தள்ளாடும் மதுக்கொள்கை: தடம் மாறும் மக்கள் வாழ்க்கை!
மதுவிலக்கு முதல் டாஸ்மாக் வரை: தமிழக அரசின் கொள்கை மாற்றங்களைப் பற்றி...
தமிழகத்தின் மதுக் கொள்கை எப்போதும் ஒரே நேர்கோட்டில் பயணித்ததில்லை. ஆங்கிலேயர் ஆட்சியில் முக்கியமான அரசு வருவாய் ஆதாரமாக இருந்த மது விற்பனை, சுதந்திரத்துக்கு முன்பே ராஜாஜி ஆட்சியில் மதுவிலக்காக மாறியது. சுதந்திரத்துக்குப் பிறகு பல ஆண்டுகள் நீடித்த மதுவிலக்கு 1971-இல் விலக்கப்பட்டது. அதன் பின்னர் அமைந்த அரசுகள் மதுவிலக்கு தொடர்பாகப் பல்வேறு குழப்பமான முடிவுகளை எடுத்தன. இதனால், தமிழ்நாட்டின் மதுக் கொள்கை என்பது இன்று வரை இறுதி செய்யப்படாமல் ஒவ்வொரு ஆட்சியிலும் நிலையற்றதாக இருந்து வருகிறது.
ஆங்கிலேயர் ஆட்சியின் தொடக்க காலத்திலேயே மதுபான விற்பனையை ஒழுங்குபடுத்தி அதிலிருந்து வருவாய் ஈட்டும் நடைமுறை மதராஸ் மாகாணத்தில் உருவானது. 1852, 1864 ஆண்டுகளின் சட்டங்களுக்குப் பிறகு, மதராஸ் மாகாணத்தில் இதற்கு சட்டரீதியில் அங்கீகாரம் கொடுத்த முக்கியமான சட்டம் "மதராஸ் அப்காரி சட்டம், 1886'. மதுபானம் மற்றும் போதைப் பொருள்களின் இறக்குமதி, ஏற்றுமதி, போக்குவரத்து, சாகுபடி அல்லது தயாரிப்பு, விற்பனை, கையிருப்பு ஆகியவற்றை ஒழுங்குபடுத்துவதற்காக இந்தச் சட்டம் இயற்றப்பட்டது.
மதுவிலக்கைக் கொண்டுவந்த ராஜாஜி
1937-இல் மதராஸ் மாகாணத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தபோது, முதல்வராக இருந்த சி. ராஜகோபாலாச்சாரி (ராஜாஜி), மதுவிலக்கை படிப்படியாக அறிமுகப்படுத்தினார். 1937 அக்டோபர் முதல் சேலம் மாவட்டத்தில் கள், சாராயக் கடைகள் மூடப்பட்டன. பின்னர் சித்தூர், கடப்பா, வடஆற்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கும் மதுவிலக்கு விரிவுபடுத்தப்பட்டது.
Advertisement
Advertisement
மதுவிலக்கால் அரசுக்கு ஏற்பட்ட ஆயத்தீர்வை வருவாய் இழப்பை ஈடுகட்ட விற்பனை வரி அறிமுகப்படுத்தப்பட்டது. சில விதிவிலக்குகளும் இருந்தன. மருத்துவம், மதம் உள்ளிட்ட குறிப்பிட்ட பயன்பாடுகளுக்கும், அனுமதிப் பத்திரம் (மது அருந்த லைசன்ஸ்) பெற்றவர்களுக்கும் மதுபானம் கிடைக்கும் வகையில் விதிகள் உருவாக்கப்பட்டிருந்தன.
இரண்டாம் உலகப் போரில் இந்தியாவை பிரிட்டன் ஈடுபடுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து 1939-இல் ராஜாஜி தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவை ராஜிநாமா செய்தது. இதையடுத்து, 1946 வரை மதராஸ் மாகாணத்தில் ஆளுநர் ஆட்சி நடைபெற்றது. அப்போதும் மதுவிலக்குக் கொள்கை தொடர்ந்தது.
1946-இல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது, பிரகாசம் பந்துலு, பின்னர் ஓமந்தூர் பி. ராமசாமி ரெட்டியார், 1949 முதல் பி. எஸ். குமாரசாமி ராஜா ஆகியோர் முதல்வர்களாகப் பதவி வகித்தனர். இந்தக் காலகட்டங்களிலும் மதுவிலக்கு தொடர்ந்து அமலில் இருந்தது.
1952 தேர்தலுக்குப் பிறகு மீண்டும் ஆட்சிக்கு வந்த ராஜாஜி, மதுவிலக்கைத் தொடர்ந்தார். ராஜாஜிக்குப் பிறகு முதல்வரான காமராஜர் ஆட்சியிலும் மதுவிலக்கு கொள்கையில் மாற்றம் ஏற்படவில்லை. மதுபான உற்பத்தி, விற்பனை ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் அரசு நடவடிக்கைகள் தொடர்ந்தன. மதுவிலக்கை சமூகக் கொள்கையாகவே அன்றைய காங்கிரஸ் அரசு முன்னெடுத்தது.
அண்ணாவின் மறைவுக்குப் பிறகு...
1967-இல் திமுக ஆட்சிக்கு வந்தபோதும், மதுவிலக்கு கொள்கை உடனடியாக மாற்றப்படவில்லை. முதல்வர் அண்ணா தலைமையிலான அரசும் மதுவிலக்கைத் தொடர்ந்து கடைப்பிடித்தது.
1969-இல் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு, மு. கருணாநிதி தலைமையிலான திமுக அரசு, 1971-இல் மதுவிலக்கை நீக்கியது. கள், சாராயம், இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபானங்கள் ஆகியவற்றின் விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டது. மதுவிலக்கு அமலில் இருந்தாலும், அண்டை மாநிலங்களில் மது கிடைத்ததால் தமிழகத்துக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது என்பது மதுவிலக்கை நீக்கியதற்கான முக்கியக் காரணமாக முன்வைக்கப்பட்டது. ஆனால், இந்தத் தளர்வு நீண்ட காலம் நீடிக்கவில்லை.
1973- இல் கள்ளுக்கடைகள் மூடப்பட்டன. 1974-இல் சாராய விற்பனை நிறுத்தப்பட்டது. பின்னர், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அயல்நாட்டு மதுபானங்களின் விற்பனையும் நிறுத்தப்பட்டு, அனுமதிப் பத்திரம் (லைசன்ஸ்) பெற்றவர்களுக்கு மட்டும் மதுபானம் வாங்க அனுமதி வழங்கப்பட்டது. இதன்மூலம் தமிழக மதுக் கொள்கையில் தடை, தளர்வு, மீண்டும் தடை என்கிற குழப்பமான சுழற்சி உருவானது.
1974 முதல் மீண்டும் மதுவிலக்கு நடைமுறையில் இருந்தபோதிலும், கள்ளச்சாராய உற்பத்தியும் விற்பனையும் அதிகரித்தன. கள் போன்ற பானங்களில், அதிக போதைக்காக தீங்கு விளைவிக்கும் ரசாயனப் பொருள்கள் கலக்கப்பட்டு சில மரணங்கள் ஏற்பட்ட நிலையில், மதுவிலக்கால் அரசுக்குக் கிடைக்க வேண்டிய கலால் வருவாய் கள்ளச்சந்தைக்குச் சென்று கொண்டிருந்தது என்ற பொருளாதாரக் காரணமும் கணக்கில் கொள்ளப்பட்டது.
இதையடுத்து, எம்.ஜி.ஆர். தலைமையிலான அதிமுக அரசு, 1981-இல் கள், சாராய உற்பத்தி, விற்பனைக்கு மீண்டும் உரிமம் வழங்கியது. அதே காலகட்டத்தில், ஐஎஃப்எம்எல் என்னும் இந்தியாவில் தயாரிக்கப்படும் அயல்நாட்டு மதுபான உற்பத்திக்கும், தனியார் மற்றும் கூட்டுறவுத் துறைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
கள்ளுக் கடைகள் டெண்டர் முறையிலும், சாராய விற்பனை உரிமங்கள் ஏலம் மூலமும் வழங்கப்பட்டன. 1983-இல் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) உருவாக்கப்பட்டது. அதன் முக்கியப் பணி மதுவின் மொத்த விற்பனையை அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதாக இருந்தது.
ஆனால், 1987 ஜனவரி 1 முதல் கள், சாராய விற்பனை மீண்டும் தடை செய்யப்பட்டது. இது தமிழக மதுக் கொள்கையில் ஒரு முக்கியத் திருப்பமாக அமைந்தது. 1981-இல் தளர்த்தப்பட்ட மதுவிலக்கில் கள், சாராயத்துக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், 1987-இல் அவை மீண்டும் தடை செய்யப்பட்டன; இந்தியாவில் தயாரிக்கப்படும் அயல்நாட்டு மதுபான உற்பத்திக்குத் தடை இல்லை. இவ்வகை மதுபானம், உரிமம் பெற்ற விற்பனை முறையில் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டது.
1990-இல் திமுக ஆட்சியில் கள், சாராயம் எனப்படும் நாட்டு மதுவின் உற்பத்தி, விற்பனை மற்றும் நுகர்வுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டது. தமிழ்நாடு ஸ்பிரிட் கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு நாட்டு மதுவை உற்பத்தி செய்யும் பிரத்யேக உரிமை வழங்கப்பட்டது. மொத்த விற்பனையை டாஸ்மாக் மேற்கொண்டது; கடைகள் மூலம் சில்லறை விற்பனை நடைபெற்றது.
1991-இல் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு அமைந்தபோது கள், சாராயத்தின் உற்பத்திக்கும், விற்பனைக்கும் மீண்டும் தடைவிதிக்கப்பட்டது. இந்தத் தடை பத்தாண்டுகளுக்கு மேலாக நீடித்தது. 2003-இல் ஜெயலலிதா தலைமையிலான அரசு மதுவிற்பனையில் மிகப்பெரிய நிர்வாக மாற்றத்தை ஏற்படுத்தியது. 2003, நவம்பர் 29 முதல் இந்தியாவில் தயாரிக்கப்படும் அயல்நாட்டு மது சில்லறை விற்பனையின் தனியுரிமை டாஸ்மாக்கிற்கு வழங்கப்பட்டது. இதற்கு முன்பு தனியார் உரிமையாளர்கள் நடத்தி வந்த சில்லறைக் கடைகள், படிப்படியாக அரசின் டாஸ்மாக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன. இதுவே தமிழகத்தின் அரசு மதுவிற்பனை அமைப்புக்கான அடித்தளமாக அமைந்தது.
மதுவிலக்கு சட்டம் இருந்தும் மது எப்படி விற்கப்படுகிறது என அவ்வப்போது கேள்விகள் எழுவதுண்டு. இது முக்கியமான சட்ட நுணுக்கமாகும். தமிழ்நாட்டில் தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம், 1937 என்ற சட்டத்தின் கீழ் விதிகள் இயற்றப்பட்டு, உரிமங்கள் வழங்கப்படுகின்றன. 2003-இல் தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள், மதுபான கூட்டங்களில்) விதிகள், 2003 உருவாக்கப்பட்டன.
சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட உரிமத்தின் கீழ் மது விற்பனை என்பதே தமிழகத்தின் மதுவிலக்குச் சட்டம். தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம், 1937 தான் தமிழகத்தில் மதுபானங்களின் உற்பத்தி, தயாரிப்பு, வைத்திருத்தல், போக்குவரத்து, விற்பனை, கொள்முதல் மற்றும் நுகர்வு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் அடிப்படைச் சட்டக் கட்டமைப்பு ஆகும். இது முதலில் சென்னை மாகாணத்தில் இயற்றப்பட்ட சட்டமாகும். பின்னர், மாநிலத்தின் பெயர் மாற்றத்துக்கு ஏற்ப சட்டத்தின் பெயரும் மாற்றப்பட்டன.
இந்தச் சட்டத்தின் முக்கிய நோக்கம் மதுபானங்கள் மற்றும் போதைப் பொருள்களின் உற்பத்தி, விற்பனை, நுகர்வு ஆகியவற்றைத் தடை செய்வதும், அவற்றைக் கட்டுப்படுத்துவதும் ஆகும். ஆனால், இந்தச் சட்டம், எந்தவிதமான மதுபான விற்பனையையும் அனுமதிக்காத ஒன்றாகச் செயல்படவில்லை. அரசுக்கு குறிப்பிட்ட சூழல்களில் உரிமம் வழங்கி, உற்பத்தி, வைத்திருத்தல், போக்குவரத்து அல்லது விற்பனையை அனுமதிக்கும் அதிகாரத்தையும் வழங்குகிறது.
இதனால் தமிழகத்தின் மதுக் கொள்கையைப் புரிந்துகொள்ளும்போது ஒரு முக்கியமான வேறுபாட்டைக் கவனிக்க வேண்டும். அதாவது, மதுவிலக்குச் சட்டம் என்பது சட்டத்தின் பெயர் மட்டுமே, மதுவிலக்கு அல்லது அனுமதி என்பது அரசின் கொள்கை முடிவு. வெவ்வேறு காலங்களில், அரசுகள் இந்தச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி முழுமையான மதுவிலக்கு, பகுதியளவு தடை, உரிமம் வழங்கப்பட்ட மதுவிற்பனை போன்ற மாறுபட்ட கொள்கைகளை நடைமுறைப்படுத்தியுள்ளன.
தற்போதும் தமிழகத்தில் தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம், 1937 தொடர்கிறது. அந்தச் சட்டத்தின் கீழான விதிகளே மதுபான உற்பத்தி, அனுமதி, போக்குவரத்து, விற்பனை உள்ளிட்டவற்றை ஒழுங்குபடுத்துகின்றன.
தமிழகத்தின் வரலாற்றில் மதுக் கொள்கை மாற்றங்களுக்கு முக்கியமாக நான்கு காரணங்கள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டுள்ளன.
1. சமூகக் காரணம்: மதுவால் ஏற்படும் குடும்ப, சுகாதார பாதிப்புகளை குறைத்தல்.
2. அரசு வருவாய்: மதுவிலக்கினால் ஏற்படும் வருவாய் இழப்பு.
3. அண்டை மாநிலங்களின் தாக்கம்: அருகிலுள்ள மாநிலங்களில் மது கிடைப்பதால் முழு தடையை அமல்படுத்துவதில் சிரமம்.
4. கள்ளச்சாராயம்: சட்டபூர்வ விற்பனை இல்லாதபோது சட்டவிரோத உற்பத்தி மற்றும் விற்பனை உருவாகும் அபாயம்.
தமிழகத்தின் கடந்த 90 ஆண்டுகால அனுபவத்தில், மதுக் கொள்கை என்பது சமூகக் கொள்கை மட்டுமல்ல; வருவாய், சட்ட அமலாக்கம், அண்டை மாநிலங்களின் நிலை, பொது சுகாதாரம் ஆகிய அனைத்தையும் இணைக்கும் நிர்வாகக் கொள்கை என்பதைக் காட்டுகிறது.
இவையனைத்தையும் கருத்தில்கொண்டு, மதுவை முழுமையாகத் தடை செய்வதா? அரசுக் கட்டுப்பாட்டில் விற்பதா? தனியார் உரிம முறையில் விற்பதா? அல்லது விற்பனையை படிப்படியாகக் குறைப்பதா? என்பதை அரசு முடிவு செய்யவேண்டும்.
குஜராத்தில் மதுவிலக்கு; ஆனால், வருவாய் குறையவில்லை
குஜராத்தில் பல்வேறு ஆண்டுகளாக மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டதால், அதற்கு ஏற்ப அந்த மாநிலம் தனது பொருளாதார நிலையைக் கட்டமைத்துள்ளது. ஆனால், தமிழகத்தைப் பொருத்தவரை நமது வருமானத்தில் பெரும் பங்கு மதுபான விற்பனையைச் சார்ந்துள்ளது. மதுபானங்களுக்கு விதிக்கப்படும் கலால் வரி மற்றும் மதிப்புக் கூட்டு வரி மூலம் கிடைக்கும் வருவாய், மாநில அரசின் மொத்த பட்ஜெட் வருவாயில் சுமார் எட்டில் ஒரு பங்காக உள்ளது. அதாவது சுமார் ரூ.60,000 கோடி வருவாய் மதுவின் வாயிலாக வருகிறது.
தமிழகத்தில் வழங்கப்படும் பல்வேறு இலவச திட்டங்கள் இந்த வருவாயைச் சார்ந்தே உள்ளன. அப்படியிருக்க மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்துவதால், தமிழகம் பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்திக்கும். ஆகையால், சுமார் 10 முதல் 15 ஆண்டுகள் காலகட்டத்தில், மதுபான வருவாயைச் சார்ந்திருப்பதை அரசு படிப்படியாகக் குறைத்துவிட்டு, அதன் பிறகு வேண்டுமானால் பூரண மதுவிலக்கை அமல்படுத்தலாம்.
மதுபான விற்பனையால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட, விற்பனை வரி மற்றும் கனிம வளங்கள் மூலம் கிடைக்கும் வருவாயை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் கடந்த 15 ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 12 முதல் 13 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆனால், மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 7 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது. வழக்கமாக மாநிலத்தின் சொந்த வரி வருவாய், மொத்த உள்நாட்டு உற்பத்தியைவிட அதிகமாக இருக்க வேண்டும். இதற்கு, சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) செலுத்துவதில் நிகழும் மெத்தனப்போக்கே காரணம்.
-ஆர்.சுபாஷ், பொருளாதார நிபுணர்
மதுக்கடைகளின் எண்ணிக்கையை பாதியாகக் குறைக்க வேண்டும்: சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் குறிப்பிட்ட தொலைவுக்கு ஒரு மதுக்கடை என்ற அடிப்படையில், தனியாருக்கு மதுபான விற்பனை உரிமம் வழங்கப்பட்டு வந்தது. பின்னர், அரசே மதுபானக் கடைகளை நடத்த தொடங்கியதுடன், கடைகளை ஒட்டிய மதுபானக் கூடங்களும் தனியாருக்கு வழங்கப்பட்டன. அரசின் வருவாயைப் பெருக்கும் நோக்கிலும், அரசியல் தலையீட்டின் காரணமாகவும் மதுக்கடைகளின் எண்ணிக்கை அதிகரித்தது.
இதன் விளைவாக கடந்த சில ஆண்டுகளில் இளைஞர்கள், தொழிலாளர்கள் மட்டுமன்றி பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடையே மது பழக்கம் அதிகரித்துள்ளது. இதனால் குடும்பப் பிரச்னைகள், உடல்நல பாதிப்புகள் உள்ளிட்டவை அதிகரிப்பதுடன், குற்றச் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.
முதற்கட்டமாக மதுக்கடைகளின் எண்ணிக்கையைப் பாதியாக குறைத்து, குறைந்தது 5 கி.மீ. தொலைவுக்கு ஒரு மதுக்கடை என்ற அடிப்படையில் கடைகளை அமைக்க வேண்டும். இதன்மூலம் மதுப்பழக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை படிப்படியாக மேற்கொள்ள முடியும். மேலும், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, தமிழகத்தில் கள்ளுக் கடைகளைத் திறப்பது குறித்தும் அரசு தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும்.
-நா.லோகு, கோயம்புத்தூர் நுகர்வோர் குரல் செயலர்
மதுவில் 42 சதவீதம் ஆல்கஹால்; கள்ளில் 4 சதவீதம் மட்டுமே
கள் உணவுப் பொருள்களில் ஒன்றாகும் . அதை மதுபானமாகக் கருதக் கூடாது. கள் விற்பனை மற்றும் கள் இறக்குதலுக்கு அரசு தடை விதித்திருப்பது அரசமைப்புக்கு எதிரானது. தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களில் சுமார் 42.8 சதவீதம் 'ஆல்கஹால்' உள்ளது. ஆனால், கள்ளில் வெறும் 4 சதவீதமே ஆல்கஹால் உள்ளது. அப்படியிருக்க கள்ளை மதுபானத்துடன் ஒப்பிடுவது ஏற்புடையதல்ல.
கலப்படத்தைக் காரணம் காட்டி தமிழகத்தில் கடந்த 1987-இல் கள் இறக்கத் தடை விதிக்கப்பட்டது. கள்ளில் கலப்படம் செய்தால், அப்படிச் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதில் மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால், அதற்காக கள் இறக்குவதற்கே தடை விதிப்பது நியாயமற்றது.
கள் இறக்க அனுமதி வழங்குவன் மூலம் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். கள் இறக்க மின்சார செலவு கிடையாது, இதனால் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு இல்லை. பனைமரத்துக்கு தொடர்ந்து தண்ணீர் பாய்ச்ச வேண்டியதில்லை. அப்படியிருக்க கள்ளை முறையாக மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்துவதன் மூலம் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்.
அதேபோல், கள் உடலுக்கு குளிர்ச்சி தரும் பானமாகும். இதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் தமிழகத்தின் பொருளாதாரம் மேலும் அதிகரிக்கும். மதுபானக் கடைகளின் மூலம் அரசுக்கு வருவாய் கிடைப்பதுடன் அரசியல் கட்சியினர் நடத்தும் ஆலைகளும் லாபம் அடைகின்றன.
