பேரவைத் துணைத் தலைவர் ரவி சங்கரை கண்டித்து நவ.18 இல் அதிமுக ஆர்ப்பாட்டம்!
தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவர் ரவி சங்கரை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது குறித்து...
தமிழக சட்டப்பேரவைத் துணைத் தலைவர் ரவி சங்கரை கண்டித்து அதிமுக சார்பில் நவ.18 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக எடப்படி பழனிசாமி அறிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் 8-ஆம் தேதி துறையூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் குமார் என்பவர், தமது பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் குப்பை அகற்றும் பிரச்னைகள் குறித்து மனு அளிக்க ரவிசங்கரைச் சந்தித்துள்ளார். அப்போது சட்டப்பேரவைத் துணைத் தலைவர் தன்னைத் தகாத வார்த்தைகளால் திட்டித் தாக்கியதாக அவர் குற்றம் சாட்டிய விடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது.
Advertisement
Advertisement
இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், சம்பந்தப்பட்டவர் தரப்பிலிருந்து புகார்கள் ஏதும் அளிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், சட்டப்பேரவை துணைத் தலைவர் ரவி சங்கரை கண்டித்து நவ.18 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அதிமுக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
நீண்ட மரபும், மாண்பும் பொருந்தி இருக்கின்ற தமிழ்நாடு சட்டப்பேரவையின் துணைத் தலைவரும் துறையூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ரவிசங்கரை சந்தித்து குறைகளை தெரிவிப்பதற்காகச் சென்ற சமூக செயல்பாட்டாளர் கொலை வெறித் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்து வரும் தவெக அரசைக் கண்டித்தும்; அதிகார மமதையில் தவறிழைத்தவர் மீது, கடும் நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ளது.