இலங்கை செம்மணி மனித புதைகுழி: உலகளவில் கவனத்தை ஈர்த்த பள்ளி சிறுவன்!
இலங்கை செம்மணி மனித புதைகுழி விவகாரத்திற்கு நீதி கேட்டு பள்ளி நிகழ்வில், பதாகையுடன் வேடமணிந்து வந்த சிறுவன் பற்றி...
இலங்கை செம்மணி புதைகுழி விவகாரத்தை நினைவூட்டும் வகையில் பள்ளி நிகழ்வில் சிறுவன் ஏந்திய பதாகை, உலக மக்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.
விடுதலைப் புலிகளுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையே போர் உச்சக்கட்டத்திலிருந்த 1990-களிலேயே செம்மணி மனித புதைகுழி விவகாரம் முதன்முதலில் வெளிச்சத்திற்கு வந்தது.
1996ல் யாழ்ப்பாணத்தில் பள்ளி மாணவி கிரிசாந்தி குமாரசுவாமி உள்பட அவரது குடும்பத்தினர், இலங்கை ராணுவத்தினரால் கொல்லப்பட்டு செம்மணியில் புதைக்கப்பட்டபோது அதில் குற்றவாளியான, மரண தண்டனை விதிக்கப்பட்ட சோமரத்ன ராஜபக்ச, செம்மணியில் 300 முதல் 400 உடல்கள் புதைக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்தார். இதன்பின்னரே அங்கு 1998-இல் தோண்டப்பட்டதில் முதலில் 15 எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன.
Advertisement
Advertisement
தொடர்ந்து பல்வேறு காலகட்டத்தில் நடைபெற்ற அகழாய்வு பணியில் இதுவரை 500 -க்கும் மேற்பட்ட எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. இதில் சிறுவர்கள், குழந்தைகள் மட்டுமின்றி ஆடையில்லாமல் மனிதர்கள் கொடூரமாக கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவை போர்க் காலகட்டத்தில் சட்டவிரோதமான முறையில் கொல்லப்பட்டவா்களுடையதாக இருக்க வாய்ப்புள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான விசாரணை அந்த நாட்டு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் வோல்கர் டர்க் இந்த இடத்தைப் பார்வையிட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்த மரணங்கள் குறித்து மரபணு ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று உலக மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் சமீபத்தில் இலங்கை யாழ்ப்பாணத்தில் செம்பியன்பற்று பகுதியில் ஒரு பள்ளியில் சிறுவர்கள் மாறுவேடப் போட்டி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஒரு சிறுவன், பிரதிபலித்த வேடமும் அவன் வைத்திருந்த பதாகையும் கவனத்தைப் பெற்றுள்ளது.
செம்மணி புதைகுழி விவகாரத்தை நினைவூட்டும் வகையில் அந்த சிறுவன், “காரணமே இல்லாமல், அம்மாவின் மார்பில் பால் அருந்திய நிலையில் என்னைப் பல ஆண்டுகளுக்கு முன்னர் புதைத்துவிட்டார்கள். எனக்கு நீதி கிடைக்குமா?” என்ற வாசகம் அடங்கிய பதாகையை ஏந்தியிருந்தான்.
'நீ யார், எதற்காக வந்திருக்கிறாய்?' என்று ஆசிரியர் கேட்டதற்கு அந்த சிறுவன், "நான் செம்மணி புதைகுழியில் இருந்து வந்திருக்கிறேன். எனக்கும் என்னைப் போன்று புதைக்கப்பட்டவர்களுக்கும் நீதி கேட்டு வந்திருக்கிறேன்" என்று கூறியுள்ளான். சிறுவனின் வார்த்தைகள் அங்கிருந்தவர்களை கலங்கச் செய்துள்ளது.
செம்மணி மனித புதைகுழி விவகாரம் இலங்கையில் மீண்டும் தீவிரமாக எழுந்துள்ள நிலையில், சிறுவனின் செயல் உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதனிடையே சிறுவனின் செயல் தொடர்பாக சிறுவனின் பெற்றோரிடம் இலங்கை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு அங்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
School boy fancy dress competition reminiscent of the srilanka Chemmani mass grave
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.