FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தமிழ்நாட்டில் மாற்றம் ஏமாற்றமாக மாறியிருக்கிறது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு

தமிழ்நாட்டில் ஒரு மாற்றம் ஏற்பட்டு, அது ஏமாற்றமாக மாறியிருக்கிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியிருப்பது குறித்து...

7 வினாடிகள் முன்பு
கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் அமிர்தம் இல்லம் திருமண விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் - எக்ஸ்
பகிர்:

சென்னை: தமிழ்நாட்டில் ஒரு மாற்றம் ஏற்பட்டு, அது ஏமாற்றமாக மாறியிருக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் செய்த தவறு, கோடிக்கணக்கான மக்களை இன்றைக்குத் துன்புறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் அமிர்தம் பேத்தி ச.இலக்கியா-கு.கிரிதரா ஆகியோரின் திருமணத்தை திமுக தலைவர் தலைமையேற்று நடத்தி வைத்து உரையாற்றினார்.

அப்போது, அண்ணன் அமிர்தம், அக்கா வசந்தா ஆகியோருடைய பேத்தியும் மருத்துவர்கள் சதீஷ்குமார் - கலைச்செல்வி ஆகியோரின் மகளுமான மணமகள் மருத்துவர் இலக்கியா; கோபாலன் - நஞ்சம்மா ஆகியோரின் பேரனும், கும்மி - ரூபா ஆகியோரின் மகனுமான மணமகன் மருத்துவர் கிரிதரா மணவிழா நிகழ்ச்சி நிறைவேறியிருக்கிறது.

Advertisement

Advertisement

இந்த மணவிழா நிகழ்ச்சிக்குத் தலைமைப் பொறுப்பை ஏற்று, மணவிழாவை நடத்தி வைத்து, அதே நேரத்தில் மணமக்களை வாழ்த்தக்கூடிய ஒரு சிறப்பான வாய்ப்பைப் பெற்றமைக்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன்; பெருமைப்படுகிறேன்.

கலைஞருடைய குடும்பம் என்பது உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும். இது கலைஞருடைய குடும்பம் மட்டுமல்ல, ஒரு 'கோபாலபுரத்தினுடைய குடும்பம்' என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு நாங்கள் ஒட்டோடும் உறவோடும் இருக்கக்கூடியவர்கள். அந்த அடிப்படையில் தான் இன்றுவரை இருந்து கொண்டிருக்கிறோம்.

கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் அமிர்தம் இல்லம் திருமண விழாவில் பங்கேற்று பேசும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் - எக்ஸ்

அமிர்தம் குறித்து நாம் சொல்ல வேண்டும் என்று சொன்னால், தலைவர் கலைஞருடைய சகோதரியுடைய மகன்; அதாவது என்னுடைய அத்தை மகன் அமிர்தம். அதேபோல கலைஞருடைய இன்னொரு சகோதரியுடைய மகன்கள்தான் முரசொலி மாறன் மற்றும் முரசொலி செல்வம். இந்த மூன்று பேரும்தான், அது நானாக இருந்தாலும் சரி, அழகிரியாக இருந்தாலும் சரி, மு.க. முத்துவாக இருந்தாலும் சரி, தம்பி தமிழரசுவாக இருந்தாலும் சரி, செல்வியாக இருந்தாலும் சரி, எங்களை எல்லாம் அவர்கள்தான் வளர்த்தெடுத்தவர்கள். பெற்றவர்கள் தலைவர் கலைஞராக இருந்தாலும், தாயார் தயாளு அம்மாளாக இருந்தாலும், எங்களை வளர்த்தவர்கள் இந்த மூன்று பேரும்தான்.

இந்த மூன்று பேரும்தான் நாங்கள் என்ன படிக்கிறோம், எந்தக் கல்லூரிக்குச் செல்கிறோம், எந்தப் பள்ளிக்குச் செல்கிறோம், என்ன தொழில் செய்ய வேண்டும் என்றெல்லாம் எங்களுக்கு அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் வழங்கியவர்கள்.

முரசொலி மாறனை பொறுத்தவரையில், பட்டும் படாமல் இருப்பார். முரசொலி செல்வத்தை பொறுத்தவரையில், மிகவும் சாந்தமாக, எதைப் பற்றியும் கவலைப்படாமல், எங்களுக்கு ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் அதை உடனடியாக நிவர்த்தி செய்துவிடுவார். அவ்வளவு சாதகமாக எங்களுக்கெல்லாம் இருப்பார்.

அடித்து வளர்த்தவர் அமிர்தம்

ஆனால் அமிர்தம் அண்ணனிடத்தில் அப்படி இருக்க முடியாது; ரொம்பக் கண்டிப்பானவர். இன்னும் சொல்ல வேண்டும் என்று சொன்னால், என்னைக் கன்னத்திலே அடித்திருக்கிறார்! நான் பலமுறை அதை எடுத்துச் சொல்லியிருக்கிறேன். அந்த அளவுக்குக் கண்டிப்பானவர்; அடித்து வளர்த்தவர் அமிர்தம். அப்படிப்பட்டவருடைய பேத்திக்கு நடைபெறக்கூடிய மணவிழாவில் கலந்துகொள்ளும் நேரத்தில் நான் உள்ளபடியே மகிழ்ச்சி அடைகிறேன்.

அரசியலாக்க விரும்பவில்லை

இங்கே சகோதரர் ஆ. ராசா, இன்றைக்கு நாடு எப்படி இருக்கிறது என்பதைப் பற்றி அவர் சுட்டிக் காட்டியிருக்கிறார். நான் அதிகமாக அந்தப் பிரச்னைக்குப் போக விரும்பவில்லை; அரசியலாக்க விரும்பவில்லை. இது ஒரு குடும்ப விழாவாக இருக்கிற காரணத்தால் நான் அதிகம் அரசியலுக்குச் செல்லவில்லை.

ஆனால் ஒன்றை எண்ணிப் பாருங்கள்! இன்றைக்கு அமிர்தம் மகளாக இருந்தாலும், மாப்பிள்ளையாக இருந்தாலும் இரண்டு பேரும் மருத்துவர்கள். இன்றைக்குப் பேத்தி இலக்கியாவுக்குத் திருமணம்; அவரும் மருத்துவர். அவர் மணமகனாகக் கரம் பிடித்திருக்கக்கூடிய கிரிதராவும் மருத்துவர்! ஆகவே, ஒரு மருத்துவர் குடும்பத்தில் நடைபெறக்கூடிய திருமணம் இது. மருத்துவர்கள் சேர்ந்து ஒன்றாக இருக்கக்கூடிய குடும்பத்தில் நடைபெறக்கூடிய திருமணமாக இந்தத் திருமணம் நடந்து கொண்டிருக்கிறது.

யாரும் மறந்துவிடக் கூடாது

ஒன்றை நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். அரை நூற்றாண்டுக்கு முன்னால் பார்த்தால், அத்தி பூத்தாற்போலதான் ஒரு மருத்துவரோ அல்லது பட்டதாரியோ இருப்பார்கள். ஆனால் இன்றைக்கு ஊருக்கு ஊர், கிராமத்திற்கு கிராமம், வீட்டிற்கு வீடு பட்டதாரிகளும் மருத்துவர்களும் இருக்கிறார்கள் என்று சொன்னால், அதற்குக்காரணம் 'திராவிட இயக்கம்' என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது!

மாற்றம் ஏமாற்றமாக மாறியிருக்கிறது

அப்படிப்பட்ட திராவிட இயக்கத்தின் வழித்தோன்றலாக, திமுக பரம்பரைக் குடும்பத்தில் நடைபெறும் திருமணமாக இந்தத் திருமணம் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் இந்த நிலை வருவதற்கு யார் காரணமாக இருந்தார்கள் என்பதை இன்றைக்கு இருக்கக்கூடிய இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும்; தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களுக்குப் புரியவில்லை, தெரியவில்லை. அதனால்தான் ராசா சொன்னதுபோன்று, ஒரு மாற்றம் தமிழ்நாட்டில் ஏற்பட்டு, அது ஏமாற்றமாக மாறியிருக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் செய்த தவறு, கோடிக்கணக்கான மக்களை இன்றைக்குத் துன்புறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும்.

சிந்தித்துப் பார்த்துச் செயல்பட வேண்டும்

எனவே, இந்த நிலை மாறுவதற்கு இந்த மணவிழாவில் கலந்துகொண்டிருக்கக்கூடிய நீங்கள் வரக்கூடிய காலகட்டங்களில் சிறப்பான வகையிலே சிந்தித்துப் பார்த்துச் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ்ப் பெயர்களைச் சூட்டுங்கள்

இன்றைக்கு இலக்கியாவாக இருந்தாலும் சரி, மருத்துவர் கிரிதராவாக இருந்தாலும் சரி, நான் அதிகமாக அறிவுரை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் பெற்றெடுக்கக்கூடிய குழந்தைகளுக்கு அழகான தமிழ்ப் பெயர்களைச் சூட்டுங்கள் என்பதே உங்களுக்கு நான் வைக்கக்கூடிய ஒரே வேண்டுகோள் என்று கூறினார்.

உங்களுக்கு நான் வைக்கக்கூடிய ஒரே வேண்டுகோள்: நீங்கள் பெற்றெடுக்கக்கூடிய குழந்தைகளுக்கு அழகான தமிழ்ப் பெயர்களைச் சூட்டுங்கள்! எப்படி தலைவர் கலைஞர் தன்னுடைய குடும்பத்தில் எல்லாக் குழந்தைகளுக்கும், எல்லாப் பேத்திகளுக்கும் தமிழ் பெயரைச் சூட்டியிருக்கிறார்களோ, அதேபோன்று நம்முடைய அமிர்தம் இல்லத்தில் நடைபெறக்கூடிய இந்த மணவிழாவில் மணமக்களை நான் அன்போடு கேட்டுக்கொள்வது, குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர்களைச் சூட்டுங்கள், சூட்டுங்கள் என்று அன்போடு கேட்டு, புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் எடுத்துச் சொல்லியிருக்கக்கூடிய "வீட்டிற்கு விளக்காக, நாட்டிற்குத் தொண்டர்களாக" மணமக்கள் வாழ்க, வாழ்க, வாழ்க என வாழ்த்தினார்.

summary

Change in Tamil Nadu has turned into disappointment: DMK leader M.K. Stalin

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments