உங்கள் காதலைக் கொண்டாட 10 சிறந்த மலைப்பிரதேசங்கள்!
காதலர்கள் செல்ல வேண்டிய இந்தியாவில் உள்ள 10 சிறந்த மலைப் பிரதேசங்கள் பற்றி...
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் தொடங்கினாலே காதலர்களின் அன்பான அலப்பறைகளும் சமூக ஊடகங்களில் அதுகுறித்து பதிவிடுவதும் தொடங்கிவிடும். பிப்ரவரி இரண்டாம் வாரம் முழுவதும் ரோஸ் டே, பிராமிஸ் டே, கிஸ் டே என்று வரிசையாகக் கொண்டாடுகிறார்கள்.
இந்த நேரத்தில் காதலித்துக் கொண்டிருப்பவர்கள், காதலித்துத் திருமணம் செய்தவர்கள், திருமணமாகி காதலிப்பவர்கள் என காதலர்கள் அனைவரும் ஒரு சிறிய சுற்றுலா சென்றுவந்தால் நன்றாகத்தானே இருக்கும்...
வீடு, வேலை, உறவுகளின் பல பிரச்னை என பரபரப்பான வாழ்க்கையை ஒரு சில நாள்களுக்கு விடுத்து, இருவருக்குமான நேரமாக, இயற்கையுடன் ஒரு சுற்றுலா சென்று இந்த காதலர் தினத்தைக் கொண்டாடலாம்.
அப்படி, இந்தியாவில் காதலர்கள் பயணிக்கக் கூடிய(வேண்டிய), காதல் நிறைந்த 10 மலைப் பிரதேசங்கள் எங்கெங்கு இருக்கின்றன என்று பார்க்கலாம்...
சிம்லா, ஹிமாச்சலப் பிரதேசம்
'மலைகளின் ராணி' என்று அழைக்கப்படும் சிம்லா உங்கள் முதல் தேர்வாக இருந்தால் சிறப்பு. பிரமிக்க வைக்கும் கட்டிடக் கலை மற்றும் இயற்கைக் காட்சிகளுக்கு பெயர்போன இடம். எத்தனை முறை சென்றாலும் சலிப்படையாத ஒரு இடம் என்றால் அது சிம்லாதான். அங்குள்ள குஃப்ரி பகுதிக்கு பொம்மை ரயிலில் உங்கள் துணையோடு ஓர் இனிமையான பயணம் மேற்கொள்ளலாம். இந்த பயணம் உங்கள் வாழ்க்கைப் பயணம் புத்துணர்வு அடையவும் உதவும்.
மணாலி, ஹிமாச்சலப் பிரதேசம்
ஹிமாச்சலில் உள்ள மற்றொரு அழகிய மலைப் பிரதேசம். திக்குமுக்காட வைக்கும் காட்சிகளுக்கு பெயர் போன மணாலி, காதலர்கள்/தம்பதிகளின் ஹாட்ஸ்பாட். சாகசப் பிரியர்களுக்கு சோலாங் பள்ளத்தாக்கும் இருக்கிறது, அமைதியான காதலர்களுக்கு பியாஸ் நதியும் இருக்கிறது. மணாலி பனிப்பொழிவுடன் உங்கள் காதல் மழையையும் பொழியலாம்.
நைனிடால், உத்தரகண்ட்
மலைகளால் சூழப்பட்ட அழகிய ஏரியைக் கொண்ட நைனிடால், படகு சவாரிக்குச் சிறந்த இடம். காதலர்கள் கைகோர்த்துக் கொண்டு ஏரிக்கரையில் நடைப்பயணம் மேற்கொள்ளலாம். நைனா/சீனா சிகரத்தில் இருந்து சூரிய உதயத்தைப் பார்க்கும்போது கிடைக்கும் உணர்வை பலரும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இமயமலைச் சிகரத்தில் உங்கள் காதலையும் சொல்லிவிட்டு வாருங்கள்.
டார்ஜிலிங், மேற்கு வங்காளம்
தேயிலைத் தோட்டங்களுக்கும் இமயமலையின் அழகிய காட்சிகளுக்கும் பெயர் பெற்றது டார்ஜிலிங். இது ஒரு தனித்துவமான காதல் சூழலை வழங்குகிறது. டார்ஜிலிங் சென்றால் டைகர் மலையில் சூரிய உதயத்தையும், வரலாற்றுச் சிறப்புமிக்க டார்ஜிலிங் ரயில் பாதையையும் உங்கள் துணையுடன் கண்டுகளிக்கத் தவறாதீர்கள்.
லோனாவாலா, மகாராஷ்டிரம்
இந்தியாவின் மத்தியில் இருப்பவர்கள், கடைசி நேரத்தில் ஒரு பயணத்திற்குத் திட்டமிட்டால் இது சிறந்த இடமாக இருக்கும். மும்பை, புணேவிலிருந்து குறுகிய பயண தூரத்தில் உள்ள அழகான இந்த மலைப்பகுதிகளில் நீங்களும் டூயட் பாடலாம். அருவிகளுக்கு பிரபலமான இடம். குகைகள், பள்ளத்தாக்குகள் என பார்ப்பதற்கு பல இடங்கள் உள்ளன.
அவுலி, உத்தரகண்ட்
உங்கள் துணையுடன் இயற்கையுடன் சில பொழுதுபோக்கு விளையாட்டுகளில் ஈடுபட வேண்டும் என்றால் தாராளமாக இங்கு செல்லலாம். பனி மூடிய சிகரங்களால் சூழப்பட்ட இப்பகுதியில், பனிகளுக்கு இடையே ஸ்கேட்டிங், ஸ்கையிங் விளையாட்டுகள் பிரபலம். காதலர்களுக்கு பல இனிமையான அனுபவங்களை இந்த இடம் வழங்குகிறது.
கூர்க், கர்நாடகம்
காவிரி ஆறு உற்பத்தியாகும் இடமான கூர்க் அல்லது குடகுமலை 'இந்தியாவின் ஸ்காட்லாந்து' என்று அழைக்கப்படுகிறது. காபி தோட்டங்கள், அழகிய நிலப்பரப்புகள் கொண்ட ஓர் அழகான மலைவாசஸ்தலம். அபே நீர்வீழ்ச்சி போன்ற நீர்வீழ்ச்சிகள், மலையேற்றம், படகு சவாரி என இனிமையான சுற்றுலாவுக்கு இப்பகுதியை தேர்வு செய்யலாம்.
மூணார், கேரளம்
தென் மாநிலங்களிலும் மலைப் பிரதேசங்களுக்கு சிகரமாக விளங்குவது என்றால் தென்னகத்து காஷ்மீர் என அழைக்கப்படும் மூணார்தான். மூணாரின் பசுமையான தேயிலைத் தோட்டங்களுக்கு இடையே துணையுடனான உங்கள் காதலையும் வெளிப்படுத்தலாம். மலையும், குளிரும் உங்களுக்கு ஓர் அழகான சூழலையும் அமைதியையும் கொடுக்கும். ட்ரெக்கிங் செல்வதற்கும் அருவிகளில் குளிப்பதற்கும் சுற்றியுள்ள காந்தளூர், மறையூர் போன்ற இடங்கள் உள்ளன.
ஊட்டி, தமிழ்நாடு
ஊட்டி, தென்னிந்தியாவில் காதல் பயணத்திற்கு ஏற்ற இடம். அழகிய பூந்தோட்டங்கள், ஏரிகள், புல்வெளிகள் என ஓர் அமைதியான அழகிய பயணமாக இருக்கும். மேட்டுப்பாளையத்தில் இருந்து மலை ரயிலில் பயணம் மேற்கொள்வது இனிய அனுபவமாக இருக்கும். ஊட்டி ஏரியில் படகு சவாரி செய்து, பனிப்புகை சூழ்ந்த தொட்டபெட்டா சிகரத்திலிருந்து இயற்கையை ரசிப்பது பேரனுபவமாக இருக்கும்.
கொடைக்கானல், தமிழ்நாடு
மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல் உங்கள் காதல் பயணப் பட்டியலில் இருக்க வேண்டிய ஒன்று. ஏரிகள், மலைகள், அருவிகள், பசுமையான காடுகள் என சில நாள்கள் அமைதியான சூழ்நிலையில் நேரத்தைச் செலவிடலாம். படகு சவாரி, குதிரை சவாரி, மலையேற்றம் என பொழுதுபோக்குகள் பல இருக்கின்றன.
காதல் பயணங்கள் இனிமையானவை. அதை அனுபவித்தவர்களுக்குத் தெரியும். காதலர் தினத்தன்றுதான் துணையுடன் பயணங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று அவசியமில்லை. காதலர்களோ திருமணமானவர்களோ நேரம்கிடைக்கும்போது அல்லது திட்டமிட்டு ஆண்டுக்கு ஓரிரண்டு முறை துணையுடன் அருகில் உள்ள இடங்களுக்காவது சென்றுவருவது உங்கள் உறவை பலப்படுத்த உதவும்.
வாழ்க்கை வாழ்வதற்குத்தான்...!