FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ரஃபேல் விவகாரத்தில் முரண்பட்ட தீர்ப்பை திரும்ப பெற வேண்டும்: உச்சநீதிமன்றத்துக்கு காங்கிரஸ் கோரிக்கை

ரஃபேல் விவகாரம் தொடர்பான வழக்கில் வெளியிட்ட முரண்பட்ட தீர்ப்பை உச்சநீதிமன்றம் திரும்ப பெற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:


ரஃபேல் விவகாரம் தொடர்பான வழக்கில் வெளியிட்ட முரண்பட்ட தீர்ப்பை உச்சநீதிமன்றம் திரும்ப பெற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
மும்பையில் செய்தியாளர்களை புதன்கிழமை சந்தித்த அக்கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா, இவ்வாறு வலியுறுத்தினார். அவர் மேலும் கூறியதாவது:
உச்சநீதிமன்றத்தை மத்திய அரசு தவறாக வழிநடத்தியது மட்டுமல்லாமல், மத்திய அரசின் பிரமான பத்திரத்தை உச்சநீதிமன்றம் தவறாக புரிந்து கொண்டு விட்டதாக சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. உண்மையில் மத்திய அரசுதான், உச்சநீதிமன்றத்தை தவறாக வழிநடத்தியுள்ளது. அதன் நம்பகத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை சரி செய்வதற்கு, உச்சநீதிமன்றம் தனது முரண்பட்ட தீர்ப்பை திரும்ப பெற வேண்டும்.
ரஃபேல் விவகாரத்தில் வெளியிடப்பட்ட தீர்ப்புக்காக பாஜக எதற்கு கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளது? அந்த தீர்ப்பின் மூலம், உச்சநீதிமன்றத்தின் நம்பகத்தன்மை, கன்னியம் ஆகியவை பாதிக்கப்பட்டுவிட்டது. அதை மீட்டெடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பொய்யான தகவலை அளித்ததற்கு மத்திய அரசு மீது உச்சநீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ரஃபேல் விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்பதே காங்கிரஸின் நிலைப்பாடு ஆகும். இந்த விவகாரத்தில் விசாரணை கோருவதற்கு, உச்சநீதிமன்றம் சரியான களம் அல்ல. நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு மட்டுமே கோப்புகள், சாட்சிகளுக்கு சம்மன் அனுப்ப அதிகாரம் உள்ளது.
36 ரஃபேல் விமானங்களை வாங்குவதற்கு, ரிலையன்ஸ் நிறுவனத்தை உதிரி பாகங்கள் தயாரிப்புக்கு தேர்வு செய்ய வேண்டும் என இந்திய அரசு முன்நிபந்தனை விதித்ததாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹொலந்தே மீண்டும் தெரிவித்துள்ளார். ரஃபேல் ஒப்பந்தம் குறித்து பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஆகியோருக்கு முழுமையாக தெரியாது. பிரதமர் மோடிக்கு மட்டுமே அனைத்தும் தெரியும். எனவே, மோடிக்கு ஆதரவாக பேசும் நிர்மலா சீதாராமன், அருண் ஜேட்லி தெரிவிப்பதை காங்கிரஸ் கட்சி பொருட்படுத்தாது என்றார் ஆனந்த் சர்மா.
பின்னணி: ரஃபேல் ரக போர் விமானங்களை வாங்குவது தொடர்பாக பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்துடன் இந்தியா செய்து கொண்ட ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றிருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகிறது. இந்த ஒப்பந்தம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினரும் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை உச்சநீதிமன்றம் கடந்த வாரம் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பின் 25ஆவது பாராவில், ரஃபேல் விமானங்களின் விலை விவரத்தை மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியிடம் (சிஏஜி) மத்திய அரசு தெரிவித்துள்ளதாகவும், இதை ஆய்வு செய்த சிஏஜி, நாடாளுமன்ற பொது கணக்கு குழுவிடம் (பிஏசி) அறிக்கை தாக்கல் செய்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தது. ரஃபேல் ஒப்பந்தம் குறித்து மூடி முத்திரையிட்டு மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு, இந்த கருத்தை உச்சநீதிமன்றம் வெளியிட்டிருந்தது. ஆனால், நாடாளுமன்ற பொது கணக்கு குழுவிடம் அதுபோல் அறிக்கை எதுவும் சிஏஜி தாக்கல் செய்யவில்லை என்று அக்குழுவின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே (காங்கிரஸ் மூத்த தலைவர்) மறுப்பு தெரிவித்தார். இதனால் சர்ச்சை உருவானது. இதைத் தொடர்ந்து, தீர்ப்பில் சிஏஜி, பிஏசி குறித்து தெரிவித்துள்ள வாசகங்களை திருத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்தது.
இருப்பினும் உச்சநீதிமன்றத்துக்கு பொய்யான தகவலை மத்திய அரசு அளித்துள்ளது, எனவே மீண்டும் வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் மேற்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி
வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments