FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தலையங்கம்

தேவை மக்கள்தொகை சமநிலை!

கருவுறுதல் விகிதம் குறைந்தால் சமூகத்தில் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து, வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

Updated On : 28 மே 2026, 6:51 am IST
மக்கள்தொகை சமநிலை - ANI
பகிர்:

பிறப்பு, இறப்பு விகிதம் தொடர்பாக அண்மையில் வெளியிடப்பட்ட இந்திய தலைமைப் பதிவாளர் அலுவலகத்தின் 2024-ஆண்டு ஆய்வு அறிக்கை பல விஷயங்களை வெளிப்படுத்தி உள்ளது. இந்தியாவின் மொத்த கருவுறுதல் விகிதம் 1.9-ஆக சரிந்துள்ளது. இதனால், 2014-இல் மக்கள்தொகையில் ஆண்டுக்கு 1,000 பேருக்கு 21 குழந்தைகள் என இருந்த பிறப்பு விகிதம், 2024-இல் 18.3-ஆகக் குறைந்துள்ளது.

இந்தியாவில் பிகார் (2.9), உத்தர பிரதேசம் (2.6), மத்திய பிரதேசம் (2.4), ராஜஸ்தான் (2.3), சத்தீஸ்கர் (2.2), ஜார்க்கண்ட் (2.2) ஆகிய ஆறு மாநிலங்களில் மட்டும் கருவுறுதல் விகிதம் 2.1-க்கு மேல் உள்ளது. மற்ற எல்லா மாநிலங்களிலும் இந்த விகிதம் 1.9-க்கு கீழ் உள்ளது. மிகக் குறைந்த அளவாக தில்லியில் 1.2-ஆகவும், தமிழகம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் 1.3-ஆகவும் உள்ளது.

கருவுறுதல் விகிதம் குறைந்தபட்சம் 2.1 என இருந்தால்தான் எதிர்காலத்தில் அது தம்பதியை ஈடுகட்டும் விகிதமாக இருக்கும். நகரங்களில் வீட்டு வாடகை, தனியார் மருத்துவமனைகளில் பிரசவம், தனியார் பள்ளிகளில் படிப்பு போன்றவற்றால் குழந்தைகள் வளர்ப்புக்கு அதிகம் செலவாகிறது என்பதால் தென் மாநிலங்களிலும், தில்லி, மகாராஷ்டிரம் போன்ற வளர்ச்சி அடைந்த மாநிலங்களிலும் ஒன்று அல்லது இரண்டுக்கு மேல் எப்போதும் வேண்டாம் என்று பெற்றோர்களே தீர்மானிப்பதால் குழந்தைகள் பிறப்பு விகிதம் சரிகிறது.

Advertisement

Advertisement

கருவுறுதல் விகிதம் 2.1-க்கு கீழ் குறைந்தால் சமூகத்தில் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து, வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். எதிர்காலத்தில் இது பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆதரிப்போர் இன்றி முதியோர் குறிப்பிட்ட சதவீதத்தினர் அநாதைகள் ஆவது அதிகரிக்கும். முதியோரின் மருத்துவச் செலவு பெரும் சுமையை ஏற்படுத்தும்.

கருவுறுதல் விகித சரிவு காரணமாக, தமிழகத்தில் 14 வயது வரை உள்ளவர்களின் சதவீதம் மக்கள்தொகையில் 18-ஆக மட்டுமே உள்ளது. தமிழகத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 2014-இல் மக்கள்தொகையில் 10.6 சதவீதமாக இருந்தது 2024-இல் 14.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.

உழைக்கும் மக்களின் எண்ணிக்கை குறைவதை தமிழகம் அண்மைக்காலமாக எதிர்கொண்டு வருகிறது. அதனால்தான், தமிழகம் முழுவதும் மலைப் பிரதேச குக்கிராமங்கள் உள்பட உடலுழைப்புத் தேவைப்படும் எல்லா இடங்களிலும் பிகார், ஜார்க்கண்ட், உத்தர பிரதேசம், ஒடிஸா போன்ற மாநிலத் தொழிலாளர்கள் பணிபுரிவதைக் காண முடிகிறது.

