அரசியல் களத்தை மாற்றியிருக்கிறது தவெக! கே.ஜி.அருண்ராஜ் சிறப்பு நேர்காணல்!
தவெகவின் கொள்கை பரப்பு செயலராகப் பொறுப்பு வகிக்கும் கே.ஜி.அருண்ராஜ், தீவிர வாக்கு சேகரிப்பு பணிகளுக்கு இடையே தினமணி நாளிதழுக்கு அளித்த சிறப்பு நேர்காணல்...
தொழில்முறை மருத்துவராக இருந்து, 2009-இல் குடிமைப் பணி தேர்வில் தேர்ச்சி பெற்று இந்திய வருவாய்த் துறை உயரதிகாரியாக (ஐஆர்எஸ்) பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர் தவெகவின் கொள்கை பரப்பு செயலராகப் பொறுப்பு வகிக்கும் கே.ஜி.அருண்ராஜ். திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிடும் அவர், தீவிர வாக்கு சேகரிப்பு பணிகளுக்கு இடையே தினமணி நாளிதழுக்கு அளித்த சிறப்பு நேர்காணல்:
தேர்தலுக்கு ஓரிரு நாள்களே உள்ள நிலையில் மக்களிடம் தவெகவுக்கு வரவேற்பு எப்படி இருக்கிறது?
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக மாறி மாறி ஆட்சி செய்த திமுக, அதிமுகவுக்கு மாற்றாக தவெகவை மக்கள் பார்க்கின்றனர். ஊழல், குடும்ப ஆட்சி என திமுகவுக்கு எதிரான மனநிலையை மக்கள் களத்தில் பிரதிபலிக்கின்றனர்.
Advertisement
அரசியல் கட்சிகள் போட்டிபோட்டுக்கொண்டு இலவசங்கள் அறிவிப்பது குறித்த உங்களது பார்வை என்ன?
நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளாகியும் விளிம்புநிலை மக்களை அதே நிலையிலேயே திமுகவும், அதிமுகவும் வைத்திருக்கின்றன. அவர்களை மேம்படுத்த இலவச திட்டங்கள் அவசியம்.
அதனால்தான் திமுக - அதிமுகவுக்கு போட்டியாக தவெகவும் இலவச திட்டங்களை தேர்தல் வாக்குறுதியாக அறிவித்திருக்கிறதா?
மக்கள் எதிர்பார்ப்புகள் அனைத்தையும் எங்கள் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகளாக அளித்துள்ளோம்.
இலவச திட்டங்களால் தமிழக அரசின் கடன் சுமை மேலும் அதிகரிக்காதா?
அரசுத் திட்டங்களில் 30 சதவீதம் கமிஷனாக தரவேண்டும் என்பதால் திட்டத்தின் செலவினம் அதிகரிக்கிறது. தேவையில்லாத விளம்பரங்களால் ஏற்படும் செலவுகளைக் குறைத்து, நிதி ஆதாரத்தைப் பெருக்கி தேர்தல் அறிக்கையில் அறிவித்த திட்டங்களை கடன் பெறாமல் நிறைவேற்றுவோம்.
இளைஞர்களின் கூட்டத்தை எப்படி வாக்குகளாக மாற்றப் போகிறீர்கள்?
தவெகவுக்கு வருவது கூட்டப்பட்ட கூட்டம் அல்ல. விஜய்யைப் பார்க்க வெயிலைப் பொருள்படுத்தாமல் தானாகச் சேர்ந்த கூட்டம். அதில் ஒவ்வொருவரும் குறைந்தது 100 வாக்காளர்களை அழைத்து வருவார்கள். விஜய்க்கு வரும் வாக்குகள் அனைத்துக் கட்சிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இளைஞர்கள், பெண்கள் மட்டுமன்றி, வயதானவர்களின் வாக்குகளும் தவெகவுக்கு கிடைக்கும் வகையில் அரசியல் களம் மாறியிருக்கிறது.
தமிழகத்தில் வெற்றி பெற "மெகா கூட்டணி' தேவைப்படுகிறது என்பதை தேர்தல் வரலாறு காட்டுகிறது. தவெக தனித்துப் போட்டியிட்டு சாதிக்க முடியுமா?
அதிமுகவை தொடங்கி, 1977-இல் எம்ஜிஆர் மெகா கூட்டணியை அமைக்காமல்தான் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தார். அதேபோல், மாற்றத்தை விரும்பும் மக்களின் ஆதரவில் தவெக ஆட்சி அமைக்கும். நாங்கள் கூட்டணி அமைத்தால் மக்களுக்குச் செய்யும் துரோகம்.
திமுகவுக்கும் தவெகவுக்கும்தான் போட்டி எனக் கூறுவது அதிமுக கூட்டணிக்கு சாதகமாக அமைந்துவிடாதா?
அதிமுகவின் முக்கிய முடிவுகளை பாஜகதான் எடுத்து வருகிறது. பாஜகவை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள் என்பதால் அதிமுக தேர்தல் களத்தில் இல்லை, திமுக - தவெகவுக்குதான் நேரடிப் போட்டி என தலைவர் விஜய் களநிலவரத்தை பிரதிபலிக்கிறார்.
தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை தவெக எதிர்ப்பது ஏன்?
மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய தென் மாநிலங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி மறுசீரமைப்பு. தற்போதுள்ள எம்.பி.க்களின் எண்ணிக்கையே போதுமானது. எம்.பி.க்களின் எண்ணிக்கையை அதிகரிக்காமல் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி நாடு முழுவதும் மக்கள் பணியைச் செய்ய முடியும். 543 எம்.பி.க்களுக்கு ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் பேச நேரம் கிடைப்பதில்லை. வட மாநில எம்.பி.க்களின் எண்ணிக்கையை அதிகரித்துவிட்டு, அவர்களை வைத்தே ஆட்சியைப் பிடிக்க பாஜக திட்டமிடுகிறது. ஆகையால், தலைவர் விஜய் இதை எதிர்க்கிறார்.
கூட்டணி ஆட்சி அமைந்தால் யாருடன் கூட்டணி அமைப்பீர்கள்?
தவெக தனித்து ஆட்சி அமைக்கும். கூட்டணி குறித்த கேள்வியே எழவில்லை.
தவெகவின் கொள்கைகளை வகுத்துள்ள நீங்கள் மக்களிடம் முன்வைக்கும் மூன்று முக்கியக் கொள்கைகள் எவை?
மதச்சார்பின்மை, சமூக நீதி, மாநில உரிமைகள்.
திமுகவும் இதே கொள்கைகளைத்தானே வலியுறுத்துகிறது?
திமுகவின் கொள்கைகளுக்கும், எங்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. அண்ணா காலத்தில் கொள்கைப் பிடிப்புடன் இருந்த திமுக தற்போது ஊழல் கறை படிந்துள்ளதால், மத்திய அரசை கொள்கைப் பிடிப்புடன் எதிர்க்க முடியவில்லை. விஜய்யால் மட்டுமே இது முடியும்.
தவெக தொண்டர்கள் அரசியல் புரிதல் இல்லாமல் இருப்பதாக அரசியல் கட்சியினர் குற்றஞ்சாட்டுகின்றனரே?
குடும்ப அரசியல் பின்புலம் இல்லாமல் துணிச்சலுடன் அரசியலுக்கு விஜய் வந்திருப்பதுதான் இதற்கு காரணம். திமுக அரசின் தவறுகளைத் தெரிந்து கொள்ளும் அரசியல் புரிதலுடன்தான் தவெக தொண்டர்கள் உள்ளனர். விஜய் மீதான அதீத அன்புடன் அவர்கள் இருப்பதை புரிதல் இல்லை என்று கூறமுடியாது.
பரபரப்பான தேர்தல் களத்தில் கட்சித் தலைவர் விஜய் அவ்வப்போது பிரசார விடுப்பு எடுப்பது வாக்குகளைப் பாதிக்காதா?
பிரசாரத்துக்கான அனுமதி கடைசி நேரத்தில்தான் கிடைக்கிறது. போதிய காவலர்கள் கொடுக்கப்படாததால் இதுபோன்று நிகழ்கிறது. கரூர் துயர சம்பவத்துக்கு பிறகு மக்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
கரூர் துயர சம்பவத்துக்குப் பிறகு கூட்ட மேலாண்மையில் தவெக பாடம் கற்றுக் கொண்டதா, இரவு நேர பிரசாரத்தை விஜய் ஏன் நடத்துவதில்லை?
கரூர் துயர சம்பவத்துக்கு தவெக காரணம் அல்ல. திமுகவின் திட்டமிட்ட சதியும், காவல் துறையின் மெத்தனப்போக்கும்தான் அந்த சம்பவம் நிகழ காரணம். அப்படி இருக்கும்போது இரவு நேர கூட்டங்களில் தலைவர் விஜய் கலந்துகொண்டால், அந்தக் கூட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவும் அபாயம் உள்ளது. அதனால்தான் அதைத் தவிர்க்கிறார்.
ஜனநாயகன் திரைப்படத்தை அரசியல் ஆதாயத்துக்காக விஜய் எடுத்து, அவரே வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறதே?
கரூர் சம்பவத்தின்போது திரைப்படம் எடுக்கப்பட்டதாக கீழ்த்தரமான அரசியல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதைப்போல் இந்தக் குற்றச்சாட்டும் பொய்யானது. விஜய் உயிராக நேசித்த திரைப்படத் துறையில் தனது கடைசிப் பட வெளியீட்டை அவர் ஆர்வத்துடன் எதிர்பார்த்தார். அப்படி இருக்கும்போது திருட்டுத்தனமாக அதை வெளியிட வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை.
வளர்ச்சி தொடர திமுகவும், மாற்றத்துக்காக அதிமுகவும் வாக்குகளைக் கேட்பதுபோல், தவெக எதை முன்வைத்து வாக்குகளைக் கேட்கிறது?
உண்மையான வளர்ச்சியையும், உண்மையான மாற்றத்தையும் தவெகவால் மட்டுமே அளிக்க முடியும்.
நேர்காணல்: அ.சர்ப்ராஸ்