FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பள்ளிகளில் தேவை மீண்டும் நல்லொழுக்க வகுப்புகள்!

அனைத்து பள்ளிகளிலும் மீண்டும் நல்லொழுக்க வகுப்புகள் கொண்டுவர வேண்டியதன் அவசியம் பற்றி...

5 செப்டம்பர் 2026, 4:25 pm IST
கோப்புப் படம் - ENS
பகிர்:

- முனைவர் டேனியல் பிரபாகர் 

இன்று இந்தியா தனது 64 -வது ஆசிரியர் நாளைக் கொண்டாடுகிறது. இந்தியா சுதந்திரம் அடைந்த 15- வது ஆண்டில், அதாவது 1962 -ல் முதன் முதலாக ஆசிரியர் நாள் கொண்டாடப்பட்டது. அப்போது இந்தியாவின் குடியரசுத்தலைவராக இருந்தவர் முனைவர் சர்வ பள்ளி ராதாகிருஷ்ணன். அவர் ஒரு மிகச் சிறந்த கல்வியாளர். ஆசிரியராக பல்வேறு நிறுவனங்களில் பல்லாண்டுகள் பணியாற்றியவர். ஆசிரியர்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர். அவரது பிறந்த நாளே இந்தியாவின் ஆசிரியர் நாளாகக் கொண்டாடப்படுகிறது.

முனைவர் சர்வ பள்ளி ராதாகிருஷ்ணன் 5.9.1888ல் ஒருங்கிணைந்த மதராஸ் மாகாணத்தில் பிறந்தவர். இவர் மதராஸ் பிரசிடென்சி கல்லூரியிலும், மைசூர் பல்கலைக்கழகத்திலும் பின்பு கொல்கத்தா பல்கலைக் கழகத்திலும், லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராக பணியாற்றி இருக்கிறார். 14.5.1962ல் சுதந்திர இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவராக இவர் நியமிக்கப்பட்டார். இது இவரிடம் படித்த மாணவர்களுக்கு மிகப் பெரிய சந்தோஷத்தைத் தந்தது. அம்மாணவர்களில் சிலர் இவரை அணுகி இவரது பிறந்த நாளைக் கொண்டாட அனுமதி கேட்டனர். முனைவர் சர்வ பள்ளி ராதாகிருஷ்ணன் நெடுங்காலமாக ஆசிரியர் பணி செய்ததாலும், ஆசிரியர் பணிமேல் அவருக்கு இருந்த அளப்பரிய ஈடுபாடு காரணமாகவும் தனது பிறந்த நாளை அனைத்து ஆசிரியர்களையும் கௌரவப்படுத்தும் விதத்தில் ஆசிரியர் நாளாகக் கொண்டாடலாம் என்ற தன்னுடைய ஆவலினைத் தெரிவித்தார். இதனையடுத்து, 1962 ஆம் ஆண்டு முதல் செப்டம்பர்  5 -ம் தேதி நம் நாட்டில் ஆசிரியர் நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்நாளில் அரசு சில ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு  ‘நல் ஆசிரியர்’ என விருதுகள் வழங்கி கௌரவிக்கிறது.

Advertisement

Advertisement

ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்படும்போது இவர்கள் ஊக்கம் பெறுவதோடு அவர்களின் கற்பிக்கும் திறன் மேம்படும் என்பதையும் இதனைக் காணும் இதர ஆசிரியர்களும் ஊக்கமடைவார்கள் என்பதையும் கருத்தில் கொண்டு ஆசிரியர்களுக்கு இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன. மாநில அரசுகளால் மாநில நல்லாசிரியர் விருதும், மத்திய அரசால் தேசிய நல்லாசிரியர் விருதும், ஐக்கிய நாட்டு சபையினுடைய யுனெஸ்கோ நிறுவனத்தால் உலகளாவிய ஆசிரியர் விருதும் வழங்கப்படுகிறது.

சமஸ்கிருதம், பெர்சிய மற்றும் அரேபிய மொழி கற்றுத்தரும் ஆசிரியர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு கற்று தரும் சிறப்பு ஆசிரியர்களுக்கும் பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கும் தனித்தனியே நல் ஆசிரியர் விருது வழங்கப்படுகிறது. அதே போன்று மெட்ரிக் , சிபிஎஸ்இ பள்ளி ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட வேண்டும் என்பது மாணவர்களின் எதிர்பார்ப்பு. 

