21.7.1976: செவ்வாயில் யு.எஸ். விண்வெளி கலம் இறங்கியது
அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.
பாசடேனா (அமெரிக்கா), ஜூலை. 20 - பூமியிலிருந்து அனுப்பப்பட்ட ஒரு விண்வெளிக்கலம் பல கோடி மைல்களுக்கு அப்பால் உள்ள செவ்வாய் கிரகத்தில் இன்று வெற்றிகரமாக இறங்கியது. மனித குல வரலாற்றில் இது மாபெரும் சாதனையாகும். இந்த விண்வெளிக்கலம் செவ்வாய் கிரகத்தில் உயிரினம் உள்ளதா என்று அறிய பல ஆராய்வுகளை கடத்தும்.
பூமியிலிருந்து ஒரு விண்வெளிக்கலம் வேறு ஒரு கிரகத்தில் போய் வெற்றிகரமாக இறங்குவது இதுவே முதல் தடவையாகும்.
செவ்வாயில் வைகிங் கலம் இறங்கியவுடன் கூரான கற்கள் நிறைந்த புழுதிபடிந்த சுற்றுப் புற பரப்பின் தெளிவான படங்களை பூமிக்கு அனுப்பியது. இங்கு டெலிவிஷன் திரையில் முதல் படத்தை கண்டதும் கரகோஷம் செய்தனர். வைகிங் இறங்கிய இடத்தைச் சுற்றி கூரான கற்கள் காணப்பட்டன.
Advertisement
Advertisement
டெலிவிஷனில் செவ்வாய்படம் தோன்றியவுடன் ஜனாதிபதி போர்டின் குரல் கேட்டது. இந்த வரலாற்றுச் சிறப்பான அதிசய அசாதாரண வெற்றிக்காக விண்வெளி அதிகாரிகளை அவர் பாராட்டினார்.
மேக மண்டலம்
இரண்டாவது படத்தில் மணல் மேடுகள் காணப்பட்டன. இது அற்புதமான காட்சி. ஆஹா, எவ்வளவு அழகு என்று விண்வெளி புகைப்பட பிரிவின் தலைவர் டாக்டர் தாமஸ் மட்ச் கூறினார்.
அடிவானத்திற்கு 2 அல்லது 3 கி.மீட்டருக்கு மேல் மேக மண்டலத்தை காண முடிந்தது என கருதுவதாக அவர் சொன்னார்.
இந்த விண்வெளிக் கலம் அமெரிக்காவினால் அனுப்பப்பட்டதாகும். "வைக்கிங்" என்னும் பெயர் கொண்ட அந்த விண்வெளிக் கலம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் செவ்வாய் கிரகத்தை நோக்கி அமெரிக்காவில் பிளாரிடாவில் உள்ள விண்வெளி நிலையத்திலிருந்து அனுப்பப்பட்டது. சுமார் 11 மாத காலப் பயணத்துக்குப் பிறகு கடந்த மாதம் "வைக்கிங்" விண்வெளிக் கலம் செவ்வாய் கிரகத்தைச் சுற்ற ஆரம்பித்தது.
"வைக்கிங்" விண்வெளிக் கலம் "லாண்டர்" தரையிறங்கு கலம் இன்று தாய்க் கலத்தில் இணைந்த கலத்திலிருந்து தனியே பிரிந்து செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் வெற்றிகரமாக இறங்கியது. ...
21.7.1976: A U.S. spacecraft landed on Mars.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.