FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சிஜேபி + திமுக + ஆம் ஆத்மி! மூன்றாவது கூட்டணி உருவாகிறதா?

சிஜேபியுடன் திமுக, ஆம் ஆத்மி கட்சிகள் இணைந்து 3-வது கூட்டணியை உருவாக்கும் தகவல் பற்றி...

27 ஆகஸ்ட் 2026, 2:15 pm IST
அபிஜீத் தீப்கே, மு.க. ஸ்டாலின், அரவிந்த் கேஜரிவால் - Photo: ChatGPT
பகிர்:

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியுடன் ’இந்தியா’ கூட்டணியிலிருந்து விலகியுள்ள திமுக மற்றும் ஆம் ஆத்மி கட்சி இணைந்து தேசிய அளவில் மூன்றாவது கூட்டணியை உருவாக்கவுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

தில்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) முன்னெடுத்த நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிரான போராட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 15 முதல் நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளின் தரத்தை ஆய்வு செய்யும் இயக்கத்தை தொடங்கி கவனம் பெற்று வருகின்றனர்.

இதனிடையே, தேர்தல் அரசியலுக்கான காய்களையும் சிஜேபி நகர்த்தத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில், தனியார் தொலைக்காட்சி நடத்திய ஜென் ஸீ கருத்தரங்கில் கலந்துகொண்ட சிஜேபி நிறுவனர் அபிஜீத் தீப்கேவிடம், நாட்டின் சிறந்த முதல்வர் யார்? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

Advertisement

Advertisement

அதற்கு பதிலளித்த அபிஜீத் தீப்கே, பொருளாதாரத்தில் தமிழ்நாட்டைச் சிறந்த மாநிலமாக மாற்றிய மு.க. ஸ்டாலினும், சுகாதாரத்தில் கேரளத்தைச் சிறந்ததாக மாற்றிய பினராயி விஜயனும், கல்வியில் தில்லியைச் சிறந்ததாக மாற்றிய அரவிந்த் கேஜரிவாலும் சிறந்த முதல்வர்கள் என்று பதிலளித்தார்.

அபிஜீத் தீப்கேவின் பதில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. அவர்கள் மூவரும் சிறந்த முதல்வர்கள் என்றால் மக்களால் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டது ஏன்? என்று பாஜகவின் முன்னாள் நிர்வாகியான ஷெஹ்சாத் பூனாவாலா கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், தேசிய அளவில் பாஜகவுக்கு, காங்கிரஸுக்கு நிகரான வலுவான மூன்றாவது கூட்டணியை உருவாக்குவதற்கான அச்சாரமாக அவரின் கருத்துகள் இருப்பதாக இணையத்தில் விவாதிக்கப்பட்டு வருகின்றன.

திமுக - சிஜேபி கூட்டணி சாத்தியமா?

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்து திமுக ஆட்சியை இழந்த நிலையில், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் அந்தக் கூட்டணியிலிருந்து விலகி, ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சிக்கு ஆதரவு அளித்துள்ளன. வரும் காலங்களிலும் (தேர்தல்களிலும்) தவெகவுடன் இணைந்து பயணிக்கப் போவதாக அறிவித்துவிட்டனர்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், தேசிய அளவில் காங்கிரஸ் ஆதிக்கம் செலுத்தும் இந்தியா கூட்டணியில் இருந்து விலகுவதாக திமுக தலைமை அறிவித்தது.

காங்கிரஸும் திமுகவும் மாறிமாறி ஒருவரைஒருவர் விமர்சித்து வரும் நிலையில், அவர்களின் உறவு உடைந்த கண்ணாடியாக நொறுங்கிவிட்டது.

இதனிடையே, திமுக கூட்டணியில் இருந்த இடதுசாரிகள் தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளித்திருந்தாலும், அமைச்சரவையில் இடம்பெறவில்லை. தற்போது எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அவர்கள் வெளிப்படையாக தெரிவித்துவிட்டனர்.

இந்த சூழலில், திமுகவுடன் தேமுதிக மட்டுமே பயணிக்கிறது. மற்ற சிறுக் கட்சிகள் அனைத்தும் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டுத் தேர்தலில் வெற்றி பெற்றவையாகும்.

இந்த நிலையில், வருகின்ற 2029 மக்களவைத் தேர்தல் திமுகவுக்கு வாழ்வா? சாவா? நிலை என்பதை மறுக்க முடியாது. தவெகவுக்கு எதிராக பெரும் வெற்றியைப் பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் திமுக இருக்கின்றது.

மறுபுறம், இளைஞர்களின் பெரும் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்துள்ள தவெகவுக்கு மாற்று சக்தியாக உருவெடுக்க பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை தனது கட்சியைக் கட்டமைத்து வருகிறார். இவரின் கட்சியும் 2029 மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் என்று ஏற்கெனவே அறிவித்துவிட்டார்.

