8.10.1976: இந்தூரில் 72 சாராய சாவுகள் - 56 பேர் உயிரை காப்பாற்ற முயற்சி
அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.
இந்தூர், (ம.பி.) அக்.7 - நாட்டுச் சாராயம் குடித்ததன் விளைவாக 72 நபர்கள் இன்று இங்குள்ள மகாராஜா யஷ்வந்த் ராவ் ஆஸ்பத்திரியில் மாண்டனர்.
நேற்று நள்ளிரவிலிருந்து இன்று மாலை வரை மொத்தம் 128 நபர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் இன்றிரவு நிருபர்களிடம் தெரிவித்தார். மீதமுள்ள 56 பேரின் உயிரைக் காப்பாற்ற தீவிரமுயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.
தடுப்பு நடவடிக்கையாக 30 நபர்களைப் போலீஸார் கைது செய்தனர். இச்சம்பவத்தையொட்டி மிஸாவின் கீழ் 10 பேர் கைது செய்யப்பட்டனர் என்று அதிகாரி கூறினார்.
Advertisement
Advertisement
இச்சம்பவம் குறித்து நீதி விசாரணைக்கு ம.பி. சர்க்கார் ஏற்கனவே உத்தரவிட்டிருக்கிறது.
கள்ளச்சாராயத்தை குடித்ததால் இத்தனை சாவுகள் ஏற்பட்டதாக இதுவரை நடத்திய விசாரணைகளிலிருந்து தெரிகிறது என்று போபாலில் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வமான செய்திக் குறிப்பு கூறியது. கள்ளச் சாராயம் எங்கிருந்து கிடைத்தது என்பது பற்றி புலன்விசாரணை நடக்கிறது. இந்தூர் நகருக்கு எவ்வாறு வந்தது என்பது பற்றியும் விசாரிக்கப்படுகிறது.
சாராயத்தை அருந்தியதால், இறந்த அல்லது பாதிக்கப்பட்ட நபர்கள் நகரின் ஒரு குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்தவர்கள் அல்ல என்று அதிகாரப்பூர்வ தகவல் கூறியது. அவர்கள் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள். அவர்களில் பெரும்பாலோர் குடிசைவாசிகள். அவர்களில் சிலருக்கு தனிப்பட்ட விற்பனையாளரிடமிருந்து சாராயம் கிடைத்தாகவும் விசாரணையில் தெரியவந்தது.
மதுவிலக்கு குற்றங்கள்: 15 போலீஸார் சஸ்பெண்டு - 100 பேருக்கு கட்டாய ஓய்வு
மதுரை, அக். 7 - மதுவிலக்குக் கமிட்டி இன்று மதுரை ராமநாதபுரம் ஜில்லாக்களைச் சேர்ந்த அதிகாரிகள், இதரர்கள் சாட்சியத்தைப் பதிவு செய்தது.
12 பெண்கள், சில முன்னாள் கைதிகள் உட்பட சுமார் 100 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.
கமிட்டிக் காரியதரிசி ஹர்பான்ஸ் சிங் பின்னர் நிருபர்களிடையே பேசுகையில் மது விலக்கை அகில இந்திய அடிப்படையில் அமல் நடத்தினாலன்றி ஒரு மாநிலத்தில் மட்டும் அமலாக்குவது வெற்றி தராது என்று பொது கருத்து நிலவியதாகக் குறிப்பிட்டார்.
தமிழ்நாடு சம்பந்தப்பட்ட வரை, சுற்றிலும் மதுவிலக்கு அமலில் இல்லாத மாநிலங்கள் இருப்பதும், கள்ளச் சாராயம் மட்டுமின்றி, சகலவித மதுபானங்களும் பெருமளவில் கடத்தப்படுவதாகவும் சாட்சிகளால் சுட் டிக் காட்டப்பட்டதாக சிங் கூறினார்.
அரசியல் சட்டத்தைத் திருத்தியாவது மதுவிலக்கை மத்திய சர்க்கார் ஜாபிதாவில் சேர்க்க வேண்டும் என்றும், நாடு முழுவதும் மதுவிலக்கு அமலில் மத்திய சர்க்கார் முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டதாக அவர் சொன்னார். ...
நெல்லையில்
மதுவிலக்கு குற்றங்கள் ச் பந்தமாக சமீப மாதங்களில் 15 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் என்றும், மற்றும் 100 பேர் கட்டாய ஓய்வு பெறச் செய்யப்பட்டனர் என்றும் உயர் அதிகாரி மது விலக்கு கமிட்டி மெம்பரான ஹர்பன்ஸ் சிங் திருநெல்வேலியில் நேற்று தெரிவித்தார். ...
72 deaths due to illicit liquor in Indore – efforts underway to save 56 lives.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.