காலநிலை மாற்றம் எழுப்பும் கவலை
நீர்நிலைகள், சதுப்புநிலங்கள் ஆகியவற்றைப் பாதுகாப்பது சுற்றுச்சூழல் நடவடிக்கை மட்டுமல்ல; நகரங்களின் எதிர்காலப் பாதுகாப்புக்கான முதலீடும்கூட.
தமிழர் நாகரிகம் குறித்துப் பேசும்போது காவிரிக்கு அடுத்தபடியாக நினைவுக்கு வருவது கடல். சங்க இலக்கியம் தமிழர் வாழ்வியலை ஐந்து நிலங்களாக வகுத்தபோது, கடலையும் கடல்சார்ந்த வாழ்க்கையையும் 'நெய்தல்' எனத் தனித் திணையாகப் போற்றியது. தமிழரின் வரலாற்றில் கடல் என்பது வெறும் நீர்ப்பரப்பு அல்ல; அது வாழ்வின் வாசல்; வணிகத்தின் வழித்தடம்; நாகரிகத்தின் தொட்டில்.
ஆனால், இன்று அதே கடல், காலநிலை மாற்றத்தின் காரணமாகப் புதிய கவலையை எழுப்புகிறது.கடல் ஒரே இரவில் கரையை விழுங்கிவிடுவதில்லை. மில்லி மீட்டர்களில் தொடங்கும் மாற்றம், ஆண்டுகள் செல்லச் செல்ல புயல் அலைகள், கடற்கரை அரிப்பு, உப்புநீர் உட்புகுதல் போன்றவற்றுடன் இணைந்து கடலோரத்தின் முகத்தையே மாற்றக்கூடும்.
பூமியின் சராசரி வெப்பநிலை உயரும்போது இரண்டு முக்கிய மாற்றங்கள் நிகழ்கின்றன. கிரீன்லாந்து, அன்டார்டிகா உள்ளிட்ட பகுதிகளில் பனிப் படலங்களும் பனிப் பாறைகளும் உருகுகின்றன. அதே நேரத்தில் கடல்நீர் வெப்பமடையும்போது அவை விரிவடைகின்றன. இவை இரண்டும் உலகளாவிய கடல் மட்ட உயர்வின் முக்கியக் காரணங்கள்.
Advertisement
Advertisement
ஐபிசிசி மதிப்பீட்டின்படி, 1901 முதல் உலக சராசரி கடல் மட்டம் சுமார் 20 செ.மீ. உயர்ந்துள்ளது. மிக அதிக பசுங்குடில் வாயு உமிழ்வு தொடரும் சூழலில், இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் உலக கடல் மட்டம் மேலும் குறிப்பிடத்தக்க அளவில் உயரக்கூடும் என அறிவியல் உலகம் எச்சரிக்கிறது.
ஒரு சில செ.மீ. உயர்வு பெரிய மாற்றமா என்ற கேள்வி எழலாம். ஆனால், கடலைப் பொருத்தவரை சராசரி உயர்வு மட்டுமே ஆபத்தைத் தீர்மானிப்பதில்லை. புயல், உயர் அலை, கடற்கரை அரிப்பு ஆகியவற்றுடன் அது சேரும்போதுதான் அதன் தாக்கம் பல மடங்காகிறது.
இந்தியாவின் முக்கியமான கடலோர மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. சென்னை முதல் கன்னியாகுமரி வரை நீளும் சுமார் 1,000 கி.மீ. கடற்கரை, மீன்பிடி துறைமுகங்கள், சுற்றுலா, உப்பு உற்பத்தி, கடலோர விவசாயம் என லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்துள்ளது.
தேசிய கடலோர ஆராய்ச்சி மையம் மேற்கொண்ட ஆய்வின்படி, 1990 முதல் 2018 வரையிலான காலத்தில் ஆய்வு செய்யப்பட்ட தமிழ்நாட்டின் சுமார் 991 கி.மீ. நீள கடற்கரையில் 42.7 சதவீதப் பகுதி பல்வேறு அளவுகளில் கடலரிப்பைச் சந்தித்துள்ளது. குறிப்பாக திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர், தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களின் கடலோரப் பகுதிகள் கவனிக்கத்தக்க அளவில் மாற்றங்களை எதிர்கொண்டுள்ளன.
கரை பின்வாங்கும்போது மணலை மட்டும் எடுத்துச் செல்வதில்லை; சில நேரங்களில் வீடுகளையும், சாலைகளையும், விவசாய நிலங்களையும், மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் சேர்த்தே எடுத்துச் செல்கிறது.
