FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

15.10.1976: பொலிவியாவில் தெருவில் விமானம் விழுந்து நொறுங்கி 100 நபர்கள் சாவு

அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.

14 அக்டோபர் 2026, 1:55 pm IST
15.10.1976 - Dinamani
பகிர்:

வாபாஸ் (பொலிவியா), அக். 14 - போயிங் 707 சரக்கு விமானமொன்று நேற்று கிழக்கு பொலிவியாவிலுள்ள சாண்டாகிரஸ் நகரில் விழுந்து நொறுங்கியது. தொழிற்சாலை, பள்ளி விளையாட்டு மைதானம் மீது விழுந்து நொறுங்கியதாகவும் சுமார் 100 நபர்கள் உயிரிழந்ததாகவும் அமெரிக்க தூதரகம் கூறியது.

நகரின் தெரு ஒன்றில் விமானம் இறங்கியதாகவும், விளையாட்டு மைதானத்தின் சுவர்மீது மோதியதாகவும் பொலிவியா ரேடியோ நிலையம் கூறியது. இதன் விளைவாக 100-க்குமதிகமான நபர்கள் இறந்தனர். அவர்களில் பெரும்பாலோர் குழந்தைகள். பள்ளியில் அவர்கள் வகுப்புகளில் இருந்தனர் .

விமானம் நாசமடைந்தது. மூன்று விமானச் சிப்பந்திகளும் வெந்து மாண்டனர்.

Advertisement

Advertisement

நகருக்கு வெளியேயுள்ள டிராம்பில்லோ விமான நிலையத்திலிருந்து புறப்பட்டதும் விமானம் பயங்கர விபத்துக்குள்ளாகியது. நகரின் முக்கிய பாதையில் விமானம் நொறுங்கியதாகவும், எரிந்து கொண்டிருந்த இடிபாடுகள் எல்லாப் பக்கங்களிலும் விழுந்ததாகவும், பள்ளிக் குழந்தைகள் இவற்றால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாகவும் ராய்ட்டர் தகவல் கூறியது.

இடிபாடுகள் ஒரு பிரைமரி பள்ளியையும், கடை ஒன்றையும், நீச்சல் குளத்தையும் தாக்கியது. விமானத்தின் முக்கிய பாகம் கால்பந்து மைதானத்தில் விழுந்தது. கால்பந்து விளையாடிக்கொண்டிருந்த அநேக இளைஞர்கள் உயிரிழந்தனர் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

தொழில் நிறுவன பாதுகாப்பு படை - தமிழ் நாடு அரசு ஏற்பாடு

சென்னை, அக் 14 - மத்திய அரசினர் அமைத்துள்ள தொழில் நிறுவனங்கள் பாதுகாப்புப் படையைப் போல, தமிழ்நாட்டில் மாநில அளவில் தொழில் நிறுவனங்கள் பாதுகாப்புப்படை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கான விவரங்கள், திட்ட நடைமுறைகளை தொழில் நிறுவனங்கள் பாதுகாப்புப்படை துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஏ. முருகேசன் வகுத்து வருகிறார்.

மாநில அரசுதுறையில் டான்சி, மண்பாண்ட உற்பத்தி, தமிழ்நாடு கைவினைப் பொருட்கள் உற்பத்திக் கழகம் போன்ற பல அமைப்புகள் உள்ளன. தற்போது இவற்றிற்கு காவலாளிகள் என்ற பெயரில் தனியார்கள் பலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த கார்ப்பரேஷன்களில் உற்பத்திப் பண்டங்கள், மூலப் பொருள்கள் ஆகியவை களவு போவது, கள்ளத்தனமாக கடத்தப்படுவது முதலியவற்றை அறவே தடுக்கும் நோக்கத்துடன் தொழில் நிறுவனங்கள் பாதுகாப்புப் படை நிறுவப்படுகிறது.

தற்போது இந்த கார்ப்பரேஷன்களில் காவலாளிகளாகப் பணியாற்றும் திடகாத்திரமுள்ள தொழிலாளர்களை நிர்ணயிக்கப்படும் வயது வரம்புக்கு உட்பட்டு இந்த தொழில் நிறுவன பாதுகாப்புப் படையில் பணியில் அமர்த்திக் கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. ...

summary

15.10.1976: Plane crashes onto a street in Bolivia; 100 people killed.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments