பூமியைத் தாக்கும் விண்வெளிக் குப்பைகள்
விண்வெளிக் குப்பைகள் பற்றிய நடுப்பக்கக் கட்டுரை......
அனைத்து உயிரினங்களுக்கும் தாயாக பூமியும், தந்தையாக விண்வெளியும் இருந்து இப்பூவுலகைக் காத்து வருகின்றன. இன்று பூமியை நாம் பல்வேறு வகைகளில் சிதைத்து வருகிறோம். இது போதாதென்று, இப்போது விண்வெளியிலிருந்து விழும் குப்பைகளும், கழிவுகளும் பூமியைத் தாக்குகின்றன. அத்துடன், விண்ணில் சுற்றும் குப்பைகளால் தந்தையான விண்வெளியும் தனதாற்றலை இழந்து வருகிறது.
ஆசைக்கும் அதனால் எழும் கற்பனைக்கும் எல்லையில்லை. அண்மைக்காலமாக, விண்வெளி சார்ந்த ஆய்வுப் பணிகள் அதிகரிப்பு, இந்தத் துறையில் சர்வதேச தனியார் நிறுவனங்களின் ஆதிக்கம், தனியார் வர்த்தகச் செயற்கைக்கோள்களின் விரிவாக்கம், விண்வெளிச் சுற்றுலா ஆகியன இந்த விண்வெளிக் குப்பை (ஸ்பேஸ் டெபிரிஸ்) குறித்தான கவலையை விண்வெளி ஆர்வலர்கள் மத்தியில் அதிகரிக்கச் செய்துள்ளது.
அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியால், விண்வெளியில் ஏவுகணைகளை ஏவுதல், செயற்கைக்கோள்களை நிலைநிறுத்துதல், விண்வெளியில் ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபடுதல் ஆகிய நடவடிக்கைகளில் அனைத்து நாடுகளும் முழுமூச்சில் ஈடுபட்டு வருகின்றன. இதன் காரணமாக ஏற்பட்டுள்ள விரைவான வளர்ச்சியால் பூமியைச் சுற்றி வரும் விண்வெளிக் குப்பைகளின் அளவு அதிகரித்து வருகிறது. இதனால், உயிரினங்களுக்குத் தீங்கிழைக்கும் வகையில் விண்வெளிக் குப்பைகள் பூமியின் மீது விழுகின்றன என "நியூயார்க் டைம்ஸ்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
Advertisement
Advertisement
இது குறித்து, போலந்து விண்வெளி நிறுவனத்தின் விண்வெளி சூழ்நிலை விழிப்புணர்வு நடவடிக்கைகளின் தலைவர் மரியுஸ் ஸ்லோனினா "நியூயார்க் டைம்ஸ்' நாளிதழில் தனது கவலையைப் பகிர்ந்துள்ளார்.
விண்வெளிக் குப்பைகளில் கைவிடப்பட்ட ஏவுகணை பாகங்கள், செயலிழந்த செயற்கைக்கோள்கள் மற்றும் விண்கலங்களின் துண்டுகள் ஆகியவை அடங்கும். செயற்கைக்கோள்களின் சுற்றுப்பாதையில் 10 செ.மீட்டருக்கும் அதிகமான சுமார் 36,000 சிதைவுத் துண்டுகளும், கோடிக்கணக்கான சிறிய துண்டுகளும் உள்ளன; இவற்றின் மொத்த எடை 13,486 டன்னை எட்டுகிறது.
கென்யாவில் அண்மையில் நிகழ்ந்த ஒரு சம்பவம் அதிகரித்துவரும் இந்தப் பிரச்னையைப் படம் பிடித்துக் காட்டியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம், நைரோபிக்குத் தென்கிழக்கே உள்ள முகுகு கிராமத்தின் விவசாய நிலத்தில் ஏவுகணையிலிருந்து ஒரு பெரிய உலோக வளையம் விழுந்தது. "இதுதான் உலகத்தின் முடிவு என மக்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள்' என உள்ளூர்வாசியான ஜான் முகுனு தெரிவித்தார்.
மனிதனைவிட உயரமாகவும், குதிரையைவிட கனமாகவும் இருந்த அந்தப் பொருள், பின்னர் ஓர் ஏவுகணையின் பாகம் என அடையாளம் காணப்பட்டது. கென்யா விண்வெளி நிறுவனம் 2025-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இது "ஒரு தனிப்பட்ட நிகழ்வு' என்று கூறியது. இருப்பினும், இதை ஆராய்ந்த விண்வெளி நிபுணர்கள், விழும் சிதிலங்கள் அடிக்கடி நிகழ்வதாக அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உள்ள வடகிழக்குக் கடற்கரையில் அண்மையில் பல இரும்புக் குண்டுகள் மிதந்து வந்தன. அவை நேரமாக, நேரமாக அளவில் பெரிதாக ஆரம்பிக்க, மக்கள் அச்சத்துடன் பயந்தோடினர். ஆஸ்திரேலியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனத்தினர் வந்து இதை ஆராய்ந்தனர். பின்னர், அவர்களால் அவை "விண்வெளிப் பந்துகள்' என அறிவிக்கப்பட்டன. யாரும் இதன் அருகில் போக வேண்டாம் என மக்களை எச்சரித்தனர். ஃப்ளின்டர்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஆலிஸ் கார்மன், "இவை ஏவுகணைகளின் கழிவுப் பொருள்கள், ஏவுகணைகளிலிருந்து அவிழ்த்து விடப்பட்ட இவை வானிலேயே எரிந்துவிடும். எரியாத சில பகுதிகள் இப்படி பூமியில் விழுவது வழக்கம்' என்றார்.
இது தவிர, சர்வதேச விண்வெளி நிலையத்தின் சிதிலங்கள் புளோரிடாவில் உள்ள ஒரு வீட்டின் மீது விழுந்துள்ளன. மேலும், "ஸ்பேஸ்எக்ஸ்' ஏவுகணையின் பாகங்கள் போலந்தில் விழுந்துள்ளன. செயலிழந்த, ஒரு சீன செயற்கைகோள் ஸ்பெயினின் கேனரி தீவுகளுக்கு மேல் உடைந்து சிதறியது. பிலிப்பின்ஸிலும் விண்வெளிச் சிதிலங்களின் துண்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.
"ஒவ்வொரு நாளும் மீண்டும் விண்வெளிக் குப்பைகள் வளிமண்டலத்துக்குள் நுழைகின்றன. ஆயிரம் கிலோ அல்லது அதற்கும் மேற்பட்ட எடை கொண்ட பொருள்கள் வாரத்துக்கு ஒரு முறை பூமிக்குத் திரும்புகின்றன' என்கிறார் மரியுஸ் ஸ்லோனினா. பத்தாண்டுகளுக்கு முன்பு 110-ஆக இருந்த அந்த எண்ணிக்கை, கடந்த 2025-ஆம் ஆண்டு பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழைந்த சுமார் 820 பொருள்களுக்கு அமெரிக்க விண்வெளிப் படை ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்தது.
கடந்த 2025-ஆம் ஆண்டு 300-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் விண்ணில் ஏவப்பட்டன. இது பத்தாண்டுகளுக்கு முந்தைய எண்ணிக்கையைவிட சுமார் நான்கு மடங்கு அதிகம். ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட ஏவுகணையின் பாகங்கள் கட்டுப்பாடின்றி மீண்டும் பூமியில் விழுவது, மற்றும் விண்வெளியில் பழைமையான செயற்கைக்கோள்களின் தற்போதைய நிலை குறித்த கவலைகளை மேலும் அதிகரித்துள்ளது.
விண்வெளிக் குப்பைகள் செயற்கைக்கோள்கள் சுற்றுப்பாதையில் ஒருவித அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. பூமியின் தாழ் சுற்றுப்பாதையிலுள்ள சிதைவுகள் விநாடிக்கு சுமார் 7 கி.மீ. வேகத்தில் பயணிக்கின்றன. மேலும், மோதல்கள் "கெஸ்லர் சிண்ட்ரோம்' எனப்படும் தொடர்வினையில் மேலும் பல துண்டுகளை உருவாக்கக்கூடும். பூமியின் தாழ் சுற்றுப்பாதையிலுள்ள பொருள்களின் அடர்த்தி மிகவும் அதிகமாகும் போது, விண்வெளிக் குப்பைகளின் மோதல்கள் தடுக்க முடியாத தொடர் வினையைத் தூண்டும். இதனால், மேலும் சிதறல்கள் உருவாவதுடன் முக்கியமான சுற்றுப்பாதைப் பகுதிகள் எதிர்கால செயற்கைக்கோள்கள் மற்றும் விண்வெளி ஆய்வுகளுக்குப் பயன்படுத்த முடியாததாகி விடுகின்றன.
சர்வதேச விண்வெளி நிலையம் விண்வெளிக் குப்பைகளைத் தவிர்ப்பதற்கான உரிய நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. "விண்வெளிக் குப்பைகள் வளிமண்டலத்துக்குள் விழும் நிலையில், எரிந்து சாம்பலாவதே இயல்பான தீர்வாகும்' என "நியூயார்க் டைம்ஸ்' தெரிவித்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க்கின் நிறுவனமான "ஸ்பேஸ்எக்ஸ்' நிறுவனம் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை இயக்கி வருகிறது. "ஸ்பேஸ்எக்ஸ்' நிறுவனமும்,
அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸுவின் "ப்ளு ஆரிஜின்' (விண்வெளி உற்பத்தி மற்றும் விண்வெளி பயணச் சேவைகள் நிறுவனம்) மற்றும் சீன அரசின் செயற்கைக்கோள் நிறுவனம் ஆகியன மேலும் ஏவுகணைகளை விண்ணில் ஏவ விண்ணப்பித்துள்ளன.
இந்தச் சூழ்நிலையில், கடந்த 2025-ஆம் ஆண்டு ஜனவரியில் "ஸ்பேஸ்எக்ஸ்' நிறுவனத்தின் "ஃபால்கன் 9 ஏவுகணை'யின் இரண்டாம் அடுக்கு பாகம் விண்வெளியிலேயே தங்கி விட்டது. எரிபொருள் தீர்ந்த நிலையில், விண்வெளியில் ஓராண்டுக்கும் மேலாக மிதந்து கொண்டிருந்த 4 டன் எடையுள்ள ஏவுகணையின் கழிவு பாகம், மணிக்கு சுமார் 8,700 கி.மீ. வேகத்தில் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதியன்று இந்திய நேரப்படி பிற்பகல் 12.05 மணியளவில், நிலவின் மேல் பகுதியில் மோதியது. இதனால், நிலவில் சுமார் 18 மீட்டர் அகலமும், 4 மீட்டர் ஆழமும் கொண்ட ஒரு பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது.
அந்த ஏவுகணையின் பாகம், நிலவின் மேற்பரப்பில் மோதும்போது, அதிலிருந்து மிகப் பெரிய தூசு படலம் மேலெழும்பியதைக் கண்ட விண்வெளி ஆராய்ச்சியளர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாயினர். இதனால், பூமிக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுமோ என அவர்கள் அஞ்சினர். இது குறித்து நாசா தீவிரமாக ஆராய்ச்சி செய்து வருகிறது. நிலவைச் சுற்றி வரும் தென் கொரியாவின் விண்கலனும், இந்தப் பணியில் இறங்கியுள்ளது.
மேலும், எலான் மஸ்க்கின் தனியார் "ஸ்டார்லிங்க்' செயற்கைக்கோள் காரணமாக, அடுத்த பத்தாண்டுக்குள் விண்வெளிக் குப்பைகள் பூமியை நோக்கி வந்தால், பூமியின் வாழும் உயிரினங்களுக்கும், விமானப் போக்குவரத்துக்கும் 85 சதவீத பாதிப்பு ஏற்படும் என்கின்றனர் விண்வெளி நிபுணர்கள்.
விண்கலத்தின் பயனற்ற பாகங்கள் வளிமண்டலத்துக்குள் விழும்போது முழுமையாக எரிந்து சாம்பலாகும் வகையிலான தொழில்நுட்பங்களையும், கடுமையான விதிகளையும் அரசு இயக்கும் செயற்கைக்கோள்கள் நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் கொண்டிருக்க வேண்டும் என்கின்றனர்.
விண்வெளி நிபுணர்கள். ஐ.நா. சபையின் விண்வெளிக் குப்பைகள் தொடர்பான தற்போதைய வழிகாட்டுதல்கள் சட்டபூர்வமாக கட்டுப்படுத்த முடியாத வகையில் காலாவதியாகியுள்ளன. அவை, மிகக் குறைவான செயற்கைக்கோள்களே சுற்றுப்பாதையிலிருந்து 2007-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டன. அவற்றை தற்போதைய காலச் சூழலுக்கேற்ப புதுப்பிக்க வேண்டிய கட்டாயத்தில் ஐ.நா. தள்ளப்பட்டுள்ளது.
விண்வெளிக் குப்பைகள் தரையிறங்கும் இடங்களைக் கணிப்பது கடினமாக உள்ளது என்கின்றனர் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள். விண்கலம் மீண்டும் வளி மண்டலத்துக்குள் நுழையும் நேரத்தைக் கணிப்பதில் ஏற்படும் ஒரு நிமிஷ பிழைகூட, அது மோத வாய்ப்புள்ள பகுதியை ஏறக்குறைய 300 மைல்கள் வரை மாற்றிவிடக் கூடும் என்கிறது அமெரிக்காவின் ஏரோஸ்பேஸ் கார்ப்பரேஷன்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் செயல்படும் சிரக்கியூஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், நாசாவின் முன்னாள் நிர்வாகியுமான ஷான் ஓ கீஃப், நியூயார்க் டைம்ஸிடம், "மனிதர்களுக்குக் கற்பனைத் திறன் மிகவும் குறைவாக உள்ளது. அது நமக்கே நடக்கும் என்று நம்மால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடிவதில்லை' எனத் தெரிவித்துள்ளார். அறிவியல் உலகில் விண்கழிவுகளை செல்வமாக மாற்றி, பஞ்சபூதங்களையும் காத்து, மாசில்லாத பூமியை உருவாக்குவோம்!
கட்டுரையாளர்:
எழுத்தாளர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.