FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

செங்கோட்டையில் சிதறிக் கிடந்த குடிநீர் காலி பாட்டில்கள், வாழைப் பழத் தோல்கள்!

சுதந்திர தின விழா நடைபெற்ற தில்லி செங்கோட்டை வளாகத்தில் பார்வையாளர்கள் பயன்படுத்திய குடிநீர் காலி பாட்டில்கள், வாழைப்பழத் தோல்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. 

30 ஜனவரி 2024, 10:01 pm IST
பகிர்:

சுதந்திர தின விழா நடைபெற்ற தில்லி செங்கோட்டை வளாகத்தில் பார்வையாளர்கள் பயன்படுத்திய குடிநீர் காலி பாட்டில்கள், வாழைப்பழத் தோல்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. 

நாட்டின் 72-ஆவது சுதந்திர தின விழா நிகழ்ச்சி வரலாற்றுச் சிறப்புமிக்க தில்லி செங்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றிவைத்து சுதந்திர தின உரையாற்றினார்.  இந்த நிகழ்வைப் பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கானோர் செங்கோட்டைக்கு வருகை தந்திருந்தனர். 

மேலும், அமைச்சர்கள், வெளிநாட்டுப் பிரதிநிதிகள், முக்கிய பிரமுகர்கள் பலரும் வந்திருந்தனர்.  பல்வேறு பள்ளிகள், கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.  பிரதமர் உரையாற்றிவிட்டுச் சென்ற பிறகு, பொதுமக்களும், குழந்தைகளும் அமர்ந்திருந்த பகுதியில் ஏராளமான பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் பல இடங்களில் சிதறிக் கிடந்ததை காண முடிந்தது. 

Advertisement

Advertisement

17-ஆம் நூற்றாண்டு முகலாயர் காலத்தில் கட்டப்பட்ட இக்கோட்டைப் பகுதியில் குப்பைகளை அப்புறப்படுத்துவதற்கு போதிய ஏற்பாடுகளை மேற்கொள்ளாமல் இருந்ததை இது சுட்டிக்காட்டுவதாக அமைந்திருந்தது. சில நவீன முறையிலான குப்பைத் தொட்டிகளாக சில அட்டைப் பெட்டிகள் பயன்படுத்தப்பட்டன. ஆனால், அவையும் குப்பைகளால் நிரம்பி வழிந்ததால் குப்பைகளை குழந்தைகள் வீசி எறியும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். 

இந்த நிகழ்ச்சியில் மாணவர்களுடன் பங்கேற்ற ஆசிரியை நமிதா ஸ்ரீவாஸ்தவா இதுகுறித்துக் கூறுகையில் , "பிரதமர் நரேந்திர மோடி சுகாதாரம், தூய்மை குறித்து பேசியும் வலியுறுத்தியும் வருகிறார். ஆனால், இதுபோன்ற முக்கிய நிகழ்வு நடைபெறும் பகுதியில் குடிநீர் காலி பாட்டில்கள் மற்றும் குப்பைகளை அகற்ற குப்பைத் தொட்டிகள் வைப்பதற்கான போதிய ஏற்பாடுகள் செய்யப்படாமல் இருப்பது ஆச்சரியத்தை அளிப்பதாக உள்ளது' என்றார். 

மற்றொரு ஆசிரியர் ராஷ்மி குஹா கூறுகையில்,"ஒட்டுமொத்தப் பகுதியும் குப்பைக் கிடங்கு போல காணப்பட்டது. குப்பைகளை அகற்ற ஏன் ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை' என்றார். இந்நிகழ்ச்சி முடிந்ததற்குப் பிறகு மாணவர்களுக்கு வாழைப்பழம், குடிநீர் ஆகியவை வழங்கப்பட்டன. குப்பைத் தொட்டிகள் இல்லாததால் வாழைப்பழத் தோல், காலி குடிநீர் பாட்டில்கள் ஆகியவற்றை அந்ததந்த இடத்திலேயே மாணவர்கள் விட்டுச் சென்றனர்.  

பிளாஸ்டிக் மாசுவை எதிர்கொள்ளும் வகையில் வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் இருந்து ஒருமுறைப் பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிக்க அரசு முடிவு செய்துள்ளது. உலக சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியின் போது பிளாஸ்டிக் மாசுவை ஒழிக்க தனது உறுதிப்பாட்டை மீண்டும் தெரிவித்திருந்தது. 

ஐக்கிய நாடுகள் அமைப்பு தகவலின்படி, உலகம் முழுவதும் ஒவ்வொரு நிமிடமும் 10 லட்சம் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் வாங்கப்படுகின்றன. மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகத்தின் தகவலின்படி, இந்தியா நாளொன்றுக்கு சுமார் 25,940 டன் பிளாஸ்டிக்கையும், 97 ஆயிரம் டன்னுக்கும் அதிகமான திடக் கழிவையும் உற்பத்தி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments