முகப்பு
தலையங்கம்

தீர்வு கிட்டுமா, மோதல் முற்றுமா?

டி.கே.சிவகுமார், இந்தியாவிலேயே பணக்கார முதல்வர் என்கிற பெயருக்கும் உரியவராகிறார். மேக்கேதாட்டுப் பிரச்னைக்குத் தீர்வு கிட்டுமா?

Updated On : 4 ஜூன் 2026, 6:54 am IST
சித்தராமையா - டி.கே. சிவக்குமார்.
பகிர்:

எந்தவித மனக்கசப்போ, ஆதரவாளர்களுக்கு இடையே மோதலோ, பலப்பரீட்சையோ இல்லாமல் கடந்த ஆறு மாதங்களாக இப்போது, அப்போது என்று தள்ளிப்போய்க் கொண்டிருந்த ஆட்சி மாற்றம் கர்நாடகத்தில் ஏற்பட்டிருக்கிறது. அந்த மாநிலத்தின் மிக முக்கியமான காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான டி.கே.சிவகுமார், கர்நாடகத்தின் 25-ஆவது முதல்வராகப் பதவி ஏற்றிருக்கிறார். எட்டு முறை கர்நாடக சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட டி.கே.சிவகுமார், இந்தியாவிலேயே பணக்கார முதல்வர் என்கிற பெயருக்கும் உரியவராகிறார். அவரது சொத்து மதிப்பு ரூ. 1,413 கோடி!

1980-இல் மாணவர் இயக்கத்தின் மூலம் அரசியலுக்கு வந்தவர் சிவகுமார். ஆரம்பத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துடன் தொடர்பில் இருந்த மாணவரான சிவகுமார், காங்கிரஸ் கட்சியின் தேசிய மாணவர் யூனியனில் (என்.எஸ்.யு.ஐ.) இணைந்ததிலிருந்து அவரது அரசியல் வாழ்க்கை தொடர்கிறது.

64 வயதான சிவகுமாரின் வளர்ச்சிக்கு கர்நாடகத்தின் முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா முக்கியமான காரணம். தனது ஒக்கலிகர் சமுதாயத்தைச் சேர்ந்த துடிப்புள்ள இளைஞரான சிவகுமார் வருங்காலத்தில், கர்நாடக அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எஸ்.எம். கிருஷ்ணா கணித்தது பொய்க்கவில்லை.

Advertisement

Advertisement

முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் மகன் உள்பட 12 அமைச்சர்கள் டி.கே.சிவகுமார் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர். பட்டியல் இனத்தவரும், மூத்த தலைவருமான ஜி.பரமேஸ்வர் துணை முதல்வராக இணைந்துள்ளார். பெங்களுரூ விதான் செüதாவில் முதல்வராகப் பொறுப்பேற்ற சிவகுமார் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த சபதத்தை நிறைவேற்றி இருக்கிறார் என்பதையும் குறிப்பிட வேண்டும்.

சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு, தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட சிவகுமார், 2019 அக்டோபர் 23-ஆம் தேதி திகார் சிறையில் இருந்து தாடியுடன் வெளிவந்ததைப் பார்த்து அவரது தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தமது அரசியல் வாழ்க்கையில் உச்சம் தொடாமல் தாடி மீசையை மழிப்பதில்லை என்று அப்போது அவர் எடுத்துக் கொண்ட சபதம் இப்போது வரை தொடர்கிறது.

சிவகுமாரின் கடுமையான உழைப்பும் கட்சி அமைப்புகளில் அவருக்கு இருக்கும் செல்வாக்கும், முதல்வர் பதவியைத் தேடித் தந்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. அதே நேரத்தில், மக்கள் செல்வாக்குப் பெற்ற தலைவரான சித்தராமையா எந்தவித எதிர்ப்போ, மறுப்போ இல்லாமல், தனது ஆதரவாளர்களைத் திரட்டிப் போர்க்கொடி தூக்காமல் பதவி விலகி இருப்பது சற்று நெருடலாகத்தான் இருக்கிறது. தனது அரசியல் வாழ்க்கையில் அதிகாரத்தை விட்டுக் கொடுக்காத சித்தராமையாவின் மௌனம், பலரையும் புருவம் உயர்த்தச் செய்திருக்கிறது.

மாநிலங்களவை உறுப்பினர் பதவியை நிராகரித்து, தேசிய அரசியலுக்குத் தடம் மாற விரும்பாத சித்தராமையாவின் அரசியல் வலிமை சற்றும் குறைந்து விடவில்லை. காங்கிரஸ் கட்சியில் மக்கள் செல்வாக்குப் பெற்ற தலைவர் என்பதுடன், அவரது சமூக ரீதியிலான வலிமையைக் குறைத்து மதிப்பிட முடியாது. முதல்வர் டி.கே.சிவகுமார் அவருடன் இணைந்து செயல்பட முடிந்தால், 2028 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வரலாற்றுச் சாதனை படைக்கக் கூடும்

கடந்த 35 ஆண்டுகளாக கர்நாடக அரசியல் வரலாற்றில், எந்தவொரு ஆளும் கட்சியும் மீண்டும் தேர்தலில் வெற்றிபெற்றதில்லை. அதேபோல, ஆட்சிக் கவிழ்ப்பு, பெரும்பான்மை இழப்பு, கட்சி மேலிடத்துடன் மோதல் உள்ளிட்டவை இல்லாமல் எந்தவொரு முதல்வரும் பதவி விலகியதும் இல்லை. அந்த வரலாற்றை எல்லாம், இப்போது நடந்திருக்கும் கர்நாடக ஆட்சி மாற்றம் மாற்றி எழுதியிருப்பதுபோல, மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியில் தொடருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சித்தராமையா தலைமையிலான ஆட்சி மகளிருக்கு இலவச பேருந்துப் பயணம், மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட பல்வேறு மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றியதுடன், நிதி நிலையையும் கட்டுக்குள் வைத்திருந்தது. கர்நாடக மாநிலத்தின் வரி வருவாய் 6.3% அதிகரித்தது மட்டுமல்லாமல், 2025-26-ஆம் நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை சுமார் ரூ. 19,500 கோடி மட்டுமே.

ராம் மனோகர் லோகியாவின் சோஷலிஸ்ட் கட்சியில் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியவர் சித்தராமையா. அவரும் நிதீஷ் குமாரும்தான் எஞ்சி இருக்கும் அந்தநாள் சோஷலிஸ்டுகள். தேவெ கௌடாவின் சீடராக முக்கியத்துவம் பெற்ற சித்தராமையா, அவருடைய குடும்ப அரசியலை எதிர்த்து வெளியே வந்து காங்கிரஸில் ஐக்கியமான நாத்திகர்.

அவருக்கு நேர் எதிரானவர் முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கும் டி.கே.சிவகுமார். ராஜ்குரு துவாரகநாத் குருஜி என்கிற ஜோதிடரின் ஆலோசனைப்படி அரசியல் காய்களை நகர்த்துபவர். அவரது பதவி ஏற்பில் கர்நாடக மாநிலத்தின் 23 முக்கியமான மடாதிபதிகள் கலந்துகொண்டிருக்கிறார்கள் எனும்போது அவரது ஆன்மிகப் பின்னணி குறித்துச் சொல்ல வேண்டியதில்லை. டி.கே.சிவகுமாரை முதல்வராக முன்னிறுத்தி இருப்பதேகூட, பாஜகவை அகற்றி நிறுத்த காங்கிரஸ் வகுத்திருக்கும் வியூகமோ என்னவோ யார் கண்டது?

மேக்கேதாட்டு அணையை கட்டியே தீருவது எனறு கங்கணம் கட்டிக்கொண்டிருப்பவர் முதல்வராகப் பதவி ஏற்றிருக்கும் டி.கே.சிவகுமார். அதற்காகப் பாதயாத்திரையே நடத்தி இருக்கிறார். தமிழக கூட்டணி அரசில் காங்கிரஸ் இடம்பெற்றிருக்கும் நிலையில் மேக்கேதாட்டுப் பிரச்னைக்குத் தீர்வு கிட்டுமா, இல்லை மோதல் முற்றுமா?

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்

மிகைநாடி மிக்க கொளல்.

ஒருவனுடைய குணங்களை ஆராய்ந்து பிறகு குற்றங்களையும் ஆராய்ந்து, மிகுதியானவை எவையென ஆராய்ந்து மிகுந்திருப்பவற்றால் தெளிந்து கொள்ள வேண்டும்.

திருக்குறள் (எண் 504) அதிகாரம்: தெரிந்து தெளிதல்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.