FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பிகாரில் முழு அடைப்பு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு: எதிர்க்கட்சிகள் முழு ஆதரவு

பிகார் மாநிலம், முசாஃபர்பூர் நகரில் உள்ள அரசு காப்பகத்தில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதையடுத்து மாநிலம் முழுவதும் வியாழக்கிழமை முழு அடைப்புக்கு இடதுசாரி கட்சிகள் அழைப்பு

Updated On : 3 ஆகஸ்ட் 2018, 1:18 am IST
பாட்னாவில் வியாழக்கிழமை நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டத்தின்போது சாலை மறியலில் ஈடுபட்ட சமாஜவாதி கட்சியினர்.
பகிர்:


பிகார் மாநிலம், முசாஃபர்பூர் நகரில் உள்ள அரசு காப்பகத்தில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதையடுத்து மாநிலம் முழுவதும் வியாழக்கிழமை முழு அடைப்புக்கு இடதுசாரி கட்சிகள் அழைப்பு விடுத்திருந்தது. இதனால் மாநிலத்தின் பல பகுதிகளிலும் வியாழக்கிழமை இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. 
இடதுசாரிகள் நடத்தும் இந்த முழு அடைப்புக்கு மாநிலத்தின் முக்கிய எதிர்க்கட்சிகளான ராஷ்ட்ரிய ஜனதா தளம்(ஆர்ஜேடி) , ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, லோக்தந்திரி ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளன.
பல இடங்களில் திறந்திருந்த கடைகளை மூடக் கோரி முழு அடைப்பு ஆதரவாளர்கள் கட்டாயப்படுத்தினர். பாட்னா பல்கலைக்கழக வளாகத்துக்கு அருகில் இருந்த பயிற்சி நிறுவனங்கள் மற்றும் புத்தகக் கடைகளை மூடக் கோரி அதன் உரிமையாளர்களை போராட்டக்காரர்கள் வற்புறுத்தினர். கிளர்ச்சியில் ஈடுபட்ட பல போராட்டர்களை போலீஸார் கைது செய்தனர்.
முழு அடைப்பு அறிவித்ததையடுத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதில் சிரமம் ஏற்படும் என்பதால் பெரும்பாலான பள்ளிகள் வியாழக்கிழமை விடுமுறை அறிவித்தன. எனினும் வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்கின.
அந்த மாநிலத்தில் ஆட்சி செய்யும் நிதீஷ் குமார் அரசுக்கு எதிராக காந்தி மைதானத்தில் போராட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினர். அங்கு போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
முசாஃபர்பூர் அரசு காப்பகத்தில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ள பிரஜேஷ் தாக்குர் வீட்டின் முன்பு போராட்டம் நடத்தினர். சேக்பூரா, தர்பங்கா, மேற்கு சம்பரான் பகுதிகளில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சேக்பூரா ரயில் நிலையத்தில், ஹெளரா-கயை விரைவு ரயிலை நிறுத்தி தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரயிலின் எஞ்ஜின் மீது ஏறி கொடி மற்றும் பதாகைகளை காண்பித்து தங்களது எதிர்ப்பை போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். போராட்டக்காரர்களுடன் போலீஸார் நடத்திய நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்பு போராட்டக்காரர்கள் ரயில் புறப்பட அனுமதித்தனர். 333ஏ தேசிய நெடுஞ்சாலை உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளிலும் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரான ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வினி யாதவ் முசாஃபர்பூர் விவகாரத்தில் பிகார் மாநில முதல்வர் நிதிஷ் குமாரை கடுமையாக சாடினார். 
இதுகுறித்து சுட்டுரையில் அவர் வெளியிட்ட பதிவில்,
முசாஃபர்பூர் விவகாரம் குறித்து, ஆளுநர் சத்ய பால் மாலிக் மறைமுகமாக முதல்வரிடம் கேள்வி எழுப்பினார். ஆனால் அதற்கு பதிலளிக்காமல் நிதிஷ் அமைதி காத்து வருகிறார். அவர் இந்த அமைதியை கலைத்து இதுகுறித்த கருத்துகளை கூற வேண்டும் ' என்று பதிவிட்டிருந்தார். முன்னதாக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களை முழு அடைப்புக்கு ஆதரவு அளிக்கக் கோரி புதன்கிழமை இரவு மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சியினர் கையில் மின்விளக்குடன் அணிவகுத்துச் சென்றனர்.
முசாஃபர்பூர் நகரில் உள்ள அரசு காப்பகத்தில் இருந்த 30 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில் 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தற்போது சிபிஐ வசம் வழக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments