21.11.1976: மதுரையில் விஷ விதை சாப்பிட்ட 60 மாணவிகள் ஆஸ்பத்திரியில் அனுமதி
அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.

மதுரை, நவ. 30 - விஷவிதை சாப்பிட்டதாக கூறப்படும் சுமார் 60 மாணவிகள் இங்கு அரசினர் எர்ஸ்கின் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
பிரதமர் பிறந்த தின விழாவுக்கான நிகழ்ச்சிகள் ஒத்திகைக்காக சுமார் 1000 மாணவிகள் தமுக்கம் மைதானத்துக்கு சென்றிருந்தனராம். அங்கு பல மாணவிகள் விஷ விதைகளை சாப்பிட்டதாக கூறப்படுகிறது. உடனே அம்மாணவிகள் வாந்தி எடுக்க ஆரம்பித்தனர். அவ்வாறு பாதிக்கப்பட்ட சுமார் 60 மாணவிகள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இவர்கள் நிலைமை அபாயகரமாக இல்லை என்று கூறப்படுகிறது.
அரசு அலுவலகங்களில் ஆட்குறைப்பால் வேலை இழந்தோரை மீண்டும் நியமிக்க ஏற்பாடு
திருச்சி. நவ. 20 - சிவில் சப்ளை இலாகாவில் சோதனை சாவடிகள் ஒழிக்கப்படவும், நில ஆர்ஜித இலாகா, தேர்தல் இலாகா, நகர்ப்புற நில வரி இலாகா முதலிய இலாகாக்களில் ஊழியர்கள் எடுக்கப்பட்டதையும் தொடர்ந்து அரசாங்க இலாகாக்களிலிருந்து ஆட்குறைப்பு செய்யப்பட்ட ஊழியர்கள் பற்றிய விவரங்களை திரட்டவும், அவர்களுக்கு அரசு நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளை கண்டுபிடிக்கவும் பிரிவை மீண்டும் செயல்படுத்த தமிழ்நாடு அரசு நேற்று உத்தரவு பிறப்பித்தது.
Advertisement
Advertisement
தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் மூலம் எடுக்கப்பட்டவர்களால் பூர்த்தி செய்யப்படும் காலி உத்தியோகங்கள் நீங்கலாக இதர தற்போதைய காலி உத்தியோகங்கள், வருங்காலத்தில் காலியாகக்கூடிய உத்தியோகங்கள் அனைத்தையும் ஜில்லா கலெக்டர் நிர்வகித்து வரும் பட்டியல்களிலிருந்து அவர்களால் தரப்படும் பெயர்களைக் கொண்டு மட்டுமே பூர்த்தி செய்யவேண்டும் என்று இலாகாக்களின் தலைமை அதிகாரிகள், அரசு நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள், ஜில்லா அரசு அலுவலங்களின் தலைமை அதிகாரிகள், பிராந்திய அரசு அலுவலகங்களின் தலைமை அதிகாரிகள், மற்றும் உத்தியோகங்களுக்கு ஆட்களை நியமிக்கும் அல்லது கோரும் அதிகாரிகளுக்கு அரசாங்கம் உத்தரவிட்டிருக்கிறது. அவர்கள் சம்பந்தப்பட்ட ஜில்லா கலெக்டர்களை அணுக வேண்டும்.
பல்வேறு அரசாங்க இலாகாக்களிலிருந்து ஆட்குறைப்பு செய்யப்பட்டவர்களின் விவரங்களை திரட்டி, அரசாங்க நிறுவனங்களில் அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை கண்டுபிடிக்க இவ்வாண்டு பிப்ரவரி மாதத்தில் ஒரு பிரிவு முதலில் அமைக்கப்பட்டது.
சிவில் சப்ளை இலாகா, மற்றும் பல்வேறு இதர இலாகாக்களில் ஆட்குறைப்பு செய்யப்பட்டதை யொட்டி, அந்தப் பிரிவு செயல்படுவதை நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டது. அந்தப் பிரிவை மீண்டும் இயங்கச் செய்ய அரசாங்கம் முடிவு செய்திருக்கிறது. அந்தப் பிரிவு உடனடியாக செயல்படும். ...