ஆசிரியர்களில் விருதுக்கு தகுதியானவர் யார்? இது ஒரு மில்லியன் டாலர் கேள்வி. விருது என்பது கேட்டுப் பெறுவதாகவும் விண்ணப்பித்துக் கிடைப்பதாகவும் இருந்துவிடக் கூடாது. இன்று இணையத்தில் குறிப்பிட்ட தொகையை செலுத்தி யார் வேண்டுமானாலும் யாரிடமிருந்தோ விருது பெறும் நடைமுறை வந்து விட்டது. இது விருதின் மரியாதையைக் குறைத்து விடும்.

ஆசிரியர்களில் சிலர் திறமையுள்ள ஆசிரியர்கள் என்றும், சிலர் பயனுள்ள ஆசிரியர்கள் என்றும் வகைப்படுத்தப்படுகிறார்கள்.  திறமையான ஆசிரியர்கள் தங்களுக்கு தரப்பட்ட பாடங்களை சரியாகக் கற்றுத் தருகிறார்கள். பயனுள்ள ஆசிரியர்கள் பாடங்களை சிறப்பாகக் கற்றுத் தருவதுடன் மாணவரின் தேவையை உணர்ந்து பாடத்திட்டத்தில் இல்லாத விஷயங்களையும் மாணவருக்குக் கற்றுத் தருகிறார்கள். திறமையான ஆசிரியர்கள் தேர்வு முடிவைப் பற்றி மட்டும் கவலைப்படுகிறார்கள். பயனுள்ள ஆசிரியர்கள், மாணவர்களின் எதிர்காலத்தை உருவாக்குகிறார்கள். இந்த இரண்டு விதமான ஆசிரியர்களின் தன்மையும் ஒரே இடத்தில் இணைகிறபோது ஆரோக்கியமான ஆசிரிய - மாணவ சமுதாயத்தை உருவாக்க முடியும். அரசும் இதை உணர்ந்து பொதி இல்லா மாணவர் சமுதாயத்தை உருவாக்கப் பாடுபடுகிறது. "பயிற்றுப் பல கல்வி தந்து இப்பாரினை உயர்த்திடல் வேண்டும்" என்று ஆசிரியர் கடமை பற்றி பாரதிதாசன் கூறுகிறார். அத்தகைய கடமை உணர்வுள்ள  ஆசிரியர் ஒரு மாணவனுக்கு மிகப்பெரிய உந்துதலாகவும், அவன் அடைய விரும்பும் லட்சியத்துக்கு வழிகாட்டியாகவும் இருப்பார். அவரே நல்லாசிரியர்.

சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்புவரை பள்ளி ஆசிரியரைக் கண்டால் உட்கார்ந்து இருக்கும் மாணவர்கள் எழுந்து நிற்பதையும், மடித்துகட்டிய வேட்டியை அவிழ்த்துவிடுவதும் இயல்பான ஒன்று. ஆசிரியர்களிடத்தில் மாணவர்களுக்கு பக்தி கலந்த மரியாதை இருந்தது. இன்று அந்தநிலை மாறிவிட்டது. என் மகன் தப்பு செய்தால், முட்டுக்கு கீழ் உரித்து விடுங்கள் என்று கூறி மாணவர்களை பள்ளியில் சேர்க்கும் பெற்றோர்களின் நிலைமை மாறி, என் மகனை அடித்து விட்டார் என்று ஆசிரியர் மீது காவல் துறையிலும், மனித உரிமை ஆணையத்திலும் புகார் கொடுக்கும் அளவுக்கு இன்றைய நிலைமை மாறி  இருக்கிறது.  இந்நிலை மாற வேண்டும்.

மைக்கேல் ஏஞ்சலோ என்பவர் உலகப்புகழ் வாய்ந்த சிற்பி. இவர் ஒரு சிலையை வடிக்க சலவைக்கல்லைத் தேர்ந்தெடுக்கும் போதே, “இந்த சலவைக் கல்லுக்குள் ஒரு தேவ தூதனைப் பார்த்தேன். அதிலிருந்து அவனை விடுவிக்கும் வரைக்கும் செதுக்கினேன்” என்று கூறியிருக்கிறார். உலகில் ஒருவர் எந்த ஒரு உயர்ந்த நிலையில் இருந்தாலும், அவர் வகுப்பறை என்ற பட்டறையில் ஒரு ஆசிரியரால் உருவாக்கப்பட்டிருக்கிறார் என்பதே உண்மை.  மாணவர்கள் ஒவ்வொருவரும் செதுக்கப்பட வேண்டிய சலவை கற்களாகவே ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்படுகிறார்கள். மாணவரின் திறமைக்கேற்ப அவர்களை செதுக்கி உருவாக்குவது ஆசிரியரின் கடமை. ஒரு மாணவனுக்கு இறைவன் தந்த வரம் ஆசிரியர். 

மாவீரன் அலெக்சாண்டர் மகனாகப் பிறந்தவுடன் அவரது தந்தையான மாசிடோனிய மன்னர் பிலிப் தனக்கு மகன் பிறந்ததைவிட தன் மகன் பிறந்த நேரத்தில்  தனது மகனுக்கு கல்வி கற்பிக்க அரிஸ்டாட்டில் என்ற பேரரறிஞர் இருக்கிறார் என்று அகமகிழ்ந்ததாக வரலாறு கூறுகிறது. இந்தியாவின் மிகச்சிறந்த குடியரசுத்தலைவர் அப்துல்கலாம், தனது பதவிக்காலம் முடிந்ததும், சென்னை ஐ.ஐ.டி.யின் ஆசிரியர் பணியில் தன்னை இணைத்துக் கொண்டார். மாணவர்களுக்கு கற்பிப்பது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருவதாக அவர் பல நேரங்களில் குறிப்பிட்டிருக்கிறார். 

“நான் இன்று வரை வாழ்வதற்காக என் பெற்றோருக்கு கடமைப்பட்டுள்ளேன்; நான் நன்றாக வாழ்வதற்காக என் ஆசிரியருக்கு கடமைப்பட்டுள்ளேன்” என்று மகா அலெக்சாண்டர் கூறி இருக்கிறார். வில்லியம் மாக்லே என்ற அறிஞர் “குழந்தைகள் நிறைய வாய்ப்புகளை உள்ளடக்கிய பெட்டகம் போன்றவர்கள். இதனை ஒரு பெற்றோர் அல்லது ஆசிரியர்களால் தான் அடையாளம் காணமுடியும்” என்று கூறுகிறார். 

நன்றிக்கு வித்தாகும் நல்ஒழுக்கம் என்கிறார் வள்ளுவர். இந்த ஒழுக்கத்தை மாணவர்களின் வாழ்வில் விதைப்பவர்கள் ஆசிரியர்கள். பண்பட்ட மனதை உருவாக்குவதே கல்வியின்  நோக்கம்.  இதற்கென்றே தனியாக நல்லொழுக்க வகுப்பு என்று ஒவ்வொரு வகுப்பிலும் முன்பு நடத்தப்பட்டது. இந்த வகுப்புகளில் ஆசிரியர்கள், ஒழுக்கத்தின் மேன்மை, சுத்தம், சுகாதாரம், ஒற்றுமையின் வலிமை, இன, மத பாகுபாடின்மை போன்றவற்றை போதித்து மாணவர்களை நல்லொழுக்கப்படுத்தினர். இன்று அத்தகைய வகுப்புகள் இல்லை என்பதும், பாடத்திட்டத்தில் உள்ள பாடங்கள் மட்டுமே போதிக்கப்பட்டு, தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்யும் இயந்திரங்களாக கல்விக் கூடங்கள் மாறிவிட்டதையும் காண முடிகிறது. புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு, பாடத்திட்டத்தில் நல்லொழுக்க வகுப்பு ஏற்படுத்த வேண்டும்.

(செப். 5 - ஆசிரியர் நாள்)

[கட்டுரையாளர் - வழக்கறிஞர்]

summary

Teachers day: Moral education classes are needed in schools again

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments