வாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: எய்ம்ஸ் மருத்துவமனையின் புதிய அறிக்கை
முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாயியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புது தில்லி: முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாயியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு உயிர்காக்கும் கருவிகளின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றும் மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வாஜ்பாய் (93) கடந்த ஜூன் மாதம் 11ஆம் தேதி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அப்போது அவர், சிறுநீரக பாதை தொற்று, குறைந்த அளவு சிறுநீர் வெளியேறுதல், மூச்சுவிடுதலில் சிரமம் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து, அவருக்கு மருத்துவர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
Advertisement
Advertisement
இந்நிலையில், தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை தரப்பில் புதன்கிழமை இரவு வெளியிடப்பட்ட அறிவிப்பில், துரதிருஷ்டவசமாக, கடந்த 24 மணி நேரமாகவே, வாஜ்பாய் உடல்நிலை மோசமாகி வந்தது. அவரது உடல்நிலை கவலைக்கிடமாகியுள்ளது. செயற்கை சுவாசம் உள்ளிட்ட உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்களுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது' எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை இரவு 7.15 மணியளவில் நேரில் வந்தார். சுமார் 50 நிமிடங்கள் மருத்துவமனையில் இருந்த மோடி, வாஜ்பாயின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.
இன்று வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கையிலும் வாஜ்பாயியின் உடல்நிலை கவலைக்கிடமாகவே இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் பாஜக சார்பில் நடக்க இருந்த பல முக்கிய நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
வெங்கையா நாயுடு, அத்வானி, ராஜ்நாத், அமித்ஷா, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட பாஜகவின் முக்கியத் தலைவர்கள் பலரும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்து, வாஜ்பாயியின் உடல்நிலை குறித்து விசாரித்து வருகின்றனர்.
பாஜக ஆளும் உத்தரப்பிரதேசம், பிகார் உள்ளிட்ட மாநில முதல்வர்கள் பலரும் புதுதில்லி விரைந்துள்ளனர்.
வாஜ்பாயியின் இல்லம் நோக்கி செல்லும் சாலைகள் மூடப்பட்டு, பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.