18.11.1976: வாயு மண்டலத்தில் சீனா அணு குண்டு சோதனை
அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.
பம்பாய், நவ. 17 - சீனா இன்று ஓர் அணுகுண்டை வெடித்துச் சோதனை செய்தது.
சீனாவில் "லாப்-தார்" மலைத் தொடருக்கு மேலே, வாயுமண்டலத்தில், இந்திய நேரப்படி புதன்கிழமை பகல் 11-30 மணிக்கு இந்த அணுவெடி சோதனை நடத்தது.
Advertisement
Advertisement
அந்த அணுகுண்டின் சக்தி சுமார் 2 முதல் 3 மெகா டன் டி.எம்.டி வெடி மருந்து திறனைக் கொண்டதாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அணுவெடிச் சோதனையின் அதிர்வுகளை பம்பாயில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி நிலையத்தின் எல்லாப் பதிவு நிலையங்களும் பதிவு செய்துள்ளன.
பத்து பைசாவுக்கு 1.25 ஏகரா நிலம் ஏலம்
கோழிக்கோடு நவ. 16 - ஒண்ணேகால் ஏகரா நிலம் பத்தே பைசாவுக்கு ஏலத்தில் விடப்பட்டதென்றால் யாரும் நம்ப மாட்டார்கள். ஒண்ணே கால் அடி நிலம் கூட அந்த விலைக்குக்கிடைக்காதே என்று தான் நினைப்பார்கள்.
ஆனால் இந்த அதிசய ஏலம் ஒன்று கேரளாவில் நடந்திருக்கிறது.
கோழிக்கோடு ஜில்லாவில், ஒலவிண்ணா என்று ஒரு கிராமம் இருக்கிறது. அங்குள்ள ஒரு விவசாயி ரூ. 13,300 விவசாய வருமான வரி கட்டவேண்டியிருந்தது. அதை வசூலிப்பதற்காக அந்த விவசாயியின் நிலம் ஏலத்தில் விடப்பட்டது.
அந்த நிலத்தை ஏலம் கேட்க யாரும் முன்வரவில்லை. எனவே சர்க்கார் சார்பில் தாசில்தாரே அதை ஏலத்திற்கு எடுத்தார். ஏலத் தொகை பத்து பைசாதான். விவசாய வருமான வரி பாக்கியையும், ஏலத்திற்கு செலவான தொகையையும் பத்து நாட்களில் செலுத்தாவிட்டால், சர்க்கார் அந்த நிலத்தை வசப்படுத்திக் கொண்டு, விவசாயியை வெளியேற்றி விடுவார்களென்று கலெக்டர் அறிவித்துள்ளார்.