இதனுடன் தொடர்புடைய மற்றொரு பெரிய சவால் உப்புநீர் உட்புகுதல். கடலோரப் பகுதிகளில் நிலத்தடி நீர் அளவுக்கு அதிகமாக உறிஞ்சப்படும்போது, நன்னீருக்கும் கடல்நீருக்கும் இடையிலான இயற்கைச் சமநிலை பாதிக்கப்படுகிறது; கடல் மட்ட உயர்வும் இந்த அழுத்தத்தை மேலும் அதிகரிக்கக்கூடும்.
இதனால், கிணறுகளில் உப்புத்தன்மை அதிகரித்து குடிநீரும் விவசாயமும் பாதிக்கப்படலாம். ஒரு காலத்தில் நன்னீர் தந்த கிணறு நாளடைவில் உவர்ப்பாக மாறுமானால், அது ஒரு குடும்பத்தின் குடிநீர் பிரச்னை மட்டுமல்ல; ஒரு கிராமத்தின் வாழ்வாதாரப் பிரச்னையாக மாறிவிடும்.
இதை எதிர்கொள்வதில் தமிழகத்தின் கடலோர நகரங்களுக்கும் தனிக் கவனம் தேவை. குறிப்பாக, சென்னை போன்ற பெருநகரங்களில் கடல் மட்ட உயர்வு என்பது கடற்கரையின் பிரச்னை மட்டும் அல்ல. பலத்த மழை, புயல் அலை, வடிகால் நெருக்கடி ஆகியவை ஒரே நேரத்தில் நிகழும்போது அதன் தாக்கம் நகரத்தின் உள்பகுதிகளுக்கும் பரவக்கூடும்.
கடலோரச் சதுப்பு நிலங்களும் இயற்கை வடிகால் பாதைகளும் குறையும்போது, கடலுக்குச் செல்ல வேண்டிய மழைநீரின் பயணம் தடைபடுகிறது. எனவே நீர்நிலைகள், சதுப்புநிலங்கள் ஆகியவற்றைப் பாதுகாப்பது சுற்றுச்சூழல் நடவடிக்கை மட்டுமல்ல; நகரங்களின் எதிர்காலப் பாதுகாப்புக்கான முதலீடும்கூட.
இதற்கான தீர்வு கடலுக்கு எதிராக எல்லா இடங்களிலும் கான்கிரீட் சுவர் எழுப்புவது அல்ல; கடலுடன் இணைந்து வாழும் அறிவியலை வளர்ப்பதே முக்கியம்.
தமிழகத்தின் நீண்ட கரையோரம் முழுவதற்கும் ஒரே மாதிரியான பாதுகாப்புத் திட்டம் போதாது. மாவட்ட வாரியாக மட்டுமல்லாமல், கிராமம் மற்றும் கடற்கரைப் பகுதி வாரியாகவும் அபாய வரைபடங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
பிச்சாவரம், முத்துப்பேட்டை போன்ற மாங்ரோவ் காடுகள், சதுப்பு நிலங்கள், மன்னார் வளைகுடாவின் பவளப்பாறைகள், கடற்புற்கள் போன்ற இயற்கை பாதுகாப்பு அரண்களை மீட்டெடுத்துப் பாதுகாக்க வேண்டும்.
செயற்கைக்கோள், ஜிஐஎஸ், தொலை உணர்வு தொழில்நுட்பங்கள் மூலம் கரையோர மாற்றங்களைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். புதுப்பிக்கப்பட்ட கடலோர அபாய வரைபடங்களும் உருவாக்கப்பட வேண்டும்.
கட்டுமானங்களுக்கு அனுமதி, இயற்கைப் பாதுகாப்பு அரண்கள் உருவாக்கம், அதிக அபாயம் ஏற்படும் பகுதிகள் போன்றவை அறிவியல் தரவுகளின் அடிப்படையில் அமைய வேண்டும். மீனவர்களின் கடல் அனுபவங்களை கடலோரப் பாதுகாப்புக்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
கடலோரப் பாதுகாப்புக்கான செலவு என்பது வெறும் செலவினம் அல்ல; எதிர்காலப் பேரிடர்களைத் தவிர்ப்பதற்காக இன்று நாம் செலுத்தும் பாதுகாப்பு முதலீடு.
கடலை வெல்ல முடியாது; ஆனால் அதன் மொழியை அறிவியலால் புரிந்துகொண்டு, இயற்கையின் அரண்களைப் பாதுகாத்து, அதன் மாற்றங்களுக்கு ஏற்ப நமது வாழ்விடங்களைத் திட்டமிட முடியும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.