4 மாநிலங்களில் 28 எம்எல்சி தேர்தல் முடிவுகள்! காங்கிரஸ் பூஜ்ஜியம்!
நாட்டில் நடைபெற்ற 28 எம்எல்சி இடங்களுக்கான தேர்தலில் காங்கிரஸ் பின்னடைவு...
உத்தரப் பிரதேசம், பிகார், மகாராஷ்டிரம் மற்றும் கர்நாடக ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற 28 சட்ட மேலவை இடங்களுக்கான தேர்தலில் காங்கிரஸ் ஒரு இடத்தில்கூட வெற்றியைப் பதிவு செய்யவில்லை.
உத்தரப் பிரதேசத்தில் 11, பிகாரில் 8, மகாராஷ்டிரத்தில் 5, கர்நாடகத்தில் 4 ஆகிய 28 சட்ட மேலவை இடங்களுக்கான வாக்குப்பதிவு அக். 23 ஆம் தேதி நடைபெற்றது.
இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டு வருகின்றன.
Advertisement
Advertisement
கர்நாடகம்
காங்கிரஸ் ஆட்சியில் உள்ள கர்நாடகத்தில் நடந்த 4 சட்ட மேலவை இடங்களுக்கான தேர்தலில் ஒரு இடத்தில்கூட வெற்றி பெறாமல் காங்கிரஸ் தோல்வியடைந்துள்ளது.
கர்நாடகத்தில் வடகிழக்கு ஆசிரியர் தொகுதி, தென்கிழக்கு பட்டதாரிகள் மற்றும் மேற்கு பட்டதாரிகள் தொகுதிகளில் பாஜக அமோக வெற்றியைப் பதிவு செய்தது. அதன் கூட்டணிக் கட்சியான ஜேடி(எஸ்) பெங்களூரு ஆசிரியர் தொகுதியைக் கைப்பற்றியது.
உத்தரப் பிரதேசம்
உ.பி.யில் பட்டதாரிகளுக்கான லக்னெள, வாரணாசி, ஆக்ரா, மீரட், அலகாபாத்-ஜான்சி ஆகிய 5 தொகுதிகள் மற்றும் ஆசிரியர்களுக்கான லக்னெள, வாரணாசி, ஆக்ரா, மீரட், பரேலி - மொராதாபாத், கோரக்பூர் - ஃபைசாபாத் ஆகிய 6 தொகுதிகள் என மொத்தம் 11 தொகுதிகளில் தேர்தல் நடத்தப்பட்டது.
மீரட், பரேலி - மொராதாபாத் மற்றும் லக்னெள ஆகிய தொகுதிகளை பாஜக தக்கவைத்துக்கொண்டது. வாரணாசி மற்றும் ஆக்ரா ஆசிரியர் தொகுதிகளைச் சமாஜ்வாதி கட்சி கைப்பற்றியது. மீதமுள்ள இடங்களில் வாக்கெண்ணிக்கை நடைபெற்று வருகின்றன. அனைத்திலும் பாஜக மற்றும் சமாஜவாதி ஆகிய இரு கட்சிகள்தான் முன்னிலை வகிக்கின்றன.
பிகார்
பிகாரில் நடைபெற்ற 8 சட்ட மேலவை இடங்களுக்கான தேர்தலில் பாட்னா ஆசிரியர் தொகுதியை எதிர்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கைப்பற்றியது.
திருஹுத் ஆசிரியர் தொகுதியை பாஜகவும், தர்பங்கா தொகுதியை முதல்முறையாக பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியும் கைப்பற்றியுள்ளன.
சரண் ஆசிரியர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் ராகுல் ராஜ் வெற்றி பெற்றார். மீதமுள்ள தொகுதிகளுக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றன. பாஜக, ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ஆர்ஜேடி ஆகிய கட்சிகள் மாறிமாறி முன்னிலை வகித்து வருகின்றன.
மகாராஷ்டிரம்
மகாராஷ்டிரத்தில் உள்ள 5 தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. எனினும், ஆளும் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி அனைத்து இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.
இந்த கூட்டணியை எதிர்த்து காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி போட்டியிட்டது.
பிற்பகல் 3 மணி நிலவரப்படி, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படாத சட்ட மேலவை தொகுதிகளிலும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் முன்னிலையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Results for 28 MLC elections across 4 states! Congress gets zero!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.