2.8.1976: செவ்வாயில் பெருமளவுக்கு ஆக்சிஜன்: வைகிங் தகவல்
அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.
பசடேனா, ஜூலை. 31- செவ்வாய் கிரக மண்ணில், கணிசமான அளவுக்கு 'ஆக்சிஜன்’ (பிராணவாயு) இருப்பது தெரிய வந்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழக்கூடும் என்னும் நம்பிக்கையை இது உறுதிப்படுத்துகிறது.
அதே சமயத்தில், செவ்வாய் மண்ணில் கதிரியக்கம் கூடிய கார்பன் இருப்பதும் தெரிய வந்துள்ளது. இது உயிரினங்களுடன் தொடர்பில்லாதது ஆகும்.
இருப்பினும், செவ்வாய் கிரகத்தில் "வைகிங் லாண்டரின்" ஆய்வுகள் முழுமையாக பூர்த்தியடைந்த பிறகே, அங்கு உயிரினம் உள்ளதா இல்லையா என்பதை நிச்சயமாகச் சொல்ல முடியும். இவ்வாறு செவ்வாய் கிரக ஆய்வு விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
Advertisement
Advertisement
செவ்வாய் கிரகத்தில் இறங்கியுள்ள அமெரிக்க செயற்கைக் கோள் அனுப்பிய தகவல்களை ஆராய்ந்த பிறகு அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
உயிரினங்களின் தொடர்பு இல்லாத நிலையிலும், அங்கு ஆக்சிஜன் இருப்பதற்கும் சாத்யம் உள்ளது. இருப்பினும் அங்கு உயிரினமே இல்லை என்று ஒரேயடியாகச் சொல்லி விட முடியாது. இவ்வாறு அவர்கள் குறிப்பிட்டனர். ...
ஆணாக மாறிய பெண் திருமண வெறியில் தகப்பனை கொன்றாள்
கோவை, ஆக. 1- ஆண் என்றும் சொல்ல முடியாது; பெண் என்றும் கூற முடியாத ஒரு தனிப் பிறவி தனக்கு திருமணம் செய்து வைக்காத காரணத்தால் ஆத்திரம் கொண்டு அரிவாளால் வெட்டி தந்தையைக் கொன்றதாக தகவல் கிடைத்துள்ளது!
கைத்தறி நெசவாளர் கருணையப்ப முதலியாருக்கு ‘அவளாக'ப் பிறந்த காமாட்சிக்கு 25 வயதாகிறது. கடந்த 7 ஆண்டுகளாக ஆண் பாலருக்கு உண்டான அங்க அடையாளங்கள் ‘அவளி'டம் வளரத் தொடங்கியது தந்தைக்கு பிரச்னையாகிவிட்டது. தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி 'இவள்' தந்தையை வற்புறுத்தி வந்தபோது, பணமில்லை என்று சொல்லி தந்தை தட்டிக் கழித்துவந்தாராம்.
ஆனால் சமீபத்தில் 17 வயதாகும் மற்றொரு குமாரத்திக்கு தந்தை திருமணம் செய்து வைக்கவே, காமாட்சிக்கு ஆத்திரம் மூண்டதாம். தன்னை ஒரு 'பெண்ணுக்கு' திருமணம் செய்து வைக்கும்படி கூறினாளாம். தன்னால் இயலாது என்று தந்தை கூறவே, காமாட்சி அரிவாளால் அவர் கழுத்தை வெட்டியதாகவும், மறு நாள் (கடந்த 29 ஆம் தேதி) தந்தை இறந்து விடார் என்றும் கூறப்படுகிறது.
மோருப்பாளையம் போலீசார் எதிரியை கைது செய்துள்ளனர். எதிரி அவளா? அவனா? என்பது போலீசாருக்கு குழப்பமாக உள்ளது. டாக்டரின் தீர்ப்பை எதிர் நோக்கியுள்ளனர். யார் கொன்றது? அவளா? அவனா? என்பது கேள்வி!
Abundant oxygen on Mars: Viking data
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.