FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தலையங்கம்

சோகத்தில் முடிந்த சுற்றுலா...

வியத்நாம் ஃபூ குவோக் தீவு அருகில் ஏற்பட்ட படகு விபத்து குறித்த தலையங்கம்....

Updated On : 16 ஜூலை 2026, 6:00 am IST
வியத்நாம் படகு விபத்து
பகிர்:

வியத்நாம் ஃபூ குவோக் தீவு அருகில் ஏற்பட்ட படகு விபத்தில் 15 பேர் மரணமடைந்திருப்பது வேதனை தருகிறது. இந்தத் துயர சம்பவத்தில் இறந்தவர்களில் 10 பேர் தமிழர்கள் என்பது வேதனையை மேலும் அதிகரிக்கிறது. "லாவா' கைப்பேசி நிறுவனம் இந்தியாவில் இருந்து இன்பச் சுற்றுலா அழைத்துச் சென்ற 105 பேர் கொண்ட குழுவில், விபத்துக்குள்ளான படகில் 32 பேர் இடம்பெற்றிருந்தனர்.

சுற்றுலாக்களில், குறிப்பாக சாகச சுற்றுலாக்களில் (அட்வென்ச்சர் டூரிஸம்) பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடிப்பது மிக மிக அவசியம். வியத்நாம் படகு விபத்தில் உயிர் பிழைத்தவர்கள் தரும் தகவல்களிலிருந்து இரண்டு முக்கியமான விதிமுறை மீறல்கள் நடந்திருப்பது தெரிய வந்திருக்கிறது. முதலாவதாக, படகில் சென்றவர்கள் இருக்கைப் பட்டை (சீட் பெல்ட்) அணிந்திருக்கவில்லை. இரண்டாவதாக, அவர்கள் மிதவை அங்கிகள் (லைஃப் ஜாக்கெட்ஸ்)அணியவில்லை என்பது தெரிகிறது.

திடீரென்று ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக, சுற்றுலாப் பயணிகளுடன் விரைந்து கொண்டிருந்த விசைப்படகு கட்டுப்பாட்டை இழந்து சட்டென்று இடதுபுறமாகத் திரும்பியது. அந்தப் படகின் வலது பகுதியில் அமர்ந்திருந்த அத்தனை பயணிகளும் இடது பகுதிக்குத் தள்ளப்பட்டு, அங்கிருந்த பயணிகள் மீது விழுந்தனர். அத்தனை பயணிகளின் பாரமும் ஒரு புறமாகச் சாய, படகு தனது சமநிலையை இழந்து குடை சாய்ந்தது.

Advertisement

Advertisement

ஆண்டுதோறும் சுமார் மூன்று கோடி இந்தியர்கள் வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள். அவர்களில் கணிசமானவர்கள் சுற்றுலா செல்லும் பயணிகள். சிங்கப்பூர், மலேசியா அல்லாமல் தாய்லாந்தும், வியத்நாமும் இந்திய சுற்றுலாப் பயணிகள் விரும்பிச் செல்லும் நாடுகளாகி இருக்கின்றன.

அதிவேகமாக வளர்ச்சி அடைந்துவரும் இன்பச் சுற்றுலாவை ஊக்குவிக்கும் மேலே குறிப்பிட்ட நாடுகளும், இந்தியாவைப் போலவே பயணிகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுப்பதில்லை என்பது தெரிகிறது. மிதவை அங்கி அணிந்திருந்தால், தண்ணீரில் மிதக்கும்போது தலை வெளியே இருக்கும். சொகுசுப் படகுகளில் போதுமான மிதவை அங்கிகள் இருப்பதில்லை; இருந்தாலும் பயணிகளுக்கு வழங்கி, அவற்றை அணிவது கட்டாயப்படுத்தப்படுவதில்லை.

அடுத்ததாக, அனைத்துப் பயணிகளும் படகில் பயணிக்கும்போது இருக்கைப் பட்டை (சீட் பெல்ட்) அணிந்திருப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஃபூ குவோக் விபத்தில் அதுவும் பின்பற்றப்படவில்லை என்றுதான் தோன்றுகிறது. இருக்கைப் பட்டை அணிந்திருந்தால் பயணிகள் ஒரு புறமாகச் சரிந்து விபத்து ஏற்பட்டிருக்காது; மிதவை அங்கி அணிந்திருந்தால், பெரும்பாலான பயணிகள் உயிரிழந்திருக்க மாட்டார்கள்.

இன்னொரு முக்கியமான அதிகம் பேசப்படாத குறைபாடும் ஒன்று இருக்கிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா நுழைவு அனுமதி (விசா) கேட்டு விண்ணப்பிக்கும்போது, ஆயுள் மற்றும் விபத்து காப்பீடு கட்டாயம். காப்பீடு செய்யாத காரணங்களுக்காகவே விசா மறுக்கப்படும். ஆனால், தாய்லாந்து, வியத்நாம் உள்ளிட்ட பல ஆசிய நாடுகளில் சுற்றுலாப் பயணிகளின் காப்பீடு கட்டாயம் இல்லை.

இப்போது வியத்நாம் சுற்றுலா சென்றவர்கள் தனியார் கைப்பேசி விற்பனை இலக்கை எட்டியதற்காக தனியார் பெருநிறுவனத்தால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்தத் துயர சம்பவத்தில் இறந்தவர்களுக்கு அந்தப் பெருநிறுவனம் (லாவா இன்டர்நேஷனல்) முறையாகக் காப்பீடு செய்திருக்கிறதா என்பது தெரியவில்லை.

காப்பீடு செய்வதை ஒப்பந்ததாரரின் முழு பொறுப்பாக ஒதுக்கி விடுவார்கள். அந்த ஒப்பந்த நிறுவனங்கள் பணத்தை மிச்சம் பிடிக்க, துணிச்சலுடன் இத்தகைய காப்பீடுகளைத் தவிர்த்து விடுகின்றன. சர்வதேச காப்பீடுகளில் ஆயுள் காப்பீடு மட்டுமல்ல, பொருள் இழப்பு, இறந்தால் அவரது உடலை நாட்டுக்கு திரும்பக் கொண்டுவரும் செலவு, மருத்துவச் செலவு என ஒவ்வொன்றுக்கும் சந்தா தொகை கூடிக்கொண்டே போகும்; குறைந்தது 100 டாலர் வரை ஆகும். சுற்றுலா வருவாயை இழக்க விரும்பாத நாடுகள் பலவும் காப்பீடு குறித்துப் பொருள்படுத்துவதில்லை.

உயிரிழப்புகளின் எண்ணிக்கை பெரிதாக இருக்கும்போது இந்திய அரசு தலையிடுகிறது. மாநில அரசுகளும் அரசியல் காரணங்களுக்காக சில பொறுப்புகளை ஏற்றுக்கொள்கின்றன. ஆனால், இத்தகைய விபத்தில் ஓரிருவர் மட்டுமே பாதிக்கப்படுகின்றனர் என்றால், அந்தக் குடும்பங்கள் படும் அவதி எழுத்தில் வடிக்க முடியாதது.

வெளிநாடுகளில் மேற்படிப்புக்காக செல்லும் மாணவர்கள் விபத்தில் இறப்பது அடிக்கடி நடந்து கொண்டு இருக்கிறது. இவர்களது உடலை சொந்த ஊருக்கு அனுப்ப அந்தச் சமூகத்தினரும் நண்பர்களும் திரள்நிதி திரட்டித்தான் அனுப்புகிறார்கள்.

வெளிநாட்டுப் பயணங்களில் காப்பீடு மிக முக்கியம். செல்கின்ற நாடு வலியுறுத்தவில்லை என்றாலும், அழைத்துச் செல்லும் சுற்றுலா நிறுவனம் காப்பீடு செய்வதை உறுதிப்படுத்த வேண்டும். கடவுச்சீட்டை சரிபார்க்கும்போதே, இத்தகைய பயணிகளைக் குடிபெயர்வு அதிகாரிகள் அறிவுறுத்தி, ஆலோசனை தருவதை ஒரு கடமையாக்க வேண்டும்.

தங்களது பாதுகாப்பைப் பயணிகள் உறுதிப்படுத்திக்கொள்ளத் தவறும்போது, இன்பச் சுற்றுலாக்கள் துயரச் சுற்றுலாக்களாகி விடுகின்றன. கவனக் குறைவாக இருந்து விட்டு, விதியை நொந்து என்ன பயன்?

செய்தக்க அல்ல செயக்கெடும்; செய்தக்க

செய்யாமை யானும் கெடும்.

ஒருவன் செய்யத்தகாத செயல்களைச் செய்வதனால் கெடுவான்; செய்யத்தக்க செயல்களைச் செய்யாமல் விடுவதனாலும் கெடுவான்.

திருக்குறள் ( எண் 466) தெரிந்து செயல்வகை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments