பள்ளிச் சிறார்களிடையே அதிகரிக்கும் நீரிழிவுக்கு முந்தைய நிலை? பெற்றோர்களே எச்சரிக்கை!
சென்னையில் உள்ள பள்ளிச் சிறார்களிடையே அதிகரிக்கும் நீரிழிவுக்கு முந்தைய நிலை பற்றிய தகவல்..
பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே நடத்தப்பட்ட நீரிழிவு மருத்துவ சோதனையில் நான்கு மாணவர்களில் ஒருவருக்கு நீரிழிவுக்கு முந்தைய நிலை இருக்கிறது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது.
பள்ளி மாணவர்களுக்கு சாப்பிடுவதற்கு முன்பு எடுக்கப்பட்ட ரத்த குளுக்கோஸ் பரிசோதனை முடிவுகள் வெளியாகி பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அதாவது, 17 ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்றதொரு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டதில் வெளியான தரவுகளுடன் ஒப்பிடுகையில், தற்போது பள்ளி மாணவர்கள் அதிகம் பேருக்கு இந்த நிலை இருப்பதாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
அதன்படி, மாணவிகளுக்கு 3.1 சதவிகிதமாக இருந்த பாதிப்பு தற்போது 28.1 சதவிகிதமாகவும் மாணவர்களக்கு 3.5 சதவிகிதத்திலிருந்து 26.4 சதவிகிதமாகவும் அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது.
டயபடீஸ் அன்ட் மெடபாலிக் சின்ட்ரோம் : கிளினிகல் ரிசர்ச் அன்ட் ரிவ்யூ என்ற மருத்துவ இதழில் வெளியான ஆய்வுக் கட்டுரை இந்த அதிர்ச்சித் தகவலை சுமந்து வந்துள்ளது.
கடந்த 2006ஆம் ஆண்டு 1000 பள்ளி மாணவர்கள் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டனர். 2023ஆம் ஆண்டில் 12 - 19 வயதுக்குள்பட்ட 954 மாணவர்களிடம் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் சென்னையில் உள்ள தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளில் பயில்பவர்கள். இவர்கள் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.
இம்பேர்ட்டு ஃபாஸ்டிங் குளுக்கோஸ் சோதனை என்பது, அதிக நேரம் உணவு இல்லாமல் இருக்கும்போது ரத்தத்தில் சர்க்கரை அளவை சோதிப்பதாகும். இந்த சோதனையில், நீரிழிவு இருக்கிறது என்று சொல்லும் அளவுக்கு ரத்தத்தில் சர்க்கரை இருக்காது, ஆனால், இயல்பான அளவைக் காட்டிலும் சற்று கூடுதலாக இருக்கும், இதுவே, நீரிழிவுக்கு முந்தைய நிலை என்பபடுகிறது.
இந்த ஆய்வில், கடந்த 2006ஆம் ஆண்டு எடுத்த சோதனையில், மாணவர்களின் சராசரி வயது 15 ஆக இருந்த நிலையில், இது தற்போது 14 ஆகக் குறைந்துள்ளது.
இதன்படி, நான்கில் ஒரு பள்ளிச் சிறாருக்கு, நீரிழிவுக்கு முந்தைய நிலை இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது கவலையளிக்கும் நிலை என்றும், மனித உடலில் இயங்கும் மெடபாலிக் எனப்படும் உடல் இயக்க சக்கரத்தின் மாறுபாடே இதற்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது.
இதனுடன், மாணவர்களிடையே அதிக உடல் எடை, தொப்பை போன்ற பிரச்னைகள் காணப்படுவதும் சுகாதாரத் துறைக்கு மேலும் கவலையை அதிகரித்துள்ளது.
மாணவர்கள் எந்தவிதமான உணவு சாப்பிடுகிறார்கள், எவ்வளவு உற்சாகமாக இருக்கிறார்கள் என்பது போன்ற விவரங்கள் திரட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே, இந்தியாவில் நீரிழிவு நோயாளிகள் அதிகரித்து வரும் நிலையில், பள்ளி மாணவர்களிடையே காணப்படும் இந்த அறிகுறி, எதிர்கால தலைமுறையினருக்கும் இந்த பாதிப்பு மோசமாகும் என்பதை எச்சரிப்பதாக உள்ளது. எனவே, இப்போதே மக்கள் விழித்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகறிது.
Rising pre diabetes among school children Parents, take heed
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.