமது, நான்கு உறுப்பினர்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
Advertisement
Advertisement
கர்நாடக சட்ட மேலவைக்கு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏ.பி. ரங்கநாத், சஷில் ஜி. நமோஷி, எஸ்.வி. சங்கனூர் மற்றும் கே.எம். சுரேஷ் ஆகிய நால்வர், சட்ட மேலவையின் இரண்டு ஆசிரியர் தொகுதிகள் மற்றும் இரண்டு பட்டதாரி தொகுதிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஜேடி(எஸ்) கட்சியைச் சேர்ந்த ரங்கநாத், பெங்களூரு ஆசிரியர் தொகுதியிலிருந்தும், பாஜகவைச் சேர்ந்த நமோஷி, சங்கனூர் மற்றும் சுரேஷ் ஆகியோர் வடகிழக்கு ஆசிரியர் தொகுதி, மேற்கு பட்டதாரி தொகுதி மற்றும் தென்கிழக்கு பட்டதாரி தொகுதிகளில் வெற்றி பெற்றனர்.
இந்த நிகழ்வில், துணை முதல்வர் ஜி. பரமேஸ்வரா, சட்ட மேலவை துணைத் தலைவர் உமாஸ்ரீ, மேலவை எதிர்க்கட்சித் தலைவர் சலவாடி நாராயணசாமி, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஆர். அசோகா மற்றும் சட்ட மேலவை உறுப்பினர்கள் டி.ஏ. சரவணா, என். ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சட்ட மேலவைச் செயலாளர் ஜோதி மற்றும் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் குடும்பத்தினரும் இந்த விழாவில் பங்கேற்றனர்.
கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இது பெரும் பின்னடைவாக அமைந்தது. பெங்களூர் ஆசிரியர் தொகுதியை ஆளும் கட்சியிடமிருந்து ஜேடி(எஸ்) கைப்பற்றியது. அதே சமயம், அதன் கூட்டணிக் கட்சியான பாஜக, தேர்தலில் போட்டியிட்ட மற்ற மூன்று தொகுதிகளையும் தக்கவைத்துக்கொண்டது.