முகப்பு
தலையங்கம்

கண்காணிப்பு தொடர வேண்டும்!

2023 முதல் வன்முறைகளால் அமைதி இழந்து காணப்படும் மணிப்பூர் மாநில பிரிவினைவாதக் குழுக்களும் மியான்மரில் இருந்து செயல்படுவதைப் பற்றி...

Updated On : 29 மார்ச், 2026 at 10:55 PM
கண்காணிப்பு தொடர வேண்டும்!
பகிர்:

பயங்கரவாதிகளுக்குப் போர் பயிற்சி வழங்கியதாக இந்தியா - மியான்மர் எல்லைப் பகுதியில் ஓர் அமெரிக்கர், ஆறு உக்ரைனியர்கள் தேசிய புலனாய்வு முகமையின் (என்ஐஏ) ஒருங்கிணைந்த நடவடிக்கையால் புது தில்லி, லக்னௌ, கொல்கத்தா விமான நிலையங்களில் அண்மையில் பிடிபட்டுள்ளனர். வெளிநாட்டவர் சிலர் மிஸோரம் வழியாக சட்டவிரோதமாக மியான்மருக்கு அடிக்கடி சென்று வருவது குறித்து என்ஐஏ-வுக்கு அண்மையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2024 பிப்ரவரி முதல் மே வரையிலான நான்கு மாதங்களில் மட்டும் சுமார் 1,240 வெளிநாட்டவர் நமது நாட்டின் வடகிழக்கு மாநிலமான மிஸோரம் வழியாகச் சென்றது அப்போதே என்ஐஏ கவனத்துக்கு வந்தது. அதைத் தொடர்ந்து என்ஐஏ கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியது. வங்கதேசத்தின் சட்டோகிராம், மியான்மர், நமது நாட்டின் மிஸோரம் ஆகியவற்றின் சில பகுதிகளை இணைத்து தனி நாடு உருவாக்கும் சதியில் அமெரிக்கர் ஒருவர் ஈடுபட்டுள்ளதாக 2024-இல் வங்கதேசப் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா எச்சரிக்கை விடுத்தது நினைவுகூரத்தக்கது.

கைது செய்யப்பட்ட அமெரிக்கரான மேத்யூ ஆரோன் வான்டைக் என்பவர் "சன்ஸ் ஆஃப் லிபர்ட்டி இன்டர்நேஷனல்' என்ற அமைப்பை நிறுவியவர். மத அமைப்புகளிடம் இருந்து பல கோடி ரூபாய் நன்கொடைகளைப் பெறும் இவர், பல நாடுகளில் ஆயுதம் தாங்கிய குழுக்களுக்கு பண உதவி, ஆயுத உதவி, ஆயுதப் பயிற்சி அளித்துவருகிறார்.

லிபியா, உக்ரைன், வெனிசுலா, பிலிப்பின்ஸ், இராக் உள்ளிட்ட நாடுகளில் அரசுக்கு எதிராகப் போராடும் குழுக்களுக்கு இதுபோன்ற உதவிகளைச் செய்துவந்துள்ளார். கைது செய்யப்பட்ட ஏழு பேரும் மியான்மரில் இன ஆயுதக் குழுக்களுக்கு ட்ரோன் இயக்குதல், சிக்னல் தடுப்பு உள்ளிட்ட பயிற்சிகளை அளித்துள்ளனர். மேலும், ஐரோப்பாவில் இருந்து அதிநவீன ட்ரோன்களை அதிக அளவில் இந்தியா வழியாக கொண்டுவந்து அந்தக் குழுக்களுக்கு வழங்கி உள்ளனர்.

மியான்மரில் உள்ள ஆயுதக் குழுக்கள், தனி நாடு கோரி போராடி வரும் நமது நாட்டின் வடகிழக்கு மாநில பிரிவினைவாத அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளன. இந்தியாவில் கண்காணிப்பு அதிகம் இருப்பதால், அஸ்ஸாம் ஐக்கிய விடுதலை முன்னணி (உல்ஃபா), நாகாலாந்து தேசிய சோஷலிஸ்ட் கவுன்சில் (என்எஸ்சிஎன்) போன்ற பல்வேறு பிரிவினைவாத அமைப்புகளும் மியான்மரில் தளங்களை அமைத்துள்ளன.

கடந்த 2023-ஆம் ஆண்டுமுதல் வன்முறைகளால் அமைதி இழந்து காணப்படும் மணிப்பூர் மாநில பிரிவினைவாதக் குழுக்களும் மியான்மரில் இருந்து செயல்படுகின்றன.

கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் மியான்மரில் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டில் ஜனநாயக ஆட்சி நிறுவப்பட வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தினாலும் அண்டை நாடாக இருப்பதால் பாதுகாப்பு, அந்நாட்டின் மீது சீனாவின் ஆதிக்கம், எதார்த்த நிலையைக் கருத்தில் கொண்டு ராணுவ ஆட்சியாளர்களுடன் நல்லுறவை இந்தியா பேணி வருகிறது. பிரிவினைவாத இயக்கங்களின் முகாம்களை நிர்மூலமாக்குவதற்காக இரு நாடுகளும் சேர்ந்து "ஆபரேஷன் சன்ரைஸ்' என்ற ராணுவ நடவடிக்கையை 2019-இல் மேற்கொண்டன. ஆனால், அங்கு அராக்கன் ராணுவம் (ஏஏ), மியான்மர் தேசிய ஜனநாயகக் கூட்டணி ராணுவம் (எம்என்டிஏஏ), டாங் தேசிய விடுதலை ராணுவம் (டிஎன்எல்ஏ) போன்ற குழுக்கள் கைகோத்து ராணுவ ஆட்சிக்கு எதிராக தாக்குதல்களை

அவ்வப்போது மேற்கொள்கின்றன. இந்தக் குழுக்கள் அந்த நாட்டின் சில பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. இந்தப் பகுதிகளில்தான் நமது நாட்டின் பிரிவினைவாத அமைப்புகள் செயல்படுகின்றன. இந்தியாவின் அருணாசல பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர், மிஸோரம் ஆகிய நான்கு மாநிலங்களுடன் 1,643 கி.மீ. எல்லையை மியான்மர் பகிர்ந்து கொண்டுள்ளது. பாகிஸ்தான், வங்கதேச எல்லைகள் போன்று இங்கு முழு தொலைவுக்கு வேலி அமைக்கப்படவில்லை. முழு தொலைவுக்கும் வேலி அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தபோதிலும், கலாசார ரீதியாக இரு நாட்டு மக்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதால், உள்ளூர் மக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இருநாட்டு மக்களும் எந்தவித ஆவணமும் இல்லாமல் எல்லையில் இருந்து 16 கி.மீ. தொலைவுக்கு வந்துசெல்ல இரு நாட்டு அரசுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. அது இப்போது 10 கி.மீ. என சுருக்கப்பட்டுள்ளது.

மணிப்பூர் தவிர மற்ற வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில ஆண்டுகளாக பெரிய அளவில் வன்முறைச் சம்பவங்கள் நிகழவில்லை. மணிப்பூரில் நிரந்தர அமைதி ஏற்படுத்தப்படுவதுடன், எல்லை மாநிலங்கள் அனைத்துமே அமைதிப் பூங்காவாகத் திகழ மேற்கொள்ளப்படும் கண்காணிப்பு, வேலி அமைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேலும் தீவிரமாக முன்னெடுக்கப்பட வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.