இவர்களுக்கு போட்டியாக இளைஞர்களின் பெரும் ஆதரவைப் பெற்ற சிஜேபியுடன் திமுக கூட்டணி அமைக்க அதிக வாய்ப்புள்ளதாக இணையத்தில் விவாதிக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து மத்திய அமைச்சர் பதவியைப் பெற திமுக முனைப்பு காட்டி வருவதாக ஒருபுறம் தகவல் வெளியானாலும், பாஜகவுக்கு மாற்றாக மதவாத சக்திகள் ஒன்றிணைந்து மூன்றாவது கூட்டணியை அமைப்போம் என்று திமுக தரப்பில் முன்பே குறிப்பிடப்பட்டிருந்தது.

எந்தெந்த கட்சிகள் இணையும்?

கடந்த 2025 தில்லி சட்டப்பேரவைத் தேர்தலின் போது, இந்தியா கூட்டணியிலிருந்த ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இடையே நடைபெற்ற கூட்டணிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இரு கட்சிகளும் தனித்தனியாக தேர்தலில் போட்டியிட்ட நிலையில், ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்களை காங்கிரஸ் முன்வைத்ததை அடுத்து, இந்தியா கூட்டணியிலிருந்து விலகுவதாக அரவிந்த் கேஜரிவால் அறிவித்தார்.

அதன்பிறகு, ஆம் ஆத்மியை இந்தியா கூட்டணியில் மீண்டும் இணைக்க முன்னெடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தது.

இந்த நிலையில், 2029 மக்களவைத் தேர்தலில் மூன்றாவது கூட்டணி உருவாகும் பட்சத்தில், திமுகவைப் போன்று ஆம் ஆத்மி கட்சியின் பங்கும் மிகப்பெரியதாக இருக்கும்.

சிஜேபி நிறுவனரான அபிஜீத் தீப்கே, 2020 முதல் 2023 வரை ஆம் ஆத்மி கட்சியின் சமூக ஊடகப் பிரிவில் பணியாற்றியுள்ளார். கேஜரிவால் அரசின் தில்லி கல்வித்துறையின் தகவல் தொடர்பு ஆலோசகராகவும் அவர் செயல்பட்டுள்ளார்.

இதேபோல், இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் மமதா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ், தேஜஸ்வி யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் போன்ற கட்சிகளும் மூன்றாவது கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது.

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் நிறைவுபெற்றும் தொகுதிப் பங்கீட்டில் காங்கிரஸ் இழுபறி செய்ததும், முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவை அறிவிக்காததும் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸும், காங்கிரஸும் தனித்துப் போட்டியிட்டு தோல்வியைச் சந்தித்தன. இதனால், திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியையே இழந்தது.

இதுபோன்று, மாநில அரசியலில் இந்தியா கூட்டணிக் கட்சிகளுக்குள் ஒற்றுமை இல்லாதது தேர்தல் தோல்விக்கு வழிவகுக்கின்றன.

இதனிடையே, அடுத்தாண்டு நடைபெறவுள்ள உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜவாதியும் காங்கிரஸும் இணைந்து போட்டியிடுவார்களா? வெற்றி பெறுவார்களா? என்ற எதிர்பார்ப்பும் நிலவுகின்றன.

மூன்றாவது கூட்டணியால் யாருக்கு பாதிப்பு?

சிஜேபி, திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் இணைந்து மூன்றாவது கூட்டணியை உருவாக்கும் பட்சத்தில் பாஜக, காங்கிரஸ் இரு கூட்டணிகளுக்குள் பாதிப்பு ஏற்படும்.

மத்திய பாஜகவின் எதிர்ப்பு வாக்குகளும் கணிசமான இளைஞர்களின் வாக்குகளும் மூன்றாவது கூட்டணிக்கு செல்லும் பட்சத்தில் பாஜகவின் வாக்கு சதவிகிதம் சற்று குறைய வாய்ப்புள்ளது.

ஆனால், மூன்றாவது கூட்டணி உருவாகும் பட்சத்தில் அதில் அங்கம் வகிக்கப் போகும் பெரும்பாலான கட்சிகள் இந்தியா கூட்டணியிலிருந்து விலகியவையாகதான் இருக்கக்கூடும்.

இதனால், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக இந்தியா கூட்டணியால் கடுமையான போட்டியைத் தர இயலாது நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. மூன்றாவது கூட்டணியால் பாஜகவைவிட காங்கிரஸுக்குதான் பாதிப்பு அதிகம்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், இளைஞர்களைக் குறிவைத்து மாபெரும் வெற்றியைப் பதிவு செய்திருக்கும் நிலையில், அந்த இடத்தை திமுக - சிஜேபி கூட்டணியால் பிடிக்க முடியுமா?

தேசிய அளவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு போட்டி காங்கிரஸின் ராகுல் காந்தி என்ற பிம்பம் உருவாகியிருக்கும் நிலையில், மூன்றாவது கூட்டணியின் பிரதமர் முகமாக யாரை நிறுத்துவார்கள்? என்ற கேள்விகள் எழுகின்றன. மூன்றாவது கூட்டணி உருவானால்தான் பதில்கள் கிடைக்கும்!

summary

CJP, DMK, Aam Aadmi - Is a third alliance taking shape

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments