திருமாவளவனைப் பாராட்டிய அன்புமணி! ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஒன்றாகப் போராடவும் உறுதி!!
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக திருமாவளவனும் நானும் போராடுவோம் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளதைப் பற்றி...
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக திருமாவளவனும் நானும் இணைந்து போராடுவோம் என்றும் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமக 18 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இந்த நிலையில், கே.வி. குப்பம் (தனி) தொகுதியில் போட்டியிடும் கூட்டணிக் கட்சியான புதிய பாரதம் கட்சியின் தலைவர் பூவை. ஜெகன்மூர்த்தியை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் பிரசாரம் மேற்கொண்டார்.
Advertisement
அப்போது அவர் பிரசாரம் செய்து பேசுகையில், “பெண்களுக்கு எதிரான, குழந்தைகளை கொலை செய்யும் ஆட்சி திமுகவை அகற்ற வேண்டும். சூழ்ச்சி செய்து பட்டியலின மக்கள் மத்தியில் மோதலை உண்டாக்குகிறது திமுக.
கே.வி. குப்பம் (தனி) தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை முதல்வர் ஸ்டாலின் போட்டியிடக் கூறியிருக்கிறார். ஆனால், ஒரு சமுதாய தலைவர் போட்டியிடும் இடத்தில் நாங்கள் போட்டியிட மாட்டோம் அது சரியாக இருக்காது என திருமாவளவன் மறுத்துள்ளார்.
திருமாவளவனை நான் பாராட்டுகிறேன். இதுதான் சரியான அணுகுமுறை. கட்சி வேறுபாடு கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால், சமூக நீதி ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராட நாங்கள் ஒன்றாக உள்ளோம்.
பட்டிலினத்தை சேர்ந்த இரண்டு தலைவர்களும் மோதிக்கொள்ள வேண்டும் என்பது தான் திமுகவின் எண்ணம், வன்னியர்களும் பட்டியலின மக்களும் அடித்துக் கொள்ள வேண்டும். அப்படியானால்தான் திமுக குளிர்காய முடியும், இதுதான் திமுகவின் சூழ்ச்சி. காலம் காலமாக இதை தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.
தருமபுரி மாவட்டத்தில் பிரசாரத்தில் மாவட்டத்திற்கு செய்த வளர்ச்சி பணிகள் குறித்து பேசாமல் என்னைப் பற்றி அசிங்கமாக பேசி இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். உங்களைப் பற்றியும் உங்கள் மகன் உதயநிதியைப் பற்றியும் அதற்கு மேல் என்னால் பேச முடியும். ஆனால், நாகரிகம் கருதி பேச மாட்டேன்.
இன்றைக்கு உள்ள முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நிர்வாகம் என்றால் என்னவென்று தெரியவில்லை. பெண்கள், விவசாயிகளுக்கு பாதுகாப்பு வழங்க தெரியவில்லை. நெசவாளர்களை பாதுகாக்க தெரியவில்லை. அவர் பாட்டுக்கு வருகிறார் சினிமாவில் நடிக்கிறார், விளம்பரத்தில் நடிக்கிறார், அவ்வளவு தான் அவருடைய வேலை.
அமைச்சர்களான ஏ.வ.வேலு, நேரு, சேகர்பாபு, செந்தில் பாலாஜி ஆகியோர் முதல்வரை வைத்து கொள்ளையடித்த பணத்தை இப்போது கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். தமிழ்நாடு முழுக்க உள்ள 6 கோடி வாக்காளர்களுக்கு ரூ. 2,000 கொடுக்க திமுக தயாராகியுள்ளது. இதற்கு மட்டும் ரூ. 13 ஆயிரம் கோடி ஒதுக்கி உள்ளது.
ஐந்து ஆண்டில் இந்த மாவட்டத்திற்கு என்ன செய்தீர்கள்? பாலாற்றில் ஒரு தடுப்பணை கூட கட்ட முடியவில்லை வளர்ச்சி திட்டத்தை கொண்டு வர முடியவில்லை. குடியைக்கெடுக்கும் டாஸ்மாக்கில் வேலை செய்ய ஐந்து பேராம், பாடம் சொல்லிக் கொடுக்கும் பள்ளியில் ஒரு ஆசிரியராம் இதுதான் திமுக” என்றார் அன்புமணி ராமதாஸ்.