அந்த வருவாய் தடைபடக் கூடாது என்பதற்காகவே யார் ஆட்சிக்கு வந்தாலும் கள் இறக்க அனுமதி வழங்குவதில்லை. கள் விலை மலிவு. ஆனால், மதுவின் விலை அதன் உற்பத்தி மதிப்பைவிட பத்து மடங்கு அதிக விலைக்கு விற்கப்படுகிறது. அரசமைப்புச் சட்டத்தின்படி, கள் இறக்குபவர்கள் குற்றவாளிகள் கிடையாது. அதற்குத் தடை விதிக்கும் அரசாங்கமே இங்கு, உண்மையான குற்றவாளிகள்.
-செ.நல்லசாமி, தமிழ்நாடு கள் இயக்கம் கள ஒருங்கிணைப்பாளர்.
தமிழ்நாட்டில் டாஸ்மாக் வழியாக விற்கப்படும் சாதாரண 750 மி.லி. IMFL மதுபானத்தின் விலை எவ்வாறு பிரிக்கப்படுகிறது என்பதை ஓர் உத்தேசக் கணக்காகப் பார்க்கலாம்.
டாஸ்மாக்கில் ரூ.680-க்கு விற்கப்படும் ஒரு முழு (750 மி.லி. ) பாட்டிலின் உண்மையான தயாரிப்பு மதிப்பு வெறும் ரூ.110 முதல் ரூ.120 வரை மட்டுமே. எஞ்சிய தொகை முழுவதும் வரிகளாகவே அரசுக்குச் செல்கிறது.
மதுபான உற்பத்திச் செலவு ரூ.68 (எக்ஸ்ட்ரா நியூட்ரல் ஆல்கஹால், தண்ணீர், சுவையூட்டி மற்றும் லேபல்)
கண்ணாடி பாட்டில் & பேக்கிங் ரூ.25 (பெரிய 750 மி.லி. கண்ணாடி பாட்டில், மூடி மற்றும் கார்டன் பாக்ஸ்)
நிறுவன லாபம் + போக்குவரத்து ரூ.20 (மதுபானத் தயாரிப்பு, நிறுவனத்தின் நிகர லாபம் மற்றும் டாஸ்மாக் கிடங்குக்கான போக்குவரத்துச் செலவு)
அடிப்படை கொள்முதல் விலை ரூ.110 (அரசின் வரிகள் விதிக்கப்படுவதற்கு முந்தைய பாட்டிலின் உண்மையான மதிப்பு)
கலால் வரி ரூ.149 (மதுபானத்தின் வீரியம் (42.8% v/v) மற்றும் அடிப்படை விலையை வைத்து விதிக்கப்படும் வரி)
மதிப்புக் கூட்டு வரி ரூ.365 தமிழக அரசிடம் செல்லும் மிகப்பெரிய வரிப் பங்கு 220% வரை)
டாஸ்மாக் லாபம் + செஸ் ரூ.56 (கடைப் பராமரிப்பு, ஊழியர் ஊதியம் மற்றும் டாஸ்மாக் நிறுவனத்தின் விளிம்புத்தொகை)
இறுதி விற்பனை விலை ரூ.680 (வாடிக்கையாளர்கள் டாஸ்மாக் கடையில் செலுத்தும் மொத்த பில் தொகை)
அடிப்படை விலையான ரூ.110-இல் இருந்து நுகர்வோர் வாங்கும் ரூ.680-ஆக இந்த விலை மாறுவதற்கு முக்கியக் காரணம், இடையில் விதிக்கப்படும் சுமார் 400%-க்கும் அதிகமான ஒட்டுமொத்த வரி விதிப்புதான்.
கள்ளச்சாராய மரணங்கள்...
மதுவிலக்கு அமலில் இருந்தபோதும், மது விற்பனை அனுமதிக்கப்பட்டபோதும் தமிழகத்தின் பல இடங்களில் கள்ளச்சாராய மரணங்கள் நடப்பது நிற்கவில்லை. அண்டை மாநிலங்களில் சாராயம், கள் மலிவு விலையில் கிடைப்பதால் தமிழக எல்லையோரத்தில் இருப்பவர்கள் அங்கு சென்று சாராயம் அருந்துவதும், தமிழக எல்லைகயில் கள்ளச்சாராயம் விற்பனையும், இதில் பல மரணங்களும் ஏற்பட்டு வருகின்றன.
தொடக்க காலத்தில் கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு காவல் துறையினரின் கண்காணிப்புக் குறைபாடே காரணம் என்பதாக இருந்த நிலை மாறி, அரசியல்வாதிகளின் பங்கும் இதில் இருப்பது தெரியத் தொடங்கியது.
“கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு திமுக அரசு ரூ.10 லட்சம் கருணைத் தொகை வழங்கியது”.
***
அண்டை மாநிலங்களில் என்ன முறை?
கேரளம்: அரசு நிறுவனத்தின் பெரும்பங்கு
கேரளத்தில் கேரள மாநில மதுபான கழகம் அரசு நிறுவனமாக உள்ளது. இந்திய தயாரிப்பு வெளிநாட்டு மதுபானம், பீர், ஒயின் உள்ளிட்டவற்றின் கொள்முதல், விற்பனை, விநியோகத்தில் கேரள மாநில மதுபான கழகத்துக்கு முக்கியப் பங்கு உள்ளது. தற்போது அதற்கு 289 சில்லறை விற்பனை நிலையங்கள் இருக்கின்றன. மதுவிலக்கு நாள்கள், விற்பனை நேரம் போன்றவற்றில் கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன.
கர்நாடகம்: உரிமம் பெற்ற தனியார் விற்பனை
கர்நாடகத்தில் உரிமம் பெற்ற தனியார் விற்பனையாளர்களின் மூலம் மது விற்பனை நடைபெறுகிறது. 2025-இல் மது விற்பனை மற்றும் பார் உரிமங்களை மின்னணு ஏலத்தில் வழங்கும் நடைமுறைக்கு அரசு விதிமுறை மாற்றங்களைச் செய்தது.
ஆந்திரம்: அரசு - தனியார் முறையில் மாற்றம்
ஆந்திர பிரதேசம் 2024, - 26 மதுக் கொள்கையில் சில்லறை மது விற்பனையை தனியார்மயப்படுத்தும் முடிவை எடுத்தது. கடைகளின் எண்ணிக்கை, உரிமம் வழங்கும் முறை, சில்லறை வரி உள்ளிட்டவற்றை ஆந்திர அரசு மறுசீரமைப்பு செய்து வருகிறது.
தெலங்கானா: உரிமம் பெற்ற சில்லறைக் கடைகள்
தெலங்கானாவில், உரிமம் பெற்ற ஏ4 சில்லறை மதுக்கடைகள், 2பி பார்கள் உள்ளிட்ட உரிம முறைகள் நடைமுறையில் உள்ளன.
புதுச்சேரி: உரிமம் ஏலம் முறை
புதுச்சேரியில் 1970-ஆம் ஆண்டு கலால் சட்டம் மற்றும் விதிகளின் கீழ் மதுவிற்பனை உரிமங்கள் வழங்கப்படுகின்றன. கள், சாராயம் உள்ளிட்டவற்றின் சில்லறை விற்பனைக்கான உரிமங்களும் வழங்கப்படுகின்றன. 2026-27 ஆண்டுக்கான கள், சாராய சில்லறை விற்பனை தொடர்பான அறிவிப்புகளையும் அரசு வெளியிட்டுள்ளது.
மதுவிலக்கு அமலில் இருந்தபோதும், மது விற்பனை அனுமதிக்கப்பட்டபோதும் தமிழகத்தின் பல இடங்களில் கள்ளச்சாராய மரணங்கள் நடப்பது நிற்கவில்லை. அண்டை மாநிலங்களில் சாராயம், கள் மலிவு விலையில் கிடைப்பதால் தமிழக எல்லையோரத்தில் இருப்பவர்கள் அங்கு சென்று சாராயம் அருந்துவதும், தமிழக எல்லைகயில் கள்ளச்சாராயம் விற்பனையும், இதில் பல மரணங்களும் ஏற்பட்டு வருகின்றன. தொடக்க காலத்தில் கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு காவல் துறையினரின் கண்காணிப்புக் குறைபாடே காரணம் என்பதாக இருந்த நிலை மாறி, அரசியல்வாதிகளின் பங்கும் இதில் இருப்பது தெரியத் தொடங்கியது.
-நமது சிறப்பு நிருபர்கள் குழு
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.