FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

விண்வெளிக் கண்ணோட்டம்!

இஓஎஸ்-05 (ஜிஐசாட் 1-ஏ) செயற்கைக் கோள் திட்டமிட்டபடி புவிவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டிருப்பதைப் பற்றி...

7 செப்டம்பர் 2026, 1:57 am IST
பகிர்:

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) சார்பில் கடந்த வெள்ளிக்கிழமை விண்ணில் செலுத்தப்பட்ட இஓஎஸ்-05 (ஜிஐசாட் 1-ஏ) செயற்கைக் கோள் திட்டமிட்டபடி புவிவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது.

இஸ்ரோவைப் பொருத்தவரை இந்த வெற்றி மிகப் பெரிய ஆறுதலாகவும், அடுத்தகட்ட முனைப்புக்கான உற்சாகமாகவும் அமைகிறது எனலாம். ஜனவரி 12-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட இஓஎஸ்என்-1 செயற்கைக்கோளின் தோல்வியைத் தொடர்ந்து, மிகவும் கவனத்துடனும், எதிர்பார்ப்புடனும் இஓஎஸ்-05 விண்ணில் செலுத்தப்பட்டது.

2025 மே 18-ஆம் தேதி இஓஎஸ்-09 ஏற்கெனவே தோல்வி அடைந்திருந்த நிலையில் இந்த முயற்சியும் தோல்வியைத் தழுவக் கூடாது என்பதில் இஸ்ரோ விஞ்ஞானிகள் மிகவும் கவனமாக இருந்தனர். அவை இரண்டுமே இதேபோல, பி. எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் செலுத்தப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 2.55-க்கு ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவன் மையத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி எஃப் -17 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது இஓஎஸ்-05. அடுத்த 19 நிமிடத்தில் திட்டமிட்ட புவிவட்ட சுற்றுப்பாதையில் இஓஎஸ்-05 செயற்கைக்கோளை அது வெற்றிகரமாக நிலை நிறுத்தியது. 2,367 கிலோ எடையுள்ள இஓஎஸ்-05 செயற்கைக்கோளின் ஆயுள்காலம் 10 ஆண்டுகள்.

தற்போது குறைந்தபட்சம் 171 கி.மீ., அதிகபட்சம் 31,026 கி.மீ. கொண்ட சுற்றுப்பாதையில் வலம் வரும் இந்த செயற்கைக்கோள், அதிலுள்ள உந்து விசை மோட்டார்களின் மூலம் படிப்படியாக இறுதிக்கட்ட சுற்றுப்பாதைக்கு மாற்றப்படும். பூமியிலிருந்து சுமார் 36,000 கி.மீ. தொலைவில் இந்த செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது என்பது இந்திய விஞ்ஞானிகளின் திறமைக்கும் சாதனைக்கும் எடுத்துக்காட்டு.

இஓஎஸ்-05 செயற்கைக்கோள் என்பது ஸ்ரீஹரிகோட்டா ஏவுகணை மையத்தில் இருந்து அனுப்பப்படும் 107-ஆவது விண்வெளி முயற்சி. இதுவரையில் ஜிஎஸ்எல்வி மூலம் அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்களில் அதிகமான எடையுள்ள செயற்கைக்கோளும் இதுதான். 2001-இல் ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் அனுப்பப்பட்ட ஜிசாட்-1 செயற்கைக்கோளின் எடை 1,536 கிலோ மட்டுமே. படிப்படியாக ராக்கெட்டுகளின் தொழில்நுட்பத்துடன் செயற்கைக்கோளின் எடையையும் அதிகரித்து வந்திருக்கிறது இஸ்ரோ.

இஸ்ரோவின் வரலாற்றில் முதன்முறையாக 36,000 கி.மீ. தொலைவில் உள்ள புவிவட்டப்பாதையில் செயற்கைக்கோள் நிறுவப்பட்டு புவி கண்காணிப்பு ஆய்வுப் பணியை மேற்கொள்ள உள்ளது. இதற்கு முன்னர் நிறுவப்பட்ட 21 தொலையுணர்வு செயற்கைக்கோள்களும் புவி தாழ்வட்டப்பாதை அல்லது சூரிய ஒத்திசைவுப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டன என்றால், இப்போது இஓஎஸ்-05 புவிவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது.

புவிவட்டப்பாதையில் இந்தியாவின் கண்ணாக இஓஎஸ்-05 இருக்கும். அங்கிருந்து இந்திய துணைக் கண்டத்தின் எல்லா பகுதிகளையும் நோட்டமிட்டு, அவ்வப்போது படம் பிடித்து அனுப்பும். இந்தியாவின் எல்லைகளைக் கண்காணிப்பது மட்டுமல்லாமல், தட்பவெப்ப நிலையையும் அதன் மாற்றங்களையும் முன்கூட்டியே தெரிவிக்கும். வானிலை, மேக வெடிப்பு உள்ளிட்ட பருவநிலைப் பேரிடர்கள், கடல்சார் கண்காணிப்பு, எல்லைப்புற நடமாட்டம், கனிமவள ஆராய்ச்சி என்று பல்வேறு வகையில் இஓஎஸ்-05 செயற்கைக்கோள் முன்கூட்டியே நிலைமைகளைப் படம் பிடிக்கும்.

இதிலுள்ள இரண்டு விதமான 3 டி கேமராக்களால் புவிப்பரப்பை 40 மீட்டர்வரை துல்லியமாகப் படமெடுத்து அனுப்ப முடியும். வானிலை நிலவரங்களை ஆராய்ந்து, புயல், வெள்ளப்பெருக்கு, மேக வெடிப்பு உள்ளிட்ட பேரிடர்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த செயற்கைக்கோள் படம் பிடித்து அனுப்பும் தகவல்கள் பயன்படும்.

இந்தியாவின் எல்லைப் பகுதிகளைத் தொடர்ந்து கண்காணிக்கும் என்பதால், பாதுகாப்பு அமைப்புகளுக்குத் தேவையான முக்கியத் தகவல்களை அவ்வப்போது இதன்மூலம் பெற முடியும். இதுவரை அமெரிக்காவின் 'நாசா' உள்ளிட்ட வெளிநாட்டு செயற்கைக்கோள்களின் உதவியுடன் மட்டும்தான் நாம் வானிலை குறித்த பல எச்சரிக்கைகளைப் பெற முடிந்தது. இஓஎஸ்-05 நிலைநிறுத்தப்பட்டிருப்பதன் மூலம் தொழில்நுட்ப இறையாண்மையில் தற்சார்புப் பெற முடிந்திருக்கிறது. பருவநிலை குறித்த கண்காணிப்பும், பாதுகாப்புத் தொடர்பான எல்லைப்புற, கடல்சார் செயல்பாடுகள் குறித்த தகவல்களும் இஓஎஸ்-05 மூலம் நம்மால் இனிமேல் பெற முடியும்.

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் "ககன்யான்' உள்பட பல திட்டங்கள் இஸ்ரோவின் வருங்கால முனைப்புகளில் இருக்கின்றன. அதற்கு முன்பு, ககன்யானின் ஆளில்லா விண்கலம் இந்த ஆண்டே ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தெரிவித்திருக்கிறார்.

ககன்யான் திட்டத்துக்காக இதுவரை சுமார் 8,000 சோதனைகள் நிறைவடைந்துள்ளன என்று தெரிகிறது. ஜிஎஸ்எல்விஎஃப்-17 ஏவுகணை மூலம் செலுத்தப்பட்ட இந்தியாவின் முதல் இமேஜிங் செயற்கைக்கோளான இஓஎஸ்-05 அடைந்திருக்கும் வெற்றி, பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டிருப்பதுபோல, நமது விண்வெளித் திட்டத்துக்குப் புதிய வலிமையும், பரிமாணத்தையும் சேர்ப்பதுடன் ஒட்டுமொத்த விண்வெளி சூழலமைப்பிலும் இந்தியாவின் திறன்களை விரிவுபடுத்துகிறது.

*****

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா

ஊக்கம் உடையா னுழை.

சோர்வு இல்லாத ஊக்கம் உடையவனிடத்தில் ஆக்கமானது தானே அவன் உள்ள இடத்திற்கு வழிகேட்டுக் கொண்டு போய்ச் சேரும்.

திருக்குறள் (எண் 594) அதிகாரம்: ஊக்கம் உடைமை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments