குடிநீர்ப் புட்டி தலைமுறைகள்!
குடிநீருக்கு வரி செலுத்துவதைவிட, நெகிழிப் புட்டிகளுக்கு ஜி.எஸ்.டி. செலுத்துவதை நாம் பெருமையாக நினைக்கத் தொடங்கி விட்டோம்.
தண்ணீர் என்பது இயற்கையின் கொடை என்பதிலிருந்து மாறி, வணிகக் குறியீடாக மாறிய கதைதான் இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய வியாபார வெற்றி.
இன்றைக்கு சூப்பர் மார்க்கெட் எனும் பேரங்காடிகளின் அலமாரிகளில் சாதாரண தண்ணீர், ஆல்கலைன் தண்ணீர், ஹிமாலயன் பாறைத் தண்ணீர், ஆவி முறையில் (பேய், பிசாசு அல்ல, நீராவி முறையில்) வடிகட்டப்பட்ட தண்ணீர் என விதவிதமான புட்டிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. குடிநீருக்கு வரி செலுத்துவதைவிட, நெகிழிப் புட்டிகளுக்கு ஜி.எஸ்.டி. செலுத்துவதை நாம் பெருமையாக நினைக்கத் தொடங்கி விட்டோம்.
எதிர்காலம் எந்தத் திசையை நோக்கி நகர்கிறது என்பதை ஊகிக்க பெரிய தீர்க்கதரிசியாக இருக்க வேண்டியதில்லை. இன்றைய எதார்த்தமே நாளைய எதிர்காலத்தைக் காட்டுகிறது.
Advertisement
Advertisement
அநேகமாக அந்த எதிர்காலம், சிகரெட் பாக்கெட் போல, 'தண்ணீர் அருந்துவது தாகத்துக்கு நல்லது' என்ற எச்சரிக்கையுடன் 100 மி.லி. தண்ணீர் பாக்கெட்டுகள் வடிவில் வரலாம். 'தாத்தா காலத்து ஆழ்துளைக் கிணற்றில் எனக்கு அரை இன்ச் தண்ணீர் உரிமை உண்டு' என்று நீதிமன்றங்களில் வழக்குகளாக நகரலாம். மணமக்களுக்கு மிக்ஸி, கிரைண்டருக்குப் பதிலாக 500 லிட்டர் தண்ணீர் டேங்கர் லாரியை பரிசளிக்கும் புதுமை கலாசாரமாகவும் உருவாகலாம்.
'நீரின்றி அமையாது உலகு' என திருக்குறளை திருவள்ளுவர் எழுதியபோது, மனிதர்கள் தன் பேராசையால் நிலத்தடி நீரை உறிஞ்சி, அதை நெகிழிப் புட்டிகளில் அடைத்து, லிட்டருக்கு இருபது ரூபாய்க்கு விற்பார்கள் என்றோ; அடுத்த வீட்டுக்குச் செல்ல வேண்டிய குடிநீரைக் குழாயில் மோட்டார் பொருத்தி திருடுவார்கள் என்றோ கற்பனை செய்து பார்த்திருப்பாரா என்பது சந்தேகமே.
தமிழர்களின் வரலாற்று நெடுகிலும் நீர் மேலாண்மை என்பது பண்பாட்டின் ஓர் அங்கமாகவே விளங்கியது. நதி நீர், ஏரி, குளம், ஊருணி, கண்மாய், ஏந்தல், தாங்கல், சுனை, கிணறு என நீர்நிலைகளை அவற்றின் அமைப்புக்கும் பயன்பாட்டுக்கும் ஏற்ப பிரித்து வைத்திருந்த நுட்பம் நமக்கு இருந்தது.
முந்தைய காலங்களில், ஆற்று நீரையும் குளத்து நீரையும் வாய்க்கால் நீரையும் அள்ளி, அப்படியே பருகிய தலைமுறைகள் இங்கு வாழ்ந்தன. அதன்பின்னர், தனிநபர் கிணறுகளின் காலம் தொடங்கியது. ஒவ்வொரு வீட்டின் புழக்கடையிலும் ஒரு கிணறு இருந்தது. வீட்டின் பயன்பாட்டுக்குத் தேவையான நீரைத் தங்களின் சொந்த உழைப்பின் மூலமே மனிதர்கள் இறைத்துக் கொண்டனர். 1980}கள் வரை கிராமங்களில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் 'சாவடி கிணறுகள்' வெட்டப்பட்டன.
நாகரிகத்தின் அடுத்தகட்ட பாய்ச்சலில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்ற கருத்துருவம் உள்ளே நுழைந்தது. தொழில்மயமாக்கல் மற்றும் ரசாயனப் பயன்பாட்டால் இயல்பு நீர்நிலைகள் மாசடைந்தன. நிலம் திரியத் தொடங்கியதும் நீரும் திரியத் தொடங்கியது.
இதன் விளைவாக, மக்களின் ஒட்டுமொத்த குடிநீர்த் தேவையையும் நிறைவு செய்யும் பொறுப்பு உள்ளாட்சி நிர்வாகங்களின் கைக்கு மாறியது.
ஆரம்ப காலத்தில் உள்ளாட்சி அமைப்புகள் தெருவுக்கு ஒரு பொதுக் குழாய் அமைத்தன. குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே தண்ணீர் வரும். மக்கள் வரிசையில் நின்று குடங்களில் பிடித்து வைத்துக் கொள்வார்கள். அது குடிப்பதற்கு மட்டுமே பயன்பட்டது. குளிப்பதற்கும் துவைப்பதற்கும் வீட்டுக் கிணறு அல்லது பொதுக் குளங்கள் பயன்படுத்தப்பட்டன.
இடைப்பட்ட காலத்தில் வீடுகளுக்கே நேரடியாகக் குடிநீர் இணைப்புகள் வழங்கும் திட்டங்கள் அரசுகளால் கொண்டுவரப்பட்டன. மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் கட்டப்பட்டு, ஊர் முழுவதும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.
தற்போதைய காலத்தில் பொது நீர்நிலைகள் பராமரிப்பின்றி அழிகின்றன. சொந்தக் கிணறுகள் வற்றிப் போய் விட்டன. இதன் விளைவாக, வீட்டின் அனைத்துத் தேவைகளுக்கும் குடிநீர், கழிப்பறை, தோட்டம், வாகனங்கள் கழுவுதல் என உள்ளாட்சி விநியோகிக்கும் குடிநீரையே முழுமையாக நம்பியிருக்கும் அவலநிலை உருவானது.
கிணறுகளைப் பராமரிப்பதை விட்டுவிட்டு, அனைவரும் ஆழ்துளைக் கிணறுகளை நோக்கிப் படையெடுக்க ஆரம்பித்த பிறகு, பூமித் தாயின் ஆழப் பகுதிகளுக்குக் குழாய்களைச் செலுத்தி, பல்லாயிரம் ஆண்டுகளாகச் சேமிக்கப்பட்டிருந்த நிலத்தடி நீரைச் சொட்டு விடாமல் உறிஞ்சி எடுக்க வேண்டியதாகி விட்டது. கிராமங்களில்கூட தெருக் குழாய்களில் மோட்டார்களைப் பொருத்தி தண்ணீரை இழுக்கும் அநியாயம் இயல்பாகி விட்டது.
முன்பெல்லாம் வழிப்போக்கர்களுக்குத் தண்ணீர்ப் பந்தல் அமைத்துக் குளிர்ந்த நீரையும் மோரையும் தர்மமாகக் கொடுத்த நாடு இது. இன்றைக்கு நட்சத்திர உணவகங்களில் சாதாரண தண்ணீரைக் கேட்டால் ஒரு மாதிரியாகப் பார்க்கிறார்கள்.
எதிர்காலம் இதே போக்கில் சென்றால், நாம் சந்திக்கும் சூழல்கள் எப்படி இருக்கும்? உங்கள் வீட்டு அரசுக் குழாயில் தண்ணீர் வர வேண்டுமென்றால், கைப்பேசிக்கு வரும் ஓடிபியைப் பதிவு செய்ய வேண்டியிருக்கும்.
இயற்கை நமக்கு வாரி வழங்கிய நீர் வளத்தைச் சுயநலத்தாலும் அலட்சியத்தாலும் தொலைத்துவிட்டு, செயற்கை சுத்திகரிப்பு மையங்களையும் நெகிழிப் புட்டிகளையும் நம்பி வாழ்வது பேரழிவுக்கே வழிவகுக்கும்.
குடிநீரை விநியோகிப்பது அரசின் கடமை என்றால், அந்த நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதும், மழை நீரைச் சேமித்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதும் ஒவ்வொரு குடிமகனின் தலையாய கடமையாகும்.
'தண்ணீர் வரத்து குறையும்போது நாகரிகங்கள் அழியும்' என்பது மனித குல வரலாறு நமக்குக் கற்பித்த பாடம். மொகஞ்சதாரோ, ஹரப்பா அழிந்ததற்கு வறட்சியும் ஒரு முக்கியக் காரணம்.
இப்படியே போனால், அடுத்த உலகப் போர் தண்ணீருக்காகவும் இருக்கும் என்பது சூழலியல் அறிஞர்களின் எச்சரிக்கை. அதற்கு முன் நாம் விழித்துக் கொள்வோமா? அல்லது அடுத்த தலைமுறைக்கு தண்ணீர் என்றால் என்னவென்று அருங்காட்சியகத்தில் காட்டுவோமா?.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.