எஸ்சி, எஸ்டி வகுப்பினர் இன்னொரு மாநிலத்தில் இடஒதுக்கீடு கோர முடியாது
ஒரு மாநிலத்தில் பட்டியலிடப்பட்ட எஸ்சி, எஸ்டி இனத்தவர், அவர்களது சமூகம் எஸ்சி, எஸ்டி பிரிவினராக பட்டியலிடப்படாத இன்னொரு மாநிலத்தில் இட ஒதுக்கீடு கோர முடியாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
புது தில்லி: ஒரு மாநிலத்தில் பட்டியலிடப்பட்ட எஸ்சி, எஸ்டி இனத்தவர், அவர்களது சமூகம் எஸ்சி, எஸ்டி பிரிவினராக பட்டியலிடப்படாத இன்னொரு மாநிலத்தில் இட ஒதுக்கீடு கோர முடியாது என்று உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
ஒரு மாநிலத்தில் பட்டியலிடப்பட்ட எஸ்சி, எஸ்டி பிரிவினர், அவர்களது சமூகம் எஸ்சி, எஸ்டியாக பட்டியலிடப்படாத இன்னொரு மாநிலத்தில் இட ஒதுக்கீடு கோர முடியுமா? என்று பல மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
அதையடுத்து இந்த விவகாரம், உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில், 5 பேர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என்.வி.ரமணா, ஆர். பானுமதி, எம். சந்தனகெளடர், எஸ். ஏ. நசீர் ஆகியோர் இந்த அமர்வில் இடம் பெற்றிருந்தனர்.
மனுவை விசாரித்த நீதிபதிகள், ஓர் மாநிலத்தில் இருக்கும் எஸ்சி, எஸ்டி பிரிவினர் பணிபுரிவதற்காக புலம் பெயர்ந்து வேறொரு மாநிலத்துக்கு வருகின்றனர். அவ்வாறு வந்தவர்களின் சமூகம், புலம் பெயர்ந்த மாநிலத்தின் எஸ்சி, எஸ்டி பட்டியலில் இல்லை எனில் அவர்களால் இட ஒதுக்கீடு கோர முடியாது என்று 4 நீதிபதிகள் ஒருமனதாக முடிவெடுத்தனர்.
எனினும், மத்திய அரசின் எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீடு கொள்கை தான் தில்லியில் நடைமுறையில் இருக்கிறது என்று கூறி மற்ற 4 நீதிபதிகளின் ஒருமித்த முடிவை நீதிபதி ஆர்.பானுமதி மறுத்தார்.
இறுதியாக, அரசில் சாசன அமர்வில் இருந்த நீதிபதிகள், 4:1 பெரும்பான்மையில், தில்லியைப் பொறுத்தவரை மத்திய அரசின் எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீடு கொள்கை ஏற்றுக் கொள்ளப்படும். ஆனால் மாநிலங்களில் அது ஏற்றுக் கொள்ளப் படாது என உத்தரவிட்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.