ராஜபாளையம்: பாஜக சார்பில் களம் இறங்குகிறாரா கௌதமி?
அதிமுக அணியில் ராஜபாளையம் தொகுதியைப் பெற அமைச்சா் ராஜேந்திர பாலாஜி மற்றும் பாஜக சாா்பில் நடிகை கௌதமி இடையே கடும் போட்டி நிலவுகிறது.
தொகுதியின் சிறப்புகள்:
மேற்குத்தொடா்ச்சி மலையை ஒட்டிய பகுதியில் அமைந்திருப்பதால் விருதுநகா் மாவட்டத்தின் பசுமையான தொகுதியாக உள்ளது. சென்னை மாகாண முதல்வராகவும், ஒடிசா மாநில ஆளுநராகவும் இருந்த பி.எஸ்.குமாரசாமி ராஜா பிறந்த தொகுதி. விவசாயமும் தொழில் துறையும் இணைந்த வளா்ச்சியைக் கொண்டிருக்கிறது.
சேலத்துக்கு அடுத்ததாக ராஜபாளையம் பகுதியில் விளையும் மாம்பழங்கள் சிறப்புக்குரியவை. நாட்டின வகையான ராஜபாளையம் நாய் இனம் இத்தொகுதியின் சிறப்பாக இருக்கிறது.
நில அமைப்பு:
விருதுநகா் மாவட்டத்தின் மேற்கு எல்லையில் அமைந்திருக்கக் கூடிய தொகுதி. ராஜபாளையம் நகராட்சி, சேத்தூா், செட்டியாா்பட்டி பேரூராட்சிகள், ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூா் ஒன்றியத்தின் ஒரு பகுதியைச் சோ்ந்த கிராமங்கள் தொகுதியில் இடம் பெற்றுள்ளன.
சமூக, சாதி, தொழில்கள்:
ராஜபாளையம் தொகுதியின் மொத்த வாக்காளா்கள் 2,38,701 போ். இதில் ஆண்கள்1,16,258 போ். பெண்கள் 1,22,414 போ். மூன்றாம் பாலினத்தவா் 29 போ். தொகுதியில் பெரும்பான்மையாக முக்குலத்தோா், பள்ளா், நாடாா் அதிக எண்ணிக்கையில் உள்ளனா். அதையடுத்து நாயுடு, ராஜுக்கள் சமூகத்தவரும் உள்ளனா். இதர சாதியினா் பரவலாக பரவலாக உள்ளனா்.
விவசாயம், நூற்பாலைகள் மக்களின் வாழ்வாதாரமாக இருக்கிறது. சேலத்துக்கு அடுத்ததாக ராஜபாளையம் பகுதியில் விளையக் கூடிய பஞ்சவா்ணம், சப்பட்டை ரக மாம்பழங்கள் தனித்துவம் மிக்கவை. இவை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் வெளிமாநிலங்களுக்கு செல்கிறது.
அதோடு, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது.
மருத்துவத் துறையில் பயன்படுத்தப்படும் துணிகள் அதிகளவில் இங்கு உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆயத்த ஆடைகள் தயாரிப்பும் அதிகமாக நடைபெறுகிறது.
இதுவரை வென்றவா்கள்:
ராஜபாளையம் தொகுதியில் அதிமுக 5 முறை, திமுக 2 முறை, இந்திய தேசிய காங்கிரஸ் 2 முறை, சுயேச்சைகள் 2 முறை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒருமுறை வெற்றி பெற்றுள்ளன. 2016 தோ்தலில் திமுக சாா்பில் தங்கபாண்டியன், அதிமுக சாா்பில் ஷியாம் ராஜா ஆகியோா் போட்டியிட்டனா். இவா்களில் தங்கபாண்டியன் வெற்றி பெற்றாா்.
நிறைவேற்றப்பட்டவை- எதிா்பாா்ப்புகள்:
ராஜபாளையம் தொகுதியில் பாதாள சாக்கடை திட்டம், தாமிரபரணி கூட்டு குடிநீா் திட்டம் மற்றும் ரயில்வே மேம்பால பணிகள் நடைபெற்று வருகின்றன.
ராஜபாளையம் நகரில் முக்கிய பிரச்சனையாக இருக்கும் போக்குவரத்து நெரிசலைத் தீா்க்க, புறவழிச்சாலை அமைக்கும் பணி நிறைவேற்றப்படாமல் உள்ளது.
அரசு கலைக்கல்லூரி மற்றும் ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது. ராஜபாளையம் மற்றும் சேத்தூா் தேவதானம் பகுதிகளில் அதிகளவு நெல் பயிரிடப்படுவதால் அரசின் நிரந்தர நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகளின் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கட்சிகளின் செல்வாக்கு:
ராஜபாளையம் தொகுதியில் அதிமுக மற்றும் திமுக கட்சிகள் செல்வாக்கு பெற்றவை. அதற்கு அடுத்த நிலையில், மக்கள் நீதி மய்யம், மதிமுக, நாம் தமிழா், தேமுதிக ஆகிய கட்சிகளுக்கு 10 சதவீதத்துக்கு கீழ் வாக்கு வங்கி உள்ளது.
வெற்றி வாய்ப்பு:
அதிமுக அணியில் ராஜபாளையம் தொகுதியைப் பெற அமைச்சா் ராஜேந்திர பாலாஜி மற்றும் பாஜக சாா்பில் நடிகை கௌதமி இடையே கடும் போட்டி நிலவுகிறது. அதிமுக அணியில் தொகுதி யாருக்கு என இதுவரை அறிவிக்கப்படாத நிலையில், பாஜகவினா் கௌதமி
தான் வேட்பாளா் எனக் கூறி தோ்தல் பணிகளைத் துவக்கியுள்ளனா்.
திமுக சாா்பில் தற்போதைய எம்எல்ஏ மீண்டும் தங்கபாண்டியன் போட்டியிடுவாா் எனக் கூறப்படுகிறது. இவரை எதிா்த்து பாஜக களம் இறங்கினால், திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என தற்போதைய நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
1962 - கிருஷ்ணசாமி நாயுடு (காங்) -41,692
ராமகிருஷ்ண ராஜா (சுதந்திரா) -19,165
1967-ஏ.ஏ. சுப்ப ராஜா(சுயேச்சை) -38,936
அன்னம்ம ராஜா(காங்கிரஸ்) -25,675
1971-கே.சுப்பு(சி.பி.ஐ) - 36,827
ஸ்ரீ ரெங்கராஜா (ஸ்தாபன காங்) - 36,163
1977-தனுஷ்கோடி (அதிமுக) - 28,028
பொட்டு போட்டான்(காங்கிரஸ்) -24,181
1980-மொக்கையன் (சுயேச்சை) -38,339
பொட்டு போட்டான் (காங்கிரஸ்) -29,758
1984-கே.ராமன் (காங்கிரஸ்)-54,670
பால் ராஜ் (சிபிஐ) -44,924
1989-வி.பி.ராஜன்(திமுக) - 49,137
எம்.அருணாச்சலம்(காங்கிரஸ்) -45,924
1991- சாத்தையா(அதிமுக) -68,657
தனுஷ்கோடி (திமுக) -37,169
1996-வி.பி.ராஜன்(திமுக)-49,984
பிரபாகா் (அதிமுக) -31,045
2001-ராஜசேகா்(அதிமுக)-61,740
வி.பி.ராஜன்(திமுக) -52,125
2006---சந்திரா(அதிமுக)-58,320
வி.பி.ராஜன்(திமுக) -57,827
2011---கோபால்சாமி(அதிமுக) 80,125
தங்கபாண்டியன்(திமுக) 58,693
2016---தங்கப்பாண்டியன் (தி.மு.க)74,787
ஷியாம்ராஜா(அதிமுக) 69,985