அறிக்கை தரும் அதிர்ச்சி!
நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தும் ரயில் நிலையங்களின் கட்டமைப்பும், தூய்மையும் மேம்படுத்தப்பட்டிருப்பதுபோல, பயணிகளின் அத்தியாவசியத் தேவைகள் கவனம் பெறவில்லை.
வானூர்தியின் பயனாளர்களின் எண்ணிக்கை நாளும் பொழுதும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதைப் போலவே மிக அதிக அளவில் ரயிலில் பயணிப்பதும் தொடர்ந்த வண்ணம்தான் இருக்கிறது. புதிது புதிதாக வழித்தடங்கள், புதிய அதிநவீன விரைவு ரயில்கள், அதிகரித்த இருக்கை, படுக்கை வசதிகள் என்று கடந்த பத்தாண்டுகளில் இந்திய ரயில்வேயில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் ஏராளம். பல மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன; வசதிகள் மேம்படுத்தப்பட்டிருக்கின்றன; இந்திய ரயில்வேயை சர்வதேசத் தரத்துக்கு மேம்படுத்தும் முனைப்பு முன்னெடுக்கப்படுகிறது என்பதில் யாருக்குமே சந்தேகம் இல்லை.
அதே நேரத்தில், பல அடிப்படை வசதிகளில் இந்திய ரயில்வே இன்னும் கவனம் செலுத்தாமல் இருக்கிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தும் ரயில் நிலையங்களின் கட்டமைப்பும், தூய்மையும் மேம்படுத்தப்பட்டிருப்பதுபோல, பயணிகளின் அத்தியாவசியத் தேவைகள் கவனம் பெறவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியிருக்கிறது மத்திய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரியின் (சிஏஜி) அறிக்கை.
இந்திய ரயில்வேயின் மேம்பாட்டுக்கு மிகப் பெரிய அளவில் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது என்றாலும், மிக அதிகமாக மக்கள் பயன்படுத்தும் பொது இடமான ரயில் நிலையங்கள் சில அடிப்படை வசதிகளிலும், சுகாதாரத்திலும் பின்தங்கி இருப்பதை அந்த அறிக்கை சுட்டிக்காட்டி இருக்கிறது. இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 512 ரயில் நிலையங்களில் தணிக்கை மேற்கொண்ட சிஏஜி, ரயில் நிலையங்களில் வழங்கப்படும் குடிநீரின் தரம் குறித்தும், பயணிகளுக்குத் தரப்படும் வசதிகள் குறித்தும் பல அதிர்ச்சிகரமான உண்மைகளை வெளிப்படுத்தி இருக்கிறது.
Advertisement
Advertisement
7,424 ரயில்களில் சுமார் 292.4 கோடி பயணிகள் ஆண்டுதோறும் பயணம் மேற்கொள்கிறார்கள். அவர்களது வசதிக்காக நாடு தழுவிய அளவில் 5,908 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த ரயில் நிலையங்களிலும், பயணிகள் ரயில்களிலும் பாதுகாப்பு, கழிப்பறை சுகாதாரம், பயணிகளுக்கு வழங்கப்படும் சேவைகள் உள்ளிட்டவற்றில் குறைபாடுகள் காணப்படுவதை வெளிப்படுத்தி இருக்கிறது அறிக்கை.
இந்திய ரயில்வேயின் 16 ரயில்வே பிரிவுகளில் உள்ள 512 ரயில் நிலையங்களில் 458 ரயில் நிலையங்கள், அதாவது 89% முழுமையான தரத்துடன் இல்லாமல் இருப்பது சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. 2018 ஆகஸ்ட் மாதம் ரயில்வே வாரியம், ரயில் நிலையங்களுக்கான குறைந்தபட்ச அடிப்படை வசதிகளைப் பட்டியலிட்டு அவை எல்லா ரயில் நிலையங்களிலும் கட்டாயம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இருப்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அந்த அடிப்படை வசதிகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட வசதிகள் 89% ரயில் நிலையங்களில் வழங்கப்படுவதில்லை என்கிறது சிஏஜி அறிக்கை.
இந்தியா முழுமையிலும் எடுத்துக் கொண்டால் 54 ரயில் நிலையங்கள் மட்டும்தான், ரயில்வே வாரியம் நிர்ணயித்த அடிப்படை வசதிகளை உறுதி செய்கின்றன. சிஏஜி அறிக்கை வெளிப்படுத்தி இருக்கும் அதிர்ச்சியான தகவல், மக்கள் சுகாதாரம் சார்ந்தது. பல ரயில் நிலைய நடைமேடைக் குடிநீர்க் குழாய்களில் இருந்து எடுக்கப்பட்ட குடிநீர் மாதிரிகளை சோதனைகளுக்கு அனுப்பிப் பரிசோதித்தபோது, அவற்றில் கோலிஃபார்ம் நுண்ணுயிரியும், இ.கோலி நுண்ணுயிரியும் இருப்பது தெரியவந்திருக்கிறது. பல ரயில் நிலையக் குடிநீர் குழாய்களின் தண்ணீரில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக குளோரின் காணப்பட்டதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது. 479 ரயில் நிலையங்களில் குடிநீருக்கான அனைத்து அடிப்படைத் தர அளவுகள் காணப்படவில்லை என்கிறது அறிக்கை.
ரயில் நிலையங்களில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் பல வழங்கப்படாமல் இருப்பதைத் தணிக்கை அறிக்கை வெளிச்சம் போடுகிறது. 42% ரயில் நிலையங்களின் நடைமேடைகளிலும், பயணிகள் ஓய்வறைகளிலும் மின் விசிறிகள் இல்லை அல்லது இயங்குவதில்லை; 40% நிலையங்களில் குளிர்ந்த குடிநீர் வழங்கும் 'கூலர்கள்' இல்லை; 27% ரயில் நிலையங்களில் போதிய அளவில் குடிநீர்க் குழாய்கள் இல்லை அல்லது இருந்தாலும் அவை செயல்படுவதில்லை; 22% ரயில் நிலையங்களில் கழிப்பறைகள் இல்லை அல்லது பயன்படுத்தும் நிலையில் இல்லை; 15% நிலையங்களில் போதிய அளவில் அமரும் வசதி வழங்கப்படுவதில்லை; 13% நிலையங்களில் நடைமேடைகளுக்குக் கூரையில்லை.
இவையெல்லாம் போதாதென்று பயணிகளின் வசதிக்காக திட்டமிடப்பட்ட 395 திட்டங்களில், 59% திட்டங்கள் கடந்த நான்காண்டுகளாக முடங்கிக் கிடக்கின்றன. இத்தனைக்கும் நிதியாதாரம் ஒரு பிரச்னையல்ல என்பதுதான் வேடிக்கை. கடந்த ஐந்தாண்டுகளாக 36% முதல் 44% வரையிலான பயணிகள் வசதிக்கான பட்ஜெட் நிதி ஒதுக்கீடு செலவிடப்படாமல் இருக்கிறது.
சிஏஜி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உடனடியாக அனைத்து ரயில் நிலையங்களிலும் சுத்தமான பாதுகாக்கப்பட்ட குடிநீரை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டிருப்பதும், அறிக்கை சுட்டிக்காட்டி இருக்கும் குறைபாடுகளைக் களைய ஆலோசனைகள் மேற்கொண்டிருப்பதும் பாராட்டுக்குரியது. பாதுகாப்பான குடிநீர், சுத்தமான கழிப்பறைகள், நடைமேடைகளில் காத்திருப்பு வசதிகள் - இவற்றை உறுதி செய்யாமல் அதிவேக ரயில்களை இயக்குவதில் அர்த்தமில்லை!
தூங்குக தூங்கிச் செயற்பால; தூங்கற்க
தூங்காது செய்யும் வினை.
காலந்தாழ்த்திச் செய்யத் தக்கவற்றைக் காலந் தாழ்ந்தே செய்ய வேண்டும். காலந்தாழ்த்தாமல் செய்ய வேண்டிய செயல்களைச் செய்யக் காலந்தாழ்த்தக் கூடாது.
திருக்குறள் (எண் 672) அதிகாரம்: வினைசெயல்வகை
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.