இஷ்ரத் ஜஹான் தொடர்பான கோப்பு பற்றி எனக்குத் தெரியாது
குஜராத் போலீஸாருடன் கடந்த 2004ஆம் ஆண்டில் நடைபெற்ற என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட இளம்பெண் இஷ்ரத் ஜஹான் தொடர்பான
குஜராத் போலீஸாருடன் கடந்த 2004ஆம் ஆண்டில் நடைபெற்ற என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட இளம்பெண் இஷ்ரத் ஜஹான் தொடர்பான கோப்பு தனது பார்வைக்கு வரவில்லை என்று மத்திய உள்துறை முன்னாள் அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்தார்.
மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஆட்சியின்போது, கடந்த 2012ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 2014ஆம் ஆண்டு மே மாதம் வரை உள்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர் சுஷில்குமார் ஷிண்டே.
மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் பயங்கரவாதி டேவிட் ஹெட்லி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்காலத்திலேயே இஷ்ரத் ஜஹானை பயங்கரவாதி என்று குறிப்பிட்டதாகவும், அந்தத் தகவலை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு திரித்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதை உறுதிப்படுத்தும் வகையில், ஹெட்லியிடம் கடந்த 2010ஆம் ஆண்டு விசாரணை நடத்திய என்ஐஏ குழுவில் இடம்பெற்றிருந்த லோக்வாத் பெஹேரா என்பவரும் பேட்டியளித்திருந்தார். அந்தப் பேட்டியில், "மும்பை நீதிமன்றத்தில் அண்மையில் இஷ்ரத் ஜஹான் குறித்து தெரிவித்த தகவல்களை, கடந்த 2010ஆம் ஆண்டில் தங்களிடமும் ஹெட்லி தெரிவித்தார்' எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், மும்பையில் செய்தியாளர்களை வெள்ளிக்கிழமை சந்தித்த சுஷில்குமார் ஷிண்டேயிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதில் வருமாறு:
இஷ்ரத் ஜஹான் விவகாரம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. இந்த வழக்கு தொடர்பான கோப்பு எனது பார்வைக்கு வரவில்லை. யாரும் என்னுடன் அதுதொடர்பாக பேசவில்லை. முன்னாள் என்ஐஏ அதிகாரி உள்ளிட்டோர் தெரிவித்தவை அனைத்தும் அடிப்படை முகாந்திரமில்லாதவை என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.