FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தலையங்கம்

இஸ்ரோ பலவீனப்படக் கூடாது!

விஞ்ஞானிகளின் விருப்ப ஓய்வு மற்றும் ராஜிநாமா கடிதங்களை ஏற்க வேண்டாம் என இஸ்ரோவுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதைப் பற்றி...

Updated On : 20 ஜூலை 2026, 4:00 am IST
பகிர்:

மாறிவிட்ட பொருளாதார சூழ்நிலையில், தனியார் துறைகள் ஊக்கப்படுத்தப்பட வேண்டியது அவசியம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அந்த ஊக்கமானது பெருமைக்குரியதும், முக்கியத்துவம் வாய்ந்ததுமான அரசின் பொதுத் துறைகளை ஊனப்படுத்தி செயலிழக்கச் செய்யும் வகையில் அமைந்துவிடக் கூடாது.

இந்திய விண்வெளி வரலாற்றில் முதன்முறையாக தனியார் நிறுவனத்தின் உள்நாட்டு தயாரிப்பில் விக்ரம்-1 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது மகிழ்ச்சி. அதேவேளையில், அண்மைக்காலமாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) விஞ்ஞானிகளில் 100-க்கும் மேற்பட்டோர் தாமாக முன்வந்து பணியிலிருந்து விலகியுள்ளது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இஸ்ரோவின் ககன்யான் உள்ளிட்ட முக்கிய திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் அனுபவம் வாய்ந்த விஞ்ஞானிகள் தனியார் துறையினர் வழங்கும் கூடுதல் ஊதியம், சலுகையின் காரணமாக வெளியேறி இருக்கிறார்கள்.

வெளியேறியவர்கள் தொழில்நுட்ப அனுபவம் வாய்ந்தவர்கள். குறிப்பிட்ட துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள். அவர்கள் பணி இடத்தை உடனடியாக நிரப்புவது அத்தனை எளிதல்ல. பல முக்கிய விண்வெளி திட்டங்களைச் செயல்படுத்திவரும் பெங்களூரில் உள்ள யு.ஆர். ராவ் செயற்கைக்கோள் மையத்திலிருந்து 80-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து 20-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் என மொத்தம் 100 முதல் 120 பேர் வரையில் வெளியேறியுள்ளனர்.விஞ்ஞானிகள் வெளியேறல் என்பது இஸ்ரோவின் எதிர்காலத் திட்டங்கள் குறித்த ரகசிய காப்புக்கும் ஆபத்து என்பதை மறந்துவிடக் கூடாது. இஸ்ரோவின் இன்றைய மற்றும் எதிர்காலத்திட்டங்களை வெளியேறல் பாதிக்கலாம். இந்திய விண்வெளித் துறையில் இஸ்ரோ மட்டுமே கோலோச்சி வந்தது. கடந்த 2020-இல் தனியார் துறைக்கு அனுமதி அளிக்கப்பட்டு முறைப்படியான கொள்கை 2023-இல் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்துதான் இந்த வெளியேற்றம் தொடங்கியது எனலாம்.

Advertisement

Advertisement

பொதுத் துறை நிறுவனங்களை சீரமைப்பது அல்லது அவற்றை மூடிவிடுவது என்ற மத்திய அரசின் கொள்கையின்படி கடந்த 2020-இல், இஸ்ரோ மையங்களில் பணியாற்றும் குரூப் ஏ விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களான தொழில்நுட்ப ஊழியர்கள் தாமாக முன்வந்து பணிவிலகல் கடிதம் கொடுத்தால் அதை அந்தந்த மையத்தின் இயக்குநர்கள் மற்றும் துறைத் தலைவர்கள் ஏற்றுக் கொள்ளலாம் என முக்கியமான நிர்வாக முடிவு மேற்கொள்ளப்பட்டது.

அதன் பிறகு நாட்டின் லட்சிய விண்வெளித் திட்டங்களில் பணியாற்றும் விஞ்ஞானிகள் வெளியேறுவது அதிகரித்தது. நாட்டில் தற்போது 400-க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட விண்வெளி ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் உள்ளன. அவை கடந்த 2025-ஆம் ஆண்டில் மட்டும் சுமார் ரூ.15,000 கோடி உள்பட மொத்தம் சுமார் ரூ.50,000 கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளன. இஸ்ரோவிலிருந்து வெளியேறிய விஞ்ஞானிகளில் சிலர் இந்த தனியார் நிறுவனங்களில் இணைந்துள்ளனர்.

தொழில்நுட்ப அறிவு நிறைந்த, அனுபவம் வாய்ந்த இந்த விஞ்ஞானிகளால் இனிமேல் தனியார் விண்வெளி நிறுவனங்களின் வெற்றிக் கதைகள் இஸ்ரோவை பின்னுக்குத் தள்ளிவிட்டு வானில் வட்டமடித்தாலும் வியப்பில்லை. உலகளாவிய அளவில் விண்வெளியில் செயற்கைக்கோள்களை நிறுவுவது அதிகரித்து வருகிறது. ஏனைய வல்லரசு நாடுகளைவிடக் குறைந்த செலவில் வெற்றிகரமாக ராக்கெட்டுகள் மூலம் செயற்கைக்கோள்களைச் செலுத்தும் தொழில்நுட்பத்தைக் கற்றுத் தேர்ந்திருக்கிறது இஸ்ரோ. இந்தியாவின் உதவியுடன், அதாவது இஸ்ரோவின்மூலம் தங்களது செயற்கைக்கோள்களை நிறுவப் பல நாடுகள் வரிசைகட்டி நிற்கின்றன.

பல தசாப்த உழைப்பின் காரணமாக, மிகப் பெரிய வருவாய் ஈட்டக்கூடிய நிலைக்கு 'இஸ்ரோ' உயர்ந்திருக்கிறது. இதற்காகப் பல்லாயிரம் கோடி ரூபாய் வரிப்பணம் இந்திய அரசால் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. அத்தனை உழைப்பையும், முதலீட்டையும் இழந்து 'இஸ்ரோ' செயலிழக்கும் விதத்தில் தனியார் துறை ஊக்குவிக்கப்படுவது ஏற்புடையதல்ல. தங்களுக்கான முதலீடுகளை ஈர்த்து, தொழில்நுட்பத் தேர்ச்சி பெற்று, புதிய பல விஞ்ஞானிகளை உருவாக்கித் தனியார் துறை இஸ்ரோவுடன் போட்டியிட்டால் மட்டுமே அது வரவேற்கத்தக்கது.

இஸ்ரோவின் சாதனைகளைத் தொடர்ந்து நிலைநாட்ட காலியாக உள்ள சுமார் 2,600-க்கும் மேற்பட்ட பணியிடங்களை விரைந்து நிரப்பவும், தகுதியான விஞ்ஞானிகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலான சிறப்புத் திட்டங்களை நிறைவேற்றவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசர அவசியம்.

குதிரைகள் ஓடிய பின்பு லாயத்தை பூட்டிய கதையாக இப்போது விழித்துக் கொண்டுள்ள மத்திய அரசு, குறிப்பிட்ட பிரிவுகளில் பணியாற்றும் விஞ்ஞானிகளின் விருப்ப ஓய்வு மற்றும் ராஜிநாமா கடிதங்களை ஏற்க வேண்டாம் என இஸ்ரோவுக்கு உத்தரவிட்டுள்ளதுடன் ராஜிநாமா விதிகளையும் கடுமையாக்கியுள்ளது. இஸ்ரோ தலைவர் வி.நாராயணன், 'தற்போது செயல்படுத்தப்பட்டுவரும் இஸ்ரோவின் திட்டங்கள் தங்கு தடையின்றி தொடர விஞ்ஞானிகளின் ராஜிநாமா மற்றும் விருப்ப ஓய்வு விதிகள் சற்று கடுமையாக்கப்பட்டுள்ளன' என்று தெரிவித்துள்ளார். இனிமேல் விஞ்ஞானிகளின் ராஜிநாமா மற்றும் ஓய்வு தொடர்பான கடிதங்களை மத்திய விண்வெளித் துறைக்கு இஸ்ரோ அனுப்பி ஒப்புதல் பெற்ற பிறகே, அது குறித்து முடிவெடுக்க முடியும் என்பது காலம் கடந்து எடுக்கப்பட்டிருக்கும் ஆறுதல் தரும் முடிவு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments