பெருவெள்ளக் கோரதாண்டவம்!
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளம் அந்த நாட்டைச் சூறையாடியிருக்கிறது.
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளம் அந்த நாட்டைச் சூறையாடியிருக்கிறது. வெள்ளத்தின் கோர தாண்டவத்தில் பல கிராமங்கள் உருக்குலைந்துவிட்டன. ஏராளமான வீடுகள், கட்டடங்கள், பாலங்கள், 10-க்கும் மேற்பட்ட நீர்மின் நிலையங்கள் மற்றும் பல உள்கட்டமைப்புகள் முற்றிலும் சேதமடைந்திருக்கின்றன. இதுவரை 579 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்,
320 இந்தியர்கள் உள்பட 2,000-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என வெளியாகியிருக்கும் தகவல் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது.
திபெத்தின் லெண்டே நதியில் உருவான பெருவெள்ளம், போடே கோஷி நதி வழியாக நேபாளத்தின் மத்திய மாவட்டங்களுக்குள் புகுந்து பேரழிவை விளைவித்தது. மலைப் பகுதியில் இருந்து சகதி, பாறைகளுடன் இரு கரைகளையும் சூழ்ந்தபடி பல அடி உயரத்துக்கு சீறிப் பாய்ந்த வெள்ளம், திரிசூலி, நாராயணி நதிகளிலும் பாய்ந்ததால், நுவாகோட், தாடிங் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டு, நேபாளம் சந்தித்த மிக மோசமான இயற்கைப் பேரிடர்களில் ஒன்றாக இது மாறியுள்ளது.
Advertisement
Advertisement
திபெத்தில் பெரும் பனிப்பாறை சரிவால் லெண்டே நதியின் நீரோட்டம் தற்காலிகமாக தடைபட்டு, பின்னர் உடைப்பு ஏற்பட்டுள்ளது. நேபாள எல்லையில் இருந்து 20 கி.மீ. தொலைவில் நேரிட்ட இந்த நிகழ்வால், லெண்டே ஆற்றில் பனிக்கட்டிகள், பாறைகள், சகதியுடன் பிரவாகமெடுத்த பெருவெள்ளம், நேபாள எல்லையில் போடே கோஷி நதியில் கலந்தது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையத் தகவலின்படி பனிப்பாறை சரிவே இந்தப் பெருவெள்ளத்துக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள ஆறுகளில் நீர்மட்டம் 30 நிமிஷங்களுக்குள் 9 மீட்டர் வரை உயர்ந்ததால் ஆற்றங்கரையோரப் பகுதியில் இருந்த கட்டடங்கள் மூழ்கி, ஏராளமானோர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டனர். குறைந்த நேரத்தில் இந்த அளவுக்கு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தப்பிக்கும் வாய்ப்பு குறைவாக இருந்ததாக காத்மாண்டைச் சேர்ந்த பருவநிலை ஆய்வு அமைப்பு ஒன்று தெரிவித்திருக்கிறது.
பனிப்பாறை சரிவுகளுக்கு முக்கியக் காரணம் பருவநிலை மாற்றம். வேகமாக வெப்பமடைந்துவரும் இமயமலை பகுதியில் அமைந்துள்ள நேபாளத்தில் ஆயிரக்கணக்கான பனிப்பாறைகள் உள்ளன. வெப்பநிலை உயர்வால் இவை உருகி நிலையற்ற தன்மைக்கு உள்ளாகி வருகின்றன. நேபாளம் உள்ளிட்ட இந்து குஷ் இமயமலைப் பகுதியில் உள்ள பனிப்பாறைகளிலிருந்து பனி உருகும் விகிதம் 2000-ஆம் ஆண்டிலிருந்து இப்போது இரு மடங்காக அதிகரித்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கடல் மட்டத்திலிருந்து 4,500 முதல் 6,000 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இமயமலையின் பனிப்பாறை பகுதிகளில் 78% வெப்பமடைதலின் தாக்கத்துக்கு உள்ளாகியிருக்கின்றன. 2000 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பனிப்பாறைகள் ஆண்டுதோறும் 267 ஜிகா டன் பனியை இழந்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை தெரிவிக்கிறது. இது, ஏறக்குறைய கிசாவின் 46,500 பெரிய பிரமிடுகளின் எடைக்குச் சமம் என்பதிலிருந்து பனிப்பாறைகளின் பிரம்மாண்டத்தைப் புரிந்துகொள்ளலாம்.
புவி வெப்பமடைதலை 1.5 டிகிரி செல்சியஸ் அளவுக்குள் கட்டுப்படுத்த முடிந்தாலும்கூட, கிரீன்லாந்து மற்றும் அண்டார்டிகாவில் உள்ள பனிப்பாறைகளைத் தவிர்த்து, உலகின் பிற பகுதிகளில் உள்ள பனிப்பாறைகளில் 50% வரை 2100-ஆம் ஆண்டுக்குள் இழக்க நேரிடும் என ஆய்வுகள் கணிக்கின்றன. இதனால், அந்தப் பனிப்பாறைகளுக்கு கீழ்ப்பகுதி நாடுகளில் வசிக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கு ஆபத்து எந்த நேரமும் காத்திருக்கிறது.
பொருளாதாரத்திலும், வளர்ச்சியிலும் போட்டியிடும் உலகம், புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்தும், குறைக்கும் என்பதை இனிமேல் பெரிய அளவில் எதிர்பார்க்க இயலாது. இமயமலையின் பனிப்பாறைகள், பனி ஏரிகள் உடைப்பையும் தவிர்க்க முடியாது. ஆனால், அதனால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பது எப்படி என்பது குறித்துச் சிந்திப்பதுதான் புத்திசாலித்தனமான, மனித சக்தியால் செய்யக் கூடியதாக இருக்க முடியும்.
இமயமலை பனிப்பாறைகளால் ஏற்படும் பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிவதில் இந்தியாவும், சீனாவும் முக்கியப் பங்காற்ற வேண்டியதன் அவசியத்தை நேபாள பெருவெள்ளம் உணர்த்தி இருக்கிறது. பனிப்பாறைகள் உருகும் வேகம், உடையும் அபாயத்தை செயற்கைக்கோள் உதவியுடன் முன்கூட்டியே கண்டறிதல், அந்தத் தகவல்கள் மூலம் அரசுத் துறைகளை ஒருங்கிணைத்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் போன்றவை பலனளிக்கக் கூடியதாக இருக்கும்.
இயற்கையின் எச்சரிக்கையை மீறி மலையைக் குடைதல், சுரங்கம் அமைத்தல் போன்ற பணிகள் தொடர்ந்து நடக்கின்றன. சுற்றுலா வளர்ச்சி என்கிற பெயரில் மலைப் பகுதிகளில் எந்த விதிமுறையையும் பின்பற்றாமல் கட்டடங்களைக் கட்டி இயற்கையுடன் விளையாடுவதும் தடையின்றி நீடிக்கிறது. இயற்கை எச்சரித்துக் கொண்ட இருக்கிறது; அதிலிருந்து படிப்பினையைக் கற்றுக் கொள்ளத்தான் யாருக்கும் ஆர்வம் இல்லை!
இமயமலை நாடுகளான நேபாளம், இந்தியா, திபெத், பூடான், பாகிஸ்தான் ஆகியவை எப்போது வேண்டுமானாலும் இதுபோன்ற பெருவெள்ள அபாயத்தை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் நேரிட்டிருக்கிறது என்பதைத்தான் நேபாள பெருவெள்ளம் உணர்த்துகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.