26.5.1976: புது அரசியல் கட்சி அமைப்பு: ஜெயபிரகாஷ் அறிவிப்பு
புது அரசியல் கட்சி தொடங்குவது குறித்து ஜெயபிரகாஷ் அறிவிப்பு...
பம்பாய், மே. 25 - பழைய காங்கிரஸ், பாரதீய லோக்தளம், ஜனசங்கம், சோஷலிஸ்ட் கட்சி ஆகிய நான்கும் அடங்கிய புது அரசியல் கட்சி ஒன்றை தாம் துவக்குவதாக ஜெயப்பிரகாஷ் நாராயண் இன்று தெரிவித்தார்.
இங்கு நிருபர்கள் கூட்டமொன்றில் அவர் பேசுகையில் ஜனநாயக தேசிய மாற்றுக் கட்சியாக தாம் துவக்கும் புது கட்சிக்கு லோக் சபையில் 50 மெம்பர்களும், ராஜ்ய சபையில் 30 மெம்பர்களும், சில சுயேச்சை மெம்பர்களும் உள்ளதாகக் குறிப்பிட்டார்.
நான்கு கட்சிகளின் ஆயத்தக் கமிட்டி கன்வீனர் என். ஜி. கோரே பேசுகையில், நான்கு கட்சிகளும் ஜூன் கடைசி வாரத்தில், பம்பாயில் இணைப்பை சம்பிரதாய பூர்வமாக அங்கீகரிக்கும் என்றும், புது கட்சியின் பெயர், செயல் திட்டம், அமைப்பு விதிகள் ஆகியவற்றை அவை தீர்மானிக்கும் என்றும் கூறினார்.
Advertisement
Advertisement
பல கட்சிகள் இருப்பதால் இந்திய ஜனநாயகத்துக்குப் பாதகம் ஏற்பட்டிருப்பதாகவும், கட்சிகளின் எண்ணிக்கையை குறைப்பதன் மூலமே இப்பிரச்னைக்குத் தீர்வு காண முடியும் என்றும் ஜெயபிரகாஷ் நாராயண் கூறினார். ஒரே நோக்குடைய கட்சிகளை ஒன்றுபடச் செய்வதே சிறந்த மாற்றுவழியாகும் என்றும். சாத்தியமானால் ஒன்றுபட்டு ஒரே கட்சியை அமைக்குமாறு அவற்றைத் தூண்ட வேண்டும் என்றும் அவர் சொன்னார்.
இம்முயற்சியல் தாங்கள் ஓரளவு வெற்றி பெற்றுள்ளதாக ஜெயப்பிரகாஷ் குறிப்பிட்டார்.
முகம்மது அலி மீண்டும் உலக சாம்பியன்
மூனிக், மே. 25 - சொன்னபடி செய்து காட்டி, மீண்டும் சாம்பியன்ஷிப் பட்டத்தைத் தட்டிக் கொண்டுவிட்டார் முகம்மதலி.
"ரிச்சர்ட் டுன் ரொம்பப் பேசுகிறார்; நான் வயதானவனாம், மந்தமானவனாம்; பருமனானவனாம்; என்னைக் கவிழ்க்க இதுவே தருணமாம்; பார்த்துக்கொண்டேயிருங்கள்; அந்த ரிச்சர்டை அயர வைத்துக் காட்டுகிறேன்"
இப்படிச் சவால்விட்டார் முகம்மது அலி; இன்று அதை அப்படியே நிரூபித்துக் காட்டி விட்டார்.
இங்கு, மேற்கு ஜெர்மனி மூனிக் நகரில் பிரிட்டிஷ் வீரர் ரிச்சர்ட் டுன்னை, ஐந்தாவது ரவுண்டிலேயே அயரவைத்து முகம்மதலி தமது "உலக ஹெவி வெயிட் குத்துச் சண்டை சாம்பியன்" பந்தயத்தை மீண்டும் நிலைப்படுத்திக் கொண்டார்.
முகம்மது அலி தனது ஆதிக்கத்தை இழந்து வருகிறார் என்று விமரிசித்து வந்தவர்களை இந்த வெற்றியின் மூலமாக அவர் வாயடைக்க வைத்து விட்டார். ...
May 26, 1976: Formation of a New Political Party: Jayaprakash Announces
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.