ஆந்திர மாநிலத்தில் 1990-களில் கருவுறுதல் விகிதம் 3-ஆக இருந்தது இப்போது 1.5 ஆக சுருங்கிவிட்டது. இளைஞர்கள் குறைவதை உணர்ந்து, முன்பு மக்கள்தொகை கட்டுப்பாடு நடவடிக்கைகளை ஆதரித்த முதல்வர் சந்திரபாபு நாயுடு தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து வருகிறார்.

இரண்டாவது குழந்தை பெற்றால் ரூ.25,000, மூன்றாவது குழந்தை என்றால் ரூ.30,000, நான்காவது குழந்தை என்றால் ரூ.40,000 ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதைத் தவிர, 5 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000, 18 வயது வரை இலவசக் கல்வி, தாய்மார்கள் வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதி போன்ற சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது போன்ற சலுகைகள் பெரிய அளவில் கைகொடுப்பதில்லை என்பதற்கு சீனா முன்னுதாரணமாக இருக்கிறது.

பெருகிவரும் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த 1980-களில் "ஒரு குழந்தை மட்டும்' என்ற கொள்கையை சீனா தீவிரமாக அமல்படுத்தியது. உழைக்கும் இளைஞர்கள் குறைந்ததால் "ஒரு குழந்தை மட்டும்' கொள்கையை 2016-இல் கைவிட்டது.

சீனாவில் மூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.35,000 மட்டுமல்லாமல், பத்து வயதுவரை பல்வேறு கல்வி, மருத்துவ சலுகைகளும் வழங்கப்படுகின்றன. அப்படி இருந்தபோதும், அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்ள விரும்பவில்லை என சீன அரசு எடுத்த ஆய்வின்போது 70 சதவீதத்துக்கும் அதிகமானோர் தெரிவித்தனர்.

மக்கள்தொகை அதிகரிப்பும் பலவிதமான பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடும். கோடிக்கணக்கான மக்களின் உணவுத் தேவையை நிறைவு செய்வது, விரைவாகும் நகரமயம் காரணமாக அனைவருக்கும் வீட்டு வசதி, தரமான குடிநீர் அளிப்பது, திடக்கழிவு மேலாண்மை, போக்குவரத்து நெரிசல், வடிகால் வசதி போன்றவை பெரும் சவால்களாக உருவெடுக்கும்.

அதனால், இந்த விவகாரத்தில் சமநிலை பேணப்படுவது அவசியமாகும்.

தரமான மருத்துவமும், கல்வியும், தகுதிக்குத் தகுந்த வேலைவாய்ப்பும் இல்லாதவரை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க எடுக்கும் முயற்சிகள் பலனளிக்காது. படித்த, வசதி படைத்தவர்கள் மத்தியில் ஒரு குழந்தையே போதும் என்கிற மனநிலையும், அன்றாட வாழ்க்கைக்கு அல்லல்படுபவர்கள் அதிகமாகக் குழந்தைகள் பெற்றுக் கொள்வதும் மிகப் பெரிய சமூகப் பிரச்னையாக உருவாகும் என்பதை நாம் மறந்துவிடலாகாது.

தேசிய அளவில் பொது விவாதத்துக்குரிய பிரச்னை இது.

தூங்குக தூங்கிச் செயற்பால; தூங்கற்க

தூங்காது செய்யும் வினை.

காலந்தாழ்த்திச் செய்யத் தக்கவற்றைக் காலந் தாழ்ந்தே செய்ய வேண்டும்; காலந்தாழ்த்தாமல் விரைந்து செய்ய வேண்டிய செயல்களைச் செய்யக் காலந்தாழ்த்தக் கூடாது.

திருக்குறள் (எண் 672) அதிகாரம்: வினைசெயல்வகை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments