FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தலையங்கம்

பாஜகவின் வெற்றி ரகசியம்!

பாஜகவின் வெற்றிப் பயணம் தடையின்றித் தொடருவது எப்படி என்பதைப் பற்றி...

Updated On : 23 மார்ச் 2026, 3:30 am IST
பாஜகவின் வெற்றி ரகசியம்!
பகிர்:

பத்து மாநிலங்களில் இருந்து, மாநிலங்களவையின் 37 இடங்களுக்குக் கடந்த வாரம் தேர்தல் நடைபெற்றது. 26 உறுப்பினர்கள் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்றால், ஏனைய 11 இடங்களுக்குக் கடந்த திங்கள்கிழமை தேர்தல் நடைபெற்றது.

பிகார் (5), ஒடிஸா (4), ஹரியாணா (2) மாநிலங்களில் நடைபெற்ற மாநிலங்களவைக்கான தேர்தலில், எதிர்க்கட்சி ஒற்றுமை என்பது எந்த அளவுக்கு பலவீனமாக இருந்தது என்பது வெளிச்சம் போடப்பட்டிருக்கிறது. பாஜக (7), காங்கிரஸ் (5), திரிணமூல் காங்கிரஸ் (4), திமுக (3) உள்ளிட்டவை போட்டியில்லாமல் அவர்களது சட்டப்பேரவை எண்ணிக்கை பலத்தால் வெற்றி பெற்றன. அதேபோல, சிவசேனை, இந்திய குடியரசுக் கட்சி (அதாவலே), தேசியவாத காங்கிரஸ்,

அதிமுக, பாமக, யுபிபிஎல், தேசியவாத காங்கிரஸ் (சரத் யாதவ்) ஆகியவையும் தலா ஓர் இடம் எண்ணிக்கை பலத்தில் வெற்றி பெற்றன. எந்தவிதப் பிரச்னையும் இல்லாமல் சுமுகமாக முடிந்திருக்க வேண்டிய ஏனைய 11 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல், விவாதத்தையும், பரவலான விமர்சனத்தையும் எழுப்பி இருக்கிறது. பல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கட்சிமாறி வாக்களித்ததுதான் அதற்குக் காரணம். மாநிலங்களவைத் தேர்தல்களில் கட்சி மாறி வாக்களிப்பதும், குதிரை பேரம் நடத்தப்படுவதும் புதிதொன்றுமல்ல.

Advertisement

Advertisement

பல தொழிலதிபர்கள் தங்களது பண பலத்தாலும், அரசியல் கட்சிகளுக்கு தாராளமாக நன்கொடை வழங்குவதாலும் மாநிலங்களவை உறுப்பினர்களான கதைகள் ஏராளம் உண்டு. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி வேறுபாடின்றி கட்சித் தலைமையை மீறி உறுப்பினர்கள் அவர்களுக்கு வாக்களித்த நிகழ்வுகளும் இருக்கின்றன. மாநிலங்களவைத் தேர்தல் என்பது அவை நடவடிக்கை அல்ல. மாநிலங்களவைக்கான தேர்தலில், அரசியல் கட்சிகள் இன்னாருக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்று நிர்ப்பந்திக்க முடியாது.

அப்படி வாக்களித்தால் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. இதுவேகூட, உறுப்பினர்கள் கட்சி மாறி வாக்களிப்பதற்கும், வெளியில் தெரியாமல் பேரம் பேசப்படுவதற்கும்கூடக் காரணம் என்று சொல்லலாம். பிகாரில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி தேர்தல் நடைபெற்ற ஐந்து இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கிறது. நியாயமாகப் பார்த்தால், அனைத்து உறுப்பினர்களும் வாக்களித்திருந்தால், எதிர்க்கட்சி ஓர் இடத்தில் வெற்றி பெற்றிருக்க முடியும்.

ஆளும் கூட்டணியைச் சேர்ந்த பாஜகவும், ஐக்கிய ஜனதா தளமும் எண்ணிக்கை அடிப்படையில் நான்கு இடங்களை முதல் சுற்றிலேயே வென்றுவிட்டன. ஐந்தாவது இடத்துக்கு ஆளும் கூட்டணியில் உள்ள ராஷ்ட்ரீய லோக் மோர்ச்சா வேட்பாளர் களமிறக்கப்பட்டிருந்தார்.

எதிர்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதாதள வேட்பாளருக்கு, ஐந்து முஸ்லிம் மஜ்லிஸ் உறுப்பினர்களும், ஒரு பகுஜன் சமாஜ் உறுப்பினரும் ஆதரவு தெரிவித்திருந்ததால், இரண்டாவது சுற்று அடிப்படையில் அந்த உறுப்பினர் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால், மூன்று காங்கிரஸ் உறுப்பினர்களும், ஒரு ஆர்ஜேடி உறுப்பினரும் வாக்களிக்காமல் இருந்து, எதிர்க்கட்சி உறுப்பினரின் தோல்வியை உறுதி செய்தனர். ஒடிஸாவிலும் இதேதான் நேர்ந்தது. ஒடிஸாவில் தேர்தல் நடைபெற்ற நான்கு இடங்களில் 2 இடங்களில் பாஜகவும், ஓர் இடத்தில் எதிர்க்கட்சியான பிஜு ஜனதா தளமும் எண்ணிக்கை பலத்தின் அடிப்படையில் வெற்றி பெற்றன. இன்னொரு இடத்துக்கு பாஜக ஆதரவு சுயேச்சையான 72 வயது முன்னாள் மத்திய அமைச்சர்

திலீப் ராய் போட்டியிட்டார். எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த மூன்று காங்கிரஸ் உறுப்பினர்களும், 8 பிஜு ஜனதா தள உறுப்பினர்களும் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி திலீப் ராய்க்கு வாக்களித்து அவரை மாநிலங்களவை உறுப்பினராக்கி இருக்கிறார்கள். கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய உறுப்பினர்களை பிஜு ஜனதா தளம் இடைநீக்கம் செய்திருக்கிறது என்றால், காங்கிரஸ் கட்சி இடைநீக்கம் செய்திருப்பதுடன், கட்சி மாறி வாக்களித்த மூன்று உறுப்பினர்களையும் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய அவைத் தலைவருக்குக் கடிதம் எழுதி இருக்கிறது. ஹரியாணாவில் கட்சி மாறி வாக்களித்தும்கூட காங்கிரஸ் வேட்பாளர் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.

பாஜக ஆதரவுடன் களமிறங்கிய சுயேச்சை வேட்பாளர் சதீஷ் நந்தால் என்பவருக்கு நான்கு எதிர்க்கட்சி காங்கிரஸ் உறுப்பினர்கள் வாக்களித்திருக்கிறார்கள். அப்படி இருந்தும் அவர் வெற்றி பெறவில்லை என்றாலும்கூட, எந்த அளவுக்கு காங்கிரஸில் கட்டுப்பாடு நிலவுகிறது என்பதை இது வெளிப்படுத்துகிறது. 1985-இல் 52-ஆவது அரசியல் சாசனத் திருத்தம் கொண்டுவரப்பட்டு, கட்சித் தாவல் தடைச் சட்டம் அமலுக்கு வந்தது.

அந்தச் சட்டப்படி, உறுப்பினர் கட்சியில் இருந்து தாமாக விலகுவதாக அறிவித்தாலோ அல்லது கட்சித் தலைமையின் கட்டளையை மீறி எதிர்த்து வாக்களித்தாலோ, வாக்களிக்காமல் தவிர்க்கவோ செய்தால், பதவியை இழக்க நேரிடும். மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் மொத்தமாகக் கட்சி தலைமையின் கட்டளையை மீறினால், அது பிளவாகக் கருதப்பட்டு பதவி இழப்புக்கு உள்ளாகாது.

எதிர்க்கட்சிகள் மத்தியில் காணப்படும் ஒற்றுமையின்மையையும், காங்கிரஸ் கட்சியில் காணப்படும் கட்டுப்பாடின்மையையும் வெளிச்சம் போடுகிறது நடந்து முடிந்த மாநிலங்களவைத் தேர்தல். இதற்கு முன்னால் நடைபெற்ற மகாராஷ்டிரம், தில்லி, ஹரியாணா, பிகார் சட்டப்பேரவைத் தேர்தல்களும்கூட அதைத்தான் உணர்த்தின. தோல்வியில் இருந்து எதிர்க்கட்சிகள் பாடம் படிக்காதவரை, பாஜகவின் வெற்றிப் பயணம் தடையின்றித் தொடரும்...!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments