நிதி ஒதுக்குவதில் கிராமப் புறங்களுக்கு இடஒதுக்கீடு: வெங்கய்ய நாயுடு வலியுறுத்தல்
இந்தியாவில் கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் இடையேயான இடைவெளியைக் குறைக்க வேண்டும் எனவும், கிராமப் புறங்களுக்கு நிதி வழங்குவதில் இடஒதுக்கீடு முறையைப் பின்பற்ற வேண்டும் எனவும் குடியரசு
ஹைதராபாத்: இந்தியாவில் கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் இடையேயான இடைவெளியைக் குறைக்க வேண்டும் எனவும், கிராமப் புறங்களுக்கு நிதி வழங்குவதில் இடஒதுக்கீடு முறையைப் பின்பற்ற வேண்டும் எனவும் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தியுள்ளார்.
தெலங்கானா மாநிலம், ஹைதராபாதில் வியாழக்கிழமை, கிராமப்புற தொழில்முனைவோர் மாநாட்டைத் தொடக்கி வைத்து வெங்கய்யா நாயுடு பேசியதாவது:
இந்தியாவை இத்தனை ஆண்டுகள் ஆண்ட எந்த அரசும், கிராமப் புறங்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்தவில்லை. இதனால், கல்விக்காகவும், வேலைவாய்ப்புக்காகவும், மருத்துவ வசதிகளுக்காகவும் கிராமப் புறங்களிலிருந்து நகரங்களை நோக்கி மக்கள் பெருமளவில் இடம்பெயர்ந்து வருகின்றனர். கிராமப் பகுதிகளுக்கு அதிகமான நிதிகள் வழங்கவேண்டியது அவசியமாகும். மேலும், நீடித்த வளர்ச்சிக்காக இடஒதுக்கீட்டு முறையில் நிதிகளை ஒதுக்க வேண்டும். கிராமப் பகுதிகளில் நீர்ப் பாசனம், அடிப்படைக் கட்டமைப்புகள், கடன்களுக்கான வட்டிவிகிதம், காப்பீடு, கண்டுபிடிப்பு ஆகியவற்றில் திட்ட வடிவமைப்பாளர்கள், மத்திய மற்றும் மாநில அரசுகள், ஊடகங்கள் ஆகியவை கவனம் செலுத்த வேண்டும்.இதன் மூலம், கிராம மற்றும் நகரப் பகுதிகளுக்கான ஒருங்கிணைந்த வளர்ச்சியை எட்ட முடியும்.
நகர்ப்புறங்களை விட கிராமப் புறங்களிலேயே அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். கிராமப் புறப் பகுதிகளில் தொழில்முனைவோருக்கான வசதிகள் உருவாக்கித்தரப்பட்டு, அரசு அவர்களை ஊக்குவிக்க வேண்டும். புதிய தொழில்நுட்பங்களை கிராமப் பகுதிகளில் அறிமுகப்படுத்தி, தனியார் நிறுவனங்களும் கிராமப் பொருளாதாரம் மேம்பட உதவ வேண்டும் என்று வெங்கய்ய நாயுடு பேசினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.