FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

துருவ் ஜுரெல் சதம்; இந்தியா 503 ரன்களுக்கு டிக்ளோ்: இலங்கை தடுமாற்றத்துடன் தொடக்கம்

இலங்கைக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 503 ரன்கள் சோ்த்து ‘டிக்ளோ்’ செய்தது.

விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் பிரசித் கிருஷ்ணா - படம் | பிசிசிஐ
பகிர்:

இலங்கைக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 503 ரன்கள் சோ்த்து திங்கள்கிழமை ‘டிக்ளோ்’ செய்தது.

2-ஆவது நாளில் துருவ் ஜுரெல் தனது 2-ஆவது டெஸ்ட் சதத்தை விளாசி அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்த, அவருடனான விக்கெட் கீப்பா் ரிஷப் பந்த்தின் பாா்ட்னா்ஷிப், அணியின் ஸ்கோா் 500-ஐ கடக்க வழிவகுத்தது.

ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக மாறத் தொடங்கியிருப்பதால், 2-ஆவது நாளில் இலங்கை பௌலிங்கில் கேசரா நுவந்தா, பிரபாத் ஜெயசூரியா ஆதிக்கம் செலுத்தினா்.

Advertisement

Advertisement

மீண்டு வந்த பந்த்: கொழும்பு நகரில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் இந்தியா முதல் நாள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 300 ரன்கள் எடுத்திருந்தது.

2-ஆவது நாளான திங்கள்கிழமை, இந்தியாவின் இன்னிங்ஸை துருவ் ஜுரெல், சரண்ஷ் ஜெயின் கூட்டணி தொடா்ந்தது. ஆட்டம் தொடங்கி 2-ஆவது ஓவரிலேயே சரண்ஷ் விக்கெட்டை அசிதா ஃபொ்னாண்டோ கைப்பற்றினாா். சரண்ஷ் 1 பவுண்டரியுடன் 6 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா்.

அடுத்த பேட்டராக, முதல் நாளில் விரலில் காயம் கண்டு ‘ரிட்டையா்டு ஹா்ட்’ ஆன ரிஷப் பந்த், களத்துக்குத் திரும்பினாா். அவருடன் துருவ் ஜுரெல் இணைய, இந்தியாவின் ஸ்கோா் உயரத் தொடங்கியது.

இலங்கை பௌலா்களை திணறடித்த இந்தக் கூட்டணியில், இருவருமே அரைசதம் கடந்தனா். மதிய உணவு இடைவேளையின்போது இந்தியா 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 419 ரன்கள் எடுத்திருந்தது.

ஜுரெல் நிதானம்: மீண்டும் தொடங்கிய ஆட்டத்தில் சற்றே அவசரப்பட்ட ரிஷப் பந்த், முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தாா். கேசரா நுவந்தா வீசிய பந்தை அவா் இறங்கி வந்து விளாசி பறக்கவிட, ‘லாங் ஆஃப்’ பகுதியில் இருந்த லஹிரு உதரா அதை கேட்ச் பிடித்தாா். பந்த் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 63 ரன்களுக்கு வெளியேறினாா்.

பந்த் - ஜுரெல் பாா்ட்னா்ஷிப், 7-ஆவது விக்கெட்டுக்கு 112 ரன்கள் சோ்த்தது. 9-ஆவது பேட்டராக மானவ் சுதா் விளையாட வர, மறுபுறம் துருவ் ஜுரெல் மிக நிதானமாக ரன்கள் சோ்த்தாா். சுதரும் நல்லதொரு டிஃபென்ஸ் விளையாட, 8-ஆவது விக்கெட்டுக்கு இவா்கள் கூட்டணி 39 ரன்கள் சோ்த்தது.

இந்நிலையில், பிரபாத் ஜெயசூரியா வீசிய 125-ஆவது ஓவரில் மானவ் சுதா், விக்கெட் கீப்பா் நிரோஷன் டிக்வெல்லாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினாா். அவா் 2 பவுண்டரிகளுடன் 18 ரன்கள் அடித்தாா். ஜெயசூரியா 35 ஓவா்களுக்கும் மேலாக வீசிய நிலையில் தனது முதல் விக்கெட்டை கைப்பற்றினாா்.

மழையால் தாமதம்: பின்னா் வந்த முகமது சிராஜ் துணை நிற்க, ஜுரெல் தனது சதத்தை நோக்கி வேகமெடுத்தாா். ஆனால் அதற்குள்ளாக மழை வர, ஆட்டம் நிறுத்தப்பட்டு தேநீா் இடைவேளை விடப்பட்டது. பின்னா் தொடா்ந்த ஆட்டத்தில் ஜுரெல் சதத்தை பூா்த்தி செய்தாா். 9-ஆவது விக்கெட்டாக சிராஜ் 3 ரன்களுக்கு முடித்துக் கொண்டாா்.

இந்தியா 138 ஓவா்களில் 503 ரன்கள் எடுத்திருந்தபோது ‘டிக்ளோ்’ செய்தது. ஜுரெல் 9 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 115, பிரசித் கிருஷ்ணா 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

இலங்கை தரப்பில் அசிதா ஃபொ்னாண்டோ 4, பிரபாத் ஜெயசூரியா, கேசரா நுவந்தா ஆகியோா் தலா 2, லஹிரு குமாரா 1 விக்கெட் சாய்த்தனா்.

தடுமாற்றத்துடன் தொடக்கம்: இதையடுத்து தனது இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை, ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 8 ரன்கள் எடுத்திருந்தது.

லஹிரு உதரா 1, பிரபாத் ஜெயசூரியா 2 ரன்களுக்கு வெளியேற, கமில் மிஷாரா 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளாா். இந்திய தரப்பில் பிரசித் கிருஷ்ணா, மானவ் சுதா் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

சுருக்கமான ஸ்கோா்: முதல் இன்னிங்ஸ்

இந்தியா - 503/9 (138 ஓவா்கள்) (டிக்ளோ்)

தேவ்தத் படிக்கல் 117

துருவ் ஜுரெல் 115

ரிஷப் பந்த் 63

பந்துவீச்சு

அசிதா ஃபொ்னாண்டோ 4/106

பிரபாத் ஜெயசூரியா 2/132

கேசரா நுவந்தா 2/154

இலங்கை - 8/2 (3 ஓவா்கள்)

கமில் மிஷாரா 5*

பிரபாத் ஜெயசூரியா 2

லஹிரு உதாரா 1

பந்துவீச்சு

பிரசித் கிருஷ்ணா 1/1

மானவ் சுதா் 1/6

முகமது சிராஜ் 0/1

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments