செய்திகள் 5; இலக்குகள் 7!
பிரதமரின் சுதந்திர தின உரை பற்றிய தலையங்கம்....
பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சியில் இருந்து இந்தியா விடுதலையடைந்து 79 ஆண்டுகள் கடந்துவிட்டன.
எண்பதாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் இந்த வேளையில், நாம் கடந்து வந்திருக்கும் பல சவால்களை எண்ணிப் பார்க்கும்போது திகைப்பும், வியப்பும் விளைகின்றன. கடந்த 79 ஆண்டுகளில், இடைக்காலப் பிரதமராக இருந்த குல்சாரிலால் நந்தாவையும் சேர்த்து 15 பிரதமர்கள், தேசத்தின் அடுத்தடுத்த வளர்ச்சிக்கு பங்களித்திருப்பதை யாரும் மறந்துவிடவோ, மறுத்துவிடவோ முடியாது. தொடர்ந்து அதிக ஆண்டுகள் பதவி வகித்தவர்கள் என்கிற முறையில் முதல் பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேருவும், இப்போதைய பிரதமர் நரேந்திர மோடியும் இந்தியாவின் வளர்ச்சிக்கு ஆற்றியிருக்கும் பங்களிப்புகள் கணிசமானவை என்பதும் உண்மை.
1947-இல் இந்தியா விடுதலையடைந்தபோது, அடுத்த எண்பது ஆண்டுகளில் இந்த அளவிலான வளர்ச்சியை நாம் எட்டப் போகிறோம் என்று யாரும் கனவில்கூட எதிர்பார்த்திருக்க முடியாது. 1947-இல் வெறும் 38 கோடியாக இருந்த இந்தியாவின் மக்கள்தொகையில் 80% வறுமைக் கோட்டுக்குக் கீழே இருந்ததை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
Advertisement
Advertisement
அப்போது எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் வெறும் 18.3%. மொத்த உணவு உற்பத்தி வெறும் 5 கோடி மெட்ரிக் டன்.
இப்போது 2026-இல் நமது மக்கள்தொகை 140 கோடி; வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பவர்கள் 11%; எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் 80%. அப்போது தனிமனித சராசரி ஆயுள்காலம் 32 என்றால், இப்போது அதுவே 72.
இவையெல்லாம், தொடர்ந்து அதிகரித்து வந்த மக்கள்தொகையுடன், இந்தியா ஆண்டுதோறும் எதிர்கொண்ட இயற்கைச் சீற்றங்களையும், அவ்வப்போது நாம் சந்தித்த நேர்முக, மறைமுக படையெடுப்புகளையும் மீறி அடைந்திருக்கும் சாதனைகள் எனும்போது, இந்த வளர்ச்சிக்காக ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்பட வேண்டும்.
1947-இல் இந்தியாவின் ஜிடிபி வெறும் 30 பில்லியன் டாலர். இப்போது அது 4 டிரில்லியன் டாலரை எட்டுகிறது. 1947-இல் வெறும் 1,362 மெகாவாட் மின்சாரத்துடன் இருந்த இந்தியா இப்போது உலகிலேயே மிக அதிகமாக மின்சாரம் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாக உயர்ந்திருக்கிறது.
100 கோடிக்கும் அதிகமான இணையதள நுகர்வோர், உலகின் எண்மப் பணப் பரிவர்த்தனையில் ஏறத்தாழ 40% பங்கு என்று இந்தியாவின் அபரிமிதமான வளர்ச்சிகள் அனைத்தும்,
ஜனநாயகக் கட்டமைப்பில் வளர்ந்திருப்பதை நினைத்து நாம் பெருமைப்படலாம்.
இந்தப் பின்னணியில்தான் நாம், பிரதமர் செங்கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றி, 80-ஆவது சுதந்திர தின விழாவில் ஆற்றிய உரையைப் பார்க்க வேண்டும். அவர் ஆற்றிய 13-ஆவது சுதந்திர தின உரையில் ஐந்து முக்கியமான செய்திகளை நாம் பார்க்க முடிகிறது. அது மட்டுமல்லாமல், அவர் "சப்த தாரா' என்று அடுத்தகட்ட இலக்காக வளர்ச்சிக்கான ஏழு துறைகளை குறிப்பிட்டிருக்கிறார். வளர்ச்சி அடைந்த பாரதத்தின் மையப் புள்ளியாக அவர் இளைய தலைமுறையினரை அடையாளம் காட்டி இருப்பது எதிர்பார்த்த ஒன்றுதான்.
இந்தியா பொருளாதாரத்தில் மட்டுமல்லாமல், தவிர்க்க முடியாத உலக சக்தி; தயாரிப்புக்கான இடுபொருள்களுக்கு இறக்குமதிகளை நம்பியிராமல் தன்னிறைவு; புதிய தொழில்நுட்பங்கள் இந்திய இளைஞர்களுக்குக் கிடைப்பது; வன்முறையையும் பயங்கரவாதத்தையும் உள்ளடக்கிய சிந்தனையுடன் இருக்கும் போக்கு (திமாகி நக்ஸல்கள்); நம்பிக்கை, வளர்ச்சி, தற்சார்பு குறித்த சிந்தனையை வளர்க்காமல், அச்சம், எதிர்மறைக் கருத்துகள், இந்தியாவை பலவீனப்படுத்துதல் ஆகியவற்றை முன்னெடுக்கும் எதிர்க்கட்சிகள்- இவைதான் பிரதமர் தனது உரையில் குறிப்பட்ட ஐந்து செய்திகள்.
உற்பத்தித் துறை; வேளாண் துறை; தொழில்நுட்பம்; கட்டமைப்பு; பாதுகாப்பு; பசுமை மற்றும் கடல்சார் பொருளாதாரம்; மென்பொருள் ஆகியவைதான் பிரதமர் தனது உரையில் "சப்த தாரா' என்று குறிப்பிட்ட, அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியா முனைப்புக் காட்ட வேண்டிய ஏழு துறைகள். அவரது உரையில் இளைஞர் சமுதாயம் குறித்த அச்சமும் கவலையும் வெளிப்படையாகத் தெரிந்தன.
பிரதமர் நரேந்திர மோடியின் 75 நிமிட சுதந்திர தின உரையில் இளைஞர்கள் குறித்து 43 தடவைகள் குறிப்பிடப்பட்டது.
அதாவது ஒவ்வொரு ஒன்றரை நிமிடத்திலும் இளைஞர்கள் குறித்த கருத்து இடம் பெற்றது. இது புதிதொன்றுமல்ல.
அண்மையில் நடந்த இளைஞர்கள் போராட்டம்தான் இதற்குக் காரணம் என்று சொல்லிவிட முடியாது. கடந்த மூன்றாண்டுகளாகப் பிரதமர் இளைஞர்கள், மகளிர் குறித்துத் தனது உரையில் வலியுறுத்தி வந்திருக்கிறார். 2023-இல் 21 தடவை, 2024-இல் 27 தடவை, 2025-இல் 29 தடவை என்று அதிகரித்து, இந்த முறை அது 43 தடவைகளாகி இருக்கிறது.
2014 முதல் 2026 வரையிலான பிரதமர் கடந்த 13 ஆண்டுகளில் ஆற்றிய சுதந்திர தின உரைகளை ஒப்பிட்டுப் பார்த்தால், நரேந்திர மோடி ஆட்சியில் இந்தியா அடைந்திருக்கும் முன்னேற்றங்கள், சாதனைகள், எதிர்கொண்ட சவால்கள் என்னென்ன என்பதை நாம் பார்க்க முடியும். நம்பிக்கையை ஏற்படுத்தி வழி நடத்துவதுதான் ஒரு தலைவனின் கடமை. பிரதமரின் உரை அதற்கு உதாரணம்.
விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்துஇனிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்.
கருத்துக்களை ஒழுங்காகக் கோத்து இனிமையாகச் சொல்ல வல்லவரைப் பெற்றால், உலகம் விரைந்து அவருடைய
ஏவலைக் கேட்டு நடக்கும்.
திருக்குறள் (எண் 648) அதிகாரம்: சொல்வன்மை
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.