FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கஜா புயல் பாதிப்பு: நாடாளுமன்ற நிலைக் குழுவிடம் தமிழகம் விளக்கம்

கஜா புயலால் தமிழகத்தில் ஏற்பட்ட பாதிப்பு, நிவாரண நடவடிக்கைகள், நிவாரண உதவிகள் ஆகியவை தொடர்பாக நிதி மீதான நாடாளுமன்ற நிலைக் குழுவிடம் தமிழகத்

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:


கஜா புயலால் தமிழகத்தில் ஏற்பட்ட பாதிப்பு, நிவாரண நடவடிக்கைகள், நிவாரண உதவிகள் ஆகியவை தொடர்பாக நிதி மீதான நாடாளுமன்ற நிலைக் குழுவிடம் தமிழகத் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், தமிழகத்தைச் சேர்ந்த எம்பிக்கள் புதன்கிழமை நேரில் விளக்கம் அளித்து முறையிட்டனர்.
தமிழகத்தில் நவம்பர் 16-ஆம் தேதி நள்ளிரவு கஜா புயல் கரையைக் கடந்த போது, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், ராமநாதபுரம், திருச்சி, சிவகங்கை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்கள் பலத்த காற்று, கனமழையால் பாதிப்புக்கு உள்ளாகின. 
புயல் நிவாரண நிதி கோரி தில்லியில் பிரதமர் மோடியை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி நவம்பர் 22-இல் நேரில் சந்தித்து மனு அளித்தார். இதையடுத்து, மத்தியக் குழு தமிழகத்தில் நேரில் ஆய்வு செய்தது. தமிழக அரசு ரூ.15 ஆயிரம் கோடி கோரியிருந்த நிலையில், ரூ. 300 கோடியை மத்திய அரசு அளித்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நிதி மீதான நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவர் எம். வீரப்ப மொய்லி தலைமையில் புதன்கிழமை மாலை நடைபெற்ற கூட்டத்தில், உறுப்பினர்களான முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், அதிமுகவைச் சேர்ந்த ஏ.நவநீதகிருஷ்ணன், சி.கோபாலகிருஷ்ணன், டி.ஜி.எஸ். வெங்கடேஷ்பாபு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் டி.கே. ரங்கராஜன் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக அதிமுகவைச் சேர்ந்த ஆர்.வைத்திலிங்கம், ஆர்.கே. பாரதி மோகன், பரசுராமன், எம். உதயக்குமார், கே.ஏ. செல்வராஜ், கே.ஆர். அர்ஜுனன், டி.ரத்தினவேல் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். திமுக சார்பில் திருச்சி சிவா, டி.கே.எஸ். இளங்கோவன், ஆர்.எஸ். பாரதி ஆகியோர் பங்கேற்றனர்.
தமிழக அரசின் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், வருவாய்த் துறைச் செயலர் அதுல்ய மிஸ்ரா, கூடுதல் தலைமைச் செயலர் (நிதி) கே.சண்முகம், கூடுதல் தலைமைச் செயலர் (சிஆர்ஏ) சத்யகோபால், மாவட்ட ஆட்சியர்கள் ஏ.அண்ணாதுரை (தஞ்சாவூர்), எஸ். சுரேஷ் குமார் (நாகப்பட்டினம்), தமிழ்நாடு இல்லத்தின் உறைவிட ஆணையர் என்.முருகானந்தம் ஆகியோரும் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தின் போது தமிழகத்தில் புயல் பாதிப்புக்கு முந்தைய முன்னேற்பாடுகள், புயல் வந்த பிறகு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், நிவாரண உதவிகள், நிவாரணத்தை மேற்கொள்ள தேவைப்படும் நிதி ஆகியவை குறித்து தமிழகத் தலைமைச் செயலர் செயல் விளக்கம் அளித்ததாகவும், புயல் பாதிப்பு குறித்து குழுவில் இடம் பெற்றுள்ள தமிழக உறுப்பினர்கள் மற்றும் அதிமுக, திமுக, எம்பிக்கள் சிலர் பேசியதாகக் கூறப்படுகிறது. இக்கூட்டத்தில் கேட்டறியப்பட்ட விவரங்கள், கருத்துகள் அடிப்படையில் நிலைக் குழு தனது பரிந்துரையை மத்திய அரசுக்கு அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
உள்துறை, நிதித் துறை செயலர்களுக்கு அழைப்பு
டிசம்பர் 27-ஆம் தேதி நடைபெறும் அடுத்த கூட்டத்தில் பங்கேற்குமாறு மத்திய உள்துறை, நிதித் துறை செயலர்கள், பேரிடர் மேலாண்மைத் துறையின் உயர் அதிகாரிக்கும் நிலைக் குழு மூலம் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. பேரிடர் பாதிப்புக்கு அளிக்கப்படவுள்ள நிவாரண நிதியுதவி, எதிர்காலத்தில் இதுபோன்ற பாதிப்புகளுக்கு எந்தவகையில் உதவுவது, நிதித் துறையில் மாற்றங்களை உருவாக்குவது ஆகியவை தொடர்பாக இந்தக் கூட்டத்தில் நிலைக் குழு யோசனை அளிக்கும